
திண்டுக்கல், புனிதமேரி உயர்நிலைப் பள்ளியில், 1948ல், 10ம் வகுப்பு படித்தபோது, வகுப்பு ஆசிரியராக இருந்தார் நரசிம்மராவ்.
வகுப்பில், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சவுராஷ்டிரா மொழி பேசும் மாணவர்கள் இருந்தனர்.
சனிக்கிழமைகளில், பொது அறிவை வளர்க்கும் விதமாக பயனுள்ள பாடங்களை, சுவாரசியமாக கற்றுக் கொடுப்பார். தனித்திறமையை வளர்க்கும் விதமாக ஊக்குவிப்பார்.
படித்த சிறுகதை அல்லது விடுமுறையில் ஏற்பட்ட அனுபவம் பற்றி, அவரவர் மொழியில், ஐந்து நிமிடம் பேச சொல்வார். பேசியதை உரையாக எழுத வைப்பார்.
பின், ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கச் சொல்வார். அதனால், பல மொழிகளைக் கேட்டு படிக்கும் வாய்ப்பும், தகுந்த பயிற்சியும் கிடைத்தது. சில சொற்கள், எல்லா மொழியிலும் ஒரே மாதிரி இருப்பது ஆச்சரியம் தரும்.
இதன் மூலம், 'செப்பும் மொழி பதினெட்டு உடையாள், எனிற் சிந்தனை ஒன்றுடையாள்...' என்ற மகாகவி பாரதியின் கனவை உணர முடிந்தது.
இவர் போல் சிந்தித்திருந்தால், மொழியின் பெயரால் பிரச்னை ஏற்படுத்தும் அரசியல்வாதிகள் தோன்றியிருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்காது.
சென்னை சமூக சேவை பள்ளியில் பட்டப்படிப்பு முடித்து, மன வளர்ச்சி குன்றியோருக்கு சிறப்பு ஆசிரியராக சேவைப் பணியை, 50 ஆண்டுகள் செய்தேன். மத்திய, மாநில அரசுகளின் விருதுகளையும் பெற்றேன்.
தற்போது, என் வயது, 87; அந்த ஆசிரியர் அடிக்கடிக் கூறும், 'பரோபகாரம் இதம் சரீரம்' என்ற அறிவுரையைப் பின்பற்றி, பலருக்கு உதவியுள்ளேன். இதை செய்ய உயர்த்தியவரை எண்ணி உருகாத நாள் என் வாழ்வில் இல்லை!
- பி.நாராயணன், சென்னை.
தொடர்புக்கு: 044 - 2372 3466

