தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/கெடுவான்!

கெடுவான்!

கெடுவான்!


PUBLISHED ON : டிச 14, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 14, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அக்கரப்பாளையம் கிராமத்தில், சலவைத் தொழிலாளி குமரன் வசித்து வந்தான்.

அவனிடம், கழுதையும், நாயும் இருந்தன. கழுதை மீது, அழுக்கு துணி மூட்டையை ஏற்றி, ஆற்றில் சலவை செய்து வருவான். நாயும் உடன் சென்று பாதுகாப்பு பணி செய்யும். மழை அறிகுறி தெரிந்தால், குமரனை எச்சரிக்கும்; கழுதையிடம் பாசமாக நடந்து கொள்ளும்.

பணி முடித்து வந்ததும், கழுதையை வீட்டுக்கு வெளியில் உள்ள மைதானத்தில் அவிழ்த்து விடுவான்.

திண்ணையில் படுத்திருக்கும் நாயுடன், சிறிதுநேரம் கொஞ்சி மகிழ்வான். இதை பார்த்த கழுதை வயிற்று எரிச்சலில், 'பொதி சுமக்கும் நான், வெளியே கிடக்கிறேன்; வாலை ஆட்டியபடி, பின்னால் வரும் நாயோ, திண்ணையில் படுத்திருக்கிறது; இதற்கு முடிவு கட்ட வேண்டும்' என எண்ணியது.

ஒரு நாள் -

சலவை தொழிலாளி, 'பண்ணையார் வீட்டில் திருமணம் நடப்பதால், அவர் வீட்டு துணிகளை மட்டும் சலவை செய்ய எடுத்து வை...' என்று மனைவியிடம் கூறினான்.

அதை கேட்ட கழுதை, 'நாயை பழிதீர்க்க, இது தான் சரியான தருணம்' என எண்ணியது.

அதன் மனதில், 'நாயின் சாப்பாட்டில், மயக்க மருந்து கலந்து வைத்து விட்டால், நன்றாக துாங்கி விடும். ஆற்றுக்கு வர முடியாது. இந்த தருணத்தை பயன்படுத்தி, சில துணிகளை ஒளித்து வைத்து விடலாம். காவல் புரிய வந்திருந்தால் இப்படி நேர்ந்திருக்காது என, கோபம் கொண்டு, நாயை அடித்து விரட்டி விடுவார்' என, எண்ணியது.

சமயம் பார்த்து, உணவில் மயக்க மருந்தை கலந்து, அமைதியாக படுத்து கவனித்துக் கொண்டிருந்தது. ஆனால் அதன் திட்டத்தை குலைக்கும் விதமாக ஒரு சம்பவம் நடந்தது.

திடீரென குமரனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு சென்றான்; அவனுடன் நாயும் சென்றது. நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இனி, அந்த சாப்பாட்டை நாய் சாப்பிடாது என்று கருதிய குமரன் மனைவி, கழுதை தண்ணீர் குடிக்கும் தொட்டியில் கொட்டினாள். இதை அறியாமல், தண்ணீரை குடித்த கழுதை, நன்கு துாங்கிவிட்டது.

மறுநாள், ஆற்றுக்கு செல்ல துணி மூட்டையை தயார் செய்த குமரன், கழுதையை எழுப்ப முயன்றான். எழுந்து நிற்க முடியாமல் தள்ளாடி சாய்ந்தது. கோபத்தில், ஒரு தடியால் விளாசினான்; அதன் மயக்கம் தெளியவில்லை.

கழுதையை நம்பி பயனில்லை என்ற முடிவுக்கு வந்தான். அதை, விரட்டியடித்து, ஆற்றுக்கு புறப்பட்டான். கழுதையை பரிதாபமாக பார்த்தபடியே, அவன் பின்னால் சென்றது நாய்.

விரட்டப்பட்ட கழுதை, உணவின்றி சுற்றி அலைந்தது.

'செய்த வினை தனக்கே வந்து விட்டதே' என எண்ணி வேதனையடைந்தது.

குழந்தைகளே... நல்லதை நினைத்து அதன்படி வாழ வேண்டும். பிறருக்கு துன்பம் செய்ய எண்ணினால், அது நமக்கே வந்து சேரும்.

வி.கற்பகவல்லி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us