தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/முதன்மை சொகுசு கார்!

முதன்மை சொகுசு கார்!

முதன்மை சொகுசு கார்!


PUBLISHED ON : டிச 14, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 14, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சுகமான பயணம் என்றாலே, நினைவிற்கு வருவது, 'ரோல்ஸ் ராய்ஸ்' என்ற சொகுசு கார் தான். இந்த கார் தயாரிப்பு நிறுவனத்தை நிறுவிய ராய்ஸ், ஐரோப்பிய நாடான இங்கிலாந்தில் உள்ள அல்லல்டன் கிராமத்தில், மார்ச் 27, 1836ல் ஏழை குடும்பத்தில் பிறந்தார். இரண்டு ஆண்டுகள் தான் பள்ளியில் படித்தார்; 10 வயதில், தந்தையை இழந்தார்.

பத்திரிகை விற்றுப் பிழைத்தார். பின், ரயில் பணிமனையில் தொழில் கற்று, லண்டன், மின்விசை நிறுவனம் ஒன்றில், பணியில் சேர்ந்தார். அந்த பணியில் நிபுணத்துவம் பெற்றார்.

நண்பருடன் இணைந்து, ராய்ஸ் அண்டு கம்பெனி என்ற நிறுவனத்தை, 1884ல், இங்கிலாந்து, மான்செஸ்டர் நகரில் நிறுவினார். அது, கார் தயாரிப்பு நிறுவனம் அல்ல.

அந்த காலத்தில் ஓடும் கார்களில், 'கட... முடா...' என சத்தம் வரும். இது அவருக்கு எரிச்சலை ஊட்டியது. பயணிக்கும் போது சத்தமின்றி ஓடும் காரைத் தயாரித்தார். அது, சொகுசு மிக்கதாகவும், கவர்ச்சியாகவும் இருந்தது. பெரும் பொருட் செலவில் உருவாகியிருந்தது. பெரும் செல்வந்தர்களுக்கு, அதன் மீது ஈர்ப்பு ஏற்பட்டது.

இதை அறிந்த தொழிலதிபர் சார்லஸ் ஸ்டுவர்ட் ரோல்ஸ், 1904ல் ராய்சை சந்தித்தார். இருவரும் இணைந்து, 'ரோல்ஸ் ராய்ஸ்' என்ற பெயரில், ஒரு வாகன தொழிற்சாலையை, இங்கிலாந்து, டெர்பி நகரில் நிறுவினர்.

அங்கு, 1906ல் உருவாக்கிய, 'சில்வர் கோஸ்ட்' என்ற சொகுசு கார் பெரும் புகழ் பெற்றது. விலை உயர்ந்த வசதிமிக்க கார்களை தயாரிக்கும் நிறுவனம் என்ற பெயரைப் பெற்றது.

ஊழியர்களிடம் கண்டிப்புடன் நடந்து கொண்ட ரோஸ்ஸ், கடுமையான உழைப்பாளி. தன் தயாரிப்பு பற்றி, 'ரோல்ஸ் ராய்ஸ் கார், ஸ்டியரிங் பிடிக்கும் யாரும், உலகிலேயே மிக உயர்ந்த ரக வாகனத்தை ஓட்டுகிறோம் என்ற உணர்வை பெற வேண்டும். அந்த தரம் குறையவே கூடாது..' என்று ஊழியர்களிடம் வலியுறுத்துவார்.

அவரது எண்ணப்படியே, இன்று வரை, விலை உயர்ந்த சொகுசு காராக, ரோல்ஸ்ராய்ஸ் வலம் வருகிறது.

ஐரோப்பிய நாடான பிரான்ஸ், பாரீஸ் நகரில் நடந்த வாகன கண்காட்சியில், ரோல்ஸ் ராய்ஸ் காரில் பயணம் செய்த அனுபவத்தை, 'இந்த காரில் பயணிக்கும் போது, இன்ஜின் ஓசை துளி கூட கேட்கவில்லை; சாலையில் பயணிக்கும் உணர்வே ஏற்படவில்லை...' என்று, அமெரிக்காவிலிருந்து வெளிவரும், 'டைம்ஸ்' பத்திரிகை ஆசிரியர் எழுதியுள்ளார்.

செல்லங்களே... இந்த கார் நிறுவனத்தை உருவாக்கியவர் போல், எதிலும், எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும் என்று லட்சியம் கொள்ளுங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us