
திண்டுக்கல் மாவட்டம், பழனி, நகராட்சி உயர்நிலைப் பள்ளியில், 1956ல், 7ம் வகுப்பு படித்த போது, என் தந்தை காலமாகி விட்டார். அடுத்த ஆண்டே, தாயாரும் காலமாகி விட்டார். படிப்பைத் தொடர யாருடைய ஆதரவும் இல்லை.
தொடர முடியாமல் தவித்தபோது, வகுப்பு தோழன் மாரிக்கண்ணுவின் தந்தை மாரிமுத்து விசாரித்தார். விவரம் அறிந்து மனம் உவந்து உதவ முன்வந்தார். என் உணவு, உடை, படிப்பு செலவுகளை முழுமையாக ஏற்றுக்கொண்டார்.
மனம் ஊன்றி படித்து, 1960ல், எஸ்.எஸ்.எல்.சி., தேறினேன். ஒரு நுாற்பாலையில் கண்காணிப்பாளர் பணியில் சேர்த்து விட்டார். பணியில் கவனம் வைத்து படிப்படியாக முன்னேறி மேலாளராக பதவி உயர்ந்து ஓய்வு பெற்றேன்.
இப்போது என் வயது, 75; என்னை ஆளாக்கிய அந்த தெய்வத்தை தினமும் எண்ணி, அவர் காட்டிய வழியில் ஏழை மாணவர்களுக்கு இயன்றளவு உதவி வாழ்கிறேன்.
- எம்.முத்துக்கண்ணன், பழனி.
தொடர்புக்கு: 90033 63179

