
தென்காசி அருகே, பரங்குன்றாபுரம், டி.டி.டி.எ.துவக்கப் பள்ளியில், 1979ல், 5ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான், என் தம்பி ஜெசுகரன் தங்கராஜ். படிப்பில் மிகச் சிறந்த மாணவன் என்ற பாராட்டுடன், 'நாட்டுக்கு உழைத்த நல்லவர் காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு' என்ற புத்தகத்தை, மாவட்ட ஆட்சியரிடம் பரிசாக பெற்றான்.
இடைநிலை கல்வி பயில, சற்று துாரத்து ஊருக்கு போக வேண்டும். நடந்து போய் வருவது இயலாது. கிராமத்தில் பேருந்து வசதியும் கிடையாது. குடும்பம் வறுமையால் வாடியது. இதனால், கேள்விக்குறியானது படிப்பு.
இந்த சூழ்நிலையில், தலைமை ஆசிரியர் அருமைநாயகம் உதவ முன்வந்தார். பக்கத்து ஊரான பங்களா சுரண்டை, கே.என்.ஹெச்.பள்ளியில் சேர பரிந்துரைத்தார். அங்கு தங்கிப் படிக்க வாய்ப்பு கிடைத்தது.
ஐரோப்பிய நாடான, ஜெர்மனி தம்பதி, கார்டு ஓகல் - எலிசபெத் மேற்படிப்புக்கு உதவினர். இந்த உதவிகளால் உயர் கல்வியில் பட்டங்கள் பெற்று பன்னாட்டு நிறுவனத்தில் மேலாளராக பணியில் சேர முடிந்தது.
என் தம்பியின் வயது, 50; கல்விக்கு உதவியவர்களுக்கு, சிறுவர்மலர் இதழ் வாயிலாக நெஞ்சார்ந்த நன்றியை சமர்ப்பிக்கிறேன்.
- தேவகுமாரி ஞானபிரகாஷ், சென்னை.
தொடர்புக்கு: 94432 19439

