
அன்புள்ள பிளாரன்ஸ்... என் வயது, 37; காதலித்து திருமணம் செய்தேன். இருவருமே மத்திய அரசு பணியில் உள்ளோம். எங்களுக்கு ஒரே மகன்; வயது 17; பிளஸ் 2 படிக்கிறான். அழகாக இருப்பான்; மிகச் சிறப்பாக படிக்கிறான். வீட்டில், நாய், பூனை, கிளி, மீன் எல்லாம் வளர்க்கிறான். அவனது ஒரே குறிக்கோள், கால்நடை மருத்துவராவது தான்; இதை கேட்டு எனக்கு மிகவும் அவமானமாக இருக்கிறது. அவன் சிந்தனை இழிவாகப்படுகிறது. 'நட்பும், உறவும் கை கொட்டி சிரிப்பர்; மனிதர்களுக்கு மருத்துவராய் இரு; எம்.பி.பி.எஸ்., எம்.டி., படித்து, இதய நோய் மருத்துவராகு...' என கெஞ்சிப் பார்க்கிறேன்.லட்சியத்தில் பிடிவாதமாய் இருக்கிறான். அவனுக்கு தகுந்த ஆலோசனை வழங்க வேண்டுகிறேன்!
அன்புள்ள அம்மா...அறிவுரை கூற வேண்டியது உங்கள் மகனுக்கு அல்ல... உங்களுக்கு தான்; கால்நடை மருத்துவர் என, இழிவாய் எழுதியிருக்கிறீர்கள். உலகின் அனைத்து ஜீவராசிகளும் சமமானவை. மனிதர்களுக்கு சுகவீனமானாலும், ஒரு மாட்டுக்கு சுகவீனமானாலும் குணப்படுத்த வேண்டியது சமூகத்தின் கடமை! மிருகங்கள் மீதும், பறவைகள் மீதும் காதல் கொண்டுள்ளான் உங்கள் மகன்; அவற்றுக்கு சேவை செய்ய விரும்புபவனை தடுக்க வேண்டாம். உலக அளவில் புகழ் பெற்ற கால்நடை மருத்துவர்களாக...பெர்ன் ஹார்ட் லாரிஸ் ப்ரடரிக் பேங், ராபர்ட் குக், ஹாரி கூப்பர், லுக் கேம்பிள், எம்மா மிலின் ஆகியோர் உள்ளனர்.இந்திய அளவில், கீதா சர்மா, சஞ்சீவ் குமாரி பால், ரஜினி யாதவ், பவன் குமார், அதிதி சர்மா உட்பட பலர் கால்நடை மருத்துவர்களாக உள்ளனர்.சிறந்த கால்நடை மருத்துவராக, பெண்களே பிரகாசிக்கின்றனர். ஒரு கால்நடை மருத்துவருக்கு, கழுகின் கண்கள், சிங்கத்தின் இதயம், பெண்ணின் கைகள் தேவை. தமிழகத்தில், நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு போன்ற இடங்களில், கால்நடை மருத்துவ கல்லுாரிகள் உள்ளன. இந்தியாவில், பிகானிர், மீரட், வாரணாசி, கோல்கட்டா, மும்பை போன்ற இடங்களில் சிறந்த கால்நடை மருத்துவ கல்லுாரிகள் உள்ளன. தமிழகத்தில் கால்நடை மருத்துவ கல்லுாரிகளில் இருக்கும், 306 சீட்டுகளில் சேர, 'நீட்' என்ற தகுதித் தேர்வு எழுத தேவையில்லை. மற்ற மாநில கல்லுாரிகளில் சேர, 'நீட்' தேவை.இளங்கலை கால்நடை மருத்துவம், நான்கு அரை ஆண்டுகள், ஓர் ஆண்டு பயிற்சி என்ற கால அளவில் உள்ளது. முதுகலை கால்நடை மருத்துவம், இரண்டு ஆண்டுகள். முதுகலையில், 22 பிரிவுகள் உள்ளன. ஓர் ஆண்டு முதுகலை பட்டயப் படிப்புகளும் உள்ளன; ஆய்வுத்துறையான, பிஎச்.டி., படிப்புக்கு மூன்று ஆண்டுகள். கால்நடை மருத்துவம் பயின்றவர்கள் அரசு பணியில், மருந்து தொழிற்சாலையில், விவசாயப் பண்ணையில், பரிசோதனை கூடங்களில், பல்கலைகழகங்களில், வெளிநாடுகளில், மாமிச பரிசோதனை கூடங்களில் பணியில் சேரலாம். எடுத்தவுடன், சம்பளம், 75 ஆயிரம் வரை கிடைக்கும்.கால்நடை மருத்துவராக பணிபுரிபவர்கள் ஒவ்வொரு ஆண்டும், ராபிஸ் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் நான் நாய் வளர்த்தால், உங்கள் மகனிடம் காட்டி ஆலோசனை பெறலாம். அவன் சிறந்த கால்நடை மருத்துவராக திகழ வாழ்த்துகள். - இனிய அன்புடன், பிளாரன்ஸ்.

