
கடலுார் மாவட்டம், திருவந்திபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில், 1960ல், 4ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். ஒருநாள், வகுப்பு துவங்கும் முன்பே வந்து, அன்று நடத்தவிருந்த தேர்வுக்கான பாடங்களை மனனம் செய்து கொண்டிருந்தேன்.
அப்போது, அருகில் வந்த தலைமையாசிரியருக்கு எழுந்து, 'வணக்கம்' கூறினேன். என் தோளை பரிவுடன் பற்றி, 'இன்று முதல், மீதம் நடக்க உள்ள மூன்று தேர்வுகளையும் நீ எழுத வேண்டாம்; அதற்கு பதிலாக, பள்ளி ஆண்டு விழாவில் நீ சாக்ரடீசாக நடிக்க வேண்டும்; அதனால், தேர்வு எழுதும் இடத்திலேயே அமர்ந்து, நாடக வசனத்தை முழுமையாக மனப்பாடம் செய்...' என்று பிரதியை கையில் கொடுத்தார்.
மெல்லவும், விழுங்கவும் முடியாமல் மனப்பாடம் செய்தேன். ஆண்டு விழாவில் சாக்ரடீசாக நடித்து திறமையை வெளிப்படுத்தினேன். அந்த மேடையில், 'எந்த துறையில் வேலைக்கு சென்றாலும் திறமையாக செயல்படுவான்...' என்று பாராட்டி பரிசு வழங்கினார் தலைமை ஆசிரியர். அவர் பாதங்களில் விழுந்து வணங்கி, கண்ணீரை காணிக்கையாக்கினேன்.
நன்றாக படித்து முடித்து, மின்வாரிய பணியில் சேர்ந்தேன். இட மாற்றங்களின் போது பணிபுரிந்த ஊர்களில் எல்லாம், என் நடிப்பு திறன் அறிந்து, ராமாயணம், மகாபாரதம் போன்ற புராண நாடகங்களில் நடிக்க வாய்ப்பு கொடுத்து பாராட்டியுள்ளனர்.
தற்போது, 'கொரோனா ஒழிக' என்ற நாடகத்தை எழுதி, என் பேத்தியரை நடிக்க வைத்து தயாரித்துள்ளேன்.
எனக்கு, 70 வயதாகிறது; என் திறன் அறிந்து உயர்த்திய அந்த தலைமையாசிரியரை நினைக்காத நாளே இல்லை.
- ஜெ.நந்தகோபால், கடலுார்.
தொடர்புக்கு: 99765 29400

