
முன்னொரு காலத்தில்...பேரரசர் கோத்வன், குறுநில மன்னர் ஒருவரின் நாட்டிற்கு வருகை தந்தார். அந்நாட்டில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. மன்னருடன் மகிழ்ச்சியாக பேசிக்கொண்டிருந்தார் பேரரசர்.அப்போது, 'உம் நாட்டு அமைச்சர், அறிவுக் கூர்மையில் சிறந்தவர் என்று கூறுகின்றனரே... அது உண்மையா...' என்றார் பேரரசர்.'உண்மை தான்...' 'அப்படியானால், அந்த அமைச்சரை குடிப்பதற்கு, பால் எடுத்து வர சொல்லுங்கள். உண்மையில் அவர் அறிவு உள்ளவர் தானா என்பதை கண்டுபிடித்து விடுகிறேன்...' என்றார், பேரரசர்.உடனே, பால் எடுத்து வர உத்தரவிட்டார் மன்னர். அழகிய வெள்ளி தட்டில், இரண்டு கிண்ணங்களில் எடுத்து வந்தார், அமைச்சர்.அப்போது, 'யாரிடம் முதலில் தட்டை நீட்டுவது' என்ற குழப்பம் ஏற்பட்டது. 'குறுநில மன்னரிடம் முதலில் தந்தால், அவமானப்படுத்தி விட்டதாக கோபம் கொண்டு, கொன்று விடுவார் பேரரசர். பேரரசரிடம் தந்தால், மன்னர் கோபப்பட்டு, தலையை எடுத்து விடுவார்... என்ன செய்வது' என, சிந்தித்தபடி தயங்கி நின்றார்.மன்னருக்கு அமைச்சரின் சிக்கல் நன்கு தெரிந்தது.'என்ன தான் செய்கிறார் பார்ப்போம்' என எண்ணி அமைதியாக இருந்தார்.அறிவுள்ள அமைச்சரோ, குறுநில மன்னர் முன் தட்டை நீட்டி, 'மன்னா... உங்கள் விருந்தினரான பேரரசருக்கு, என் கையால் பால் தருவது தகுதி ஆகாது; அதை தாங்களும் விரும்ப மாட்டீர்கள்; தங்கள் திருக்கரங்களாலேயே தந்து, விருந்தினரை பெருமைப்படுத்துங்கள்...' என்றார்.அமைச்சரின் அறிவுக்கூர்மையை வியந்தார் மன்னர். பல பரிசுகளை அளித்து சிறப்பித்தார்.செல்லங்களே... சிந்தனைத் திறன் எவ்வளவு சிறப்பானது என்பதை அறிந்து கொண்டீர்களா... சிந்தித்து செயல்படுங்கள்.

