PUBLISHED ON : மே 27, 2016

மேற்கு மலைத் தொடரை அடுத்த குக்கிராமம் அது. அமைதி கொழிக்கும் அந்த கிராமம். திடீர் என்று ஒருநாள் பரபரப்புக்குள்ளானது.
காலையிலிருந்தே கார்களும், ஜீப்களும், லாரிகளும், வந்த வண்ணமாக இருந்தன. லாரியில் வந்த ஆட்கள் கிராமம் முழுவதும், தோரணங்கள் கட்டி... வளைவுகள் அமைத்து, வண்ண வண்ண விளக்குகளை பொருத்தி, கட்சி கொடிகளையும் தொங்கவிட்டனர்.
இந்த தடபுடல் எதற்கு என்று மக்களுக்குப் புரியவே இல்லை.
''பாட்டி! ஏதோ தேர்தலாம். அதுதான் இத்தினி அமர்க்களம்!'' வேலன் தன் பாட்டிக்கு விளக்கம் கொடுத்தான்.
பாம்பாய் சீறினாள் பாட்டி.
''அடே போடா, வேலையத்தவனே! இந்த வெளிச்சங்களையும், தோரணங்களையும் நம்பி, ஆட்டு மந்தை கணக்கா மக்கள் ஓட்டு போடுவாங்க. அத்தோடு போகிறவங்க அடுத்த தேர்தலுக்குத்தான் இந்தப் பக்கம் தலையை நீட்டுவாங்க... போங்கடா... வேலையத்தவனுங்களா...'' பாட்டியிடம் அனுபவம் பேசிற்று.
மாலையில் ஒரு பெரிய படகுக் காரில் இருந்து, தன் சகாக்கள் புடைசூழ அந்த ஜெயன் இறங்கினார்.
உடனே, கூட்டத்தினர் அவர் பெயரைச் சொல்லி, ''வாழ்க! வாழ்க!'' என்று கூக்குரல் எழுப்பினர். கிராமத்து இளையவர்களும் இந்த வேடிக்கை இரைச்சலில் கலந்து கொண்டனர்!
ஜெயன் மேடை ஏறினார். தொண்டையை சரி செய்து கொண்டார். தாய்மார்களை நன்றியோடு வணங்கினார். மூத்த சகோதரர்களுக்கு சிரம் தாழ்த்தினார். இளையவர்களுக்கு தன் அன்பு கலந்த வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு, தன் சிறிய முன்னுரையைத் தொடங்கினார்.
''இந்த மாவட்டத்துக் குழந்தை நான். ஆதலால், உங்களில் ஒருவன் நான் என்பதை எண்ணி பூரிப்படைகிறேன். பூரித்துபோகும் அதே நேரத்தில் என் நெஞ்சை துக்கம் கவ்விக்கொள்கிறது. ஏனெனில், நம் மாவட்டத்தில் மட்டுமே இந்த பாழாய்ப் போன காசநோய் தீவிரமாக பரவி இருக்கிறது.
''வெள்ளையன் ஆட்சி காலத்தின் கோலம் இது. எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து இந்த கொடிய நோயை ஒடுக்க, என் மாவட்ட மக்களை காசநோய் அரக்கனின் கோரப் பிடியிலிருந்து தப்புவிக்க ஒரு ஆஸ்பத்திரி கட்ட வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். என் பதினைந்தாவது பிறந்த நாளன்று என் தந்தை, 'உனக்கு பிறந்தநாள் பரிசாக என்ன வேண்டும்?' என்று கேட்டார். 'நிச்சயமாய்... நான் கேட்பதை மறுக்க மாட்டீர்களே' என்றேன் நான்.
'உன் ஆசை எதுவானாலும் சொல். நான் நிறைவேற்றி வைக்கிறேன்,' என்றார் அப்பா.
'அப்பா! காசநோயால் அவதியுறும் ஏழை மக்களுக்கு ஒரு ஆஸ்பத்திரி கட்டித்தர வேண்டும்,' என்றேன்.
'சரி' என்று ஒப்புக் கொண்டார். இரும்புப் பெட்டிச் சாவியை என்னிடம் கொடுத்து, 'ஜெயன்! உன் விருப்பப்படி அந்த சோலையூர் கிராமத்தில் ஆஸ்பத்திரியை கட்டி விடு... செலவைப் பற்றி அஞ்சாதே' என்றார்.
நான் பெருமைக்காக இதை இங்கே சொல்லவில்லை. இது என் வாழ்வின் மகத்தான சாதனை. இதை விட வேறு என்ன பேறு எனக்கு வேண்டும்? பெறுதற்குரிய பேறு அல்லவா இது!''
அவருக்காக அணிவகுத்து நின்ற கூட்டத்தினர் கரவொலி எழுப்பினர்.
