PUBLISHED ON : பிப் 08, 2013

சென்னை மருந்துவமனை ஒன்றில், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.
அப்போது மருத்துவமனை காவலையும் மீறி, ''அண்ணே!'' என்று ஒருவர் அலறி அடித்துக்கொண்டு ஓடி வந்தார்.
''நீங்க செத்துப் போயிட்ட தாக வெளியே பேச்சு தாங்க முடியல, அதாண்ணே ஓடியாந்தேன்,'' என்று கண்ணீரை துடைத்துக் கொண்டே கூறினார்.
அவரை அருகில் அழைத்து தைரியம் கூறினார் என்.எஸ்.கே.
சிறிது நேரத்தில், அடுத்து ஒருவர் கதறிக்கொண்டு ஓடி வந்து அதே கதையைச் கூறினார்.
அவரோ வாய்விட்டுச் சிரித்தார்.
மறுநாள் சேலத்தைச் சேர்ந்த ஒரு பட முதலாளி, ''ஐயா நீங்க காலமாயிட்டதாக சேலத்திலே ஒரு பரபரப்பு! தியேட்டர்களிலெல்லாம் கறுப்புக் கொடிகட்டி நேத்து, ஆட்டத்தைக் கூட நிறுத்திட்டாங்க!,'' என்று கண்ணீர் வடித்தார்.
''ஏய் நான் சாகலேன்னா விடமாட்டான் போல இருக்கே? அவங்க திருப்திக்காகவாவது ஒரு தரம் நான் அவசியம் சாகணும்,'' என்று சிரித்துக் கொண்டே கூறினார்.
மரணப்படுக்கையிலும், நகைச்சுவையோடு பேசிய அந்த உன்னதக் கலைஞர், அதற்கு அடுத்தநாளே இறந்து போனார் என்பதுதான் வருத்தம்.