''அடப்பாவி! கொஞ்சமும் வெட்கம் இல்லாமே இப்படி ஒரு பெரிய பொய்யை நா கூசாமே சொல்றியே! இந்த அக்கிரமத்தை தட்டிக் கேட்க ஆள் இல்லே என்கிற திமிறுதானே! நீ நல்லா இருப்பியா...'' கிழவி படபடத்தாள்.
''கிழவி! சும்மா இருக்கமாட்டே... சும்மா தொண தொணத்துக்கிட்டு,'' பின்னாலிருந்த கிருதா மீசை பார்ட்டி மங்காத்தாவை அடக்கிற்று.
'உம்... சுள்ளி பொறுக்கி, வரட்டித் தட்டி விற்கும் இந்த ஏழைக் கிழவியின் சத்தியவாக்கு எங்கே எடுபடபோகிறது' என்று மனதுக்குள் புலம்பினாள் மங்காத்தா.
நாற்பது ஆண்டுகளுக்கு முன் ஒருநாள்-
மங்காத்தா தன் குடிசையில் களி கிளறிக் கொண்டிருந்தான்.
பக்கத்து குடிசை முருகன் ஓடி வந்து, 'ஆயா! அம்மா மூச்சு விட திணறுது; நீ வந்து அம்மாகிட்ட இருந்துக்க. நான் டவுனுக்கு போய் டாக்டரை கூட்டியாந்துடறேன்' என்று கண்ணீரோடு நின்ற பாலகனை ஆதரவோடு அணைத்தவாறு, 'நான் பாத்துக்கறேன் ராசா! நீ போய் டாக்டரை கூட்டியா' என்றாள் மங்காத்தா.
டாக்டர் வந்தார். ஆனால், அவரால் அந்தச் சிறுவனின் அம்மாவுக்கு உயிர் கொடுக்க முடியவில்லை. ஒரு வருடத்துக்கு முன்பு, அவன் அப்பாவும் இதே ஆஸ்துமா நோயில்தான் போய் சேர்ந்தார்.
துடித்துப் போன சிறுவனுக்கு ஆறுதல் சொல்லி, தன்னோடு இருத்திக் கொண்டாள் மங்காத்தா.
அப்போது, முருகன் ஒரு சபதம் செய்தான்.
'ஆயா நீ வேணா பாரு, நான் நல்லா படிச்சு பெரிய டாக்டராகி, ஏழைங்களை கொல்லுகிற இந்த ஆஸ்துமா நோயை ஓட, ஓட விரட்டலே நான் முருகனில்லை' என்று சூளுரைத்தான்.
சூளுரையை நிறைவேற்றியும் விட்டான். அவனுக்கு படிப்பில் இருந்த ஆர்வம் பல உதவித் தொகையை வாங்கிக் கொடுத்தன. பல தங்கப் பதக்கங்களை வாங்கி, படித்த கல்லூரிகளுக்கு பெருமை சேர்த்து, ஒருநாள் டாக்டர் ஆனான்.
சோலையூர் கிராமத்துக்கு பக்கத்து டவுனில் தனது டாக்டர் தொழிலைத் துவங்கினான். நாளாக, நாளாக டாக்டர் முருகனைப் போன்ற ஒரு கை ராசி டாக்டர் அந்த வட்டாரத்தில் இல்லை என்று பெயர் எடுத்தார்.
ஒரு டாக்டர் என்ற முறையில் சோலையூருக்கு காசநோய் ஆஸ்பத்திரி வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, அரசாங்கத்துக்கு அவர் கடிதங்கள் எழுதியதுதான் மிச்சம். எல்லாமே கிணற்றில் போட்ட கல்லாகி விட்டது.
அதன்பிறகு, இனி அரசாங்கத்தை நம்பி பயனில்லை. தானாகவே ஆஸ்பத்திரியை கட்டிவிடவேண்டும் என்று முடிவுக்கு வந்தார் டாக்டர் முருகன்.
தனது ஆசையை இதோ இந்த மேடையில் முழங்கிக் கொண்டிருக்கும் அரசியல்வாதியிடம் அப்போது வெளியிட்ட போது, 'உங்கள் யோசனை மிகவும் வரவேற்கத்தக்கதுதான். என் பங்கிற்கு ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்து விடுகிறேன்' என்றார்.
டாக்டருக்கு ஒரே மகிழ்ச்சி. அவர் கைகளை பற்றிக்கொண்டார்.
'நன்றி சார்! உங்களைப் போல் மற்றவர்களும் ஒத்துழைத்தால், எவ்வளவோ காரியங்கள் செய்யலாம்' கண்களில் நீர்மல்க, அவரை கட்டித் தழுவினார் டாக்டர்.
'ஆனால், ஒரு கண்டிஷன்!' என்றான் ஜெயன்.
- தொடரும்...