
கன்னியாகுமரி மாவட்டம், சொத்தவிளை, அரசு நடுநிலைப் பள்ளியில், 1993ல், 8ம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்வு!
அன்று சபரிமலை செல்ல மாலை அணிந்து வந்திருந்தான் நண்பன் சாமிநாதன். அவனிடம் கேள்வி கேட்டார், அறிவியல் ஆசிரியர் ரத்தினம். பதில் தெரியாமல் திணறியவனை தண்டிக்கவில்லை. அதே கேள்வியை என்னிடம் திருப்பினார்.
தவறான பதில் கூறியதால் அடித்து துவைத்தார். விடை தெரியாத நண்பனுக்கு தண்டனை கிடைக்காதது குறித்து சிந்தித்தேன். நண்பர்களிடம் விசாரித்த போது, 'கோவிலுக்கு செல்ல மாலை போட்டிருந்ததால் தண்டனை தரவில்லை' என, கூறினர்.
மனதில் குறுக்கு புத்தி ஓடியது. மறுநாளே உறவினர்களிடம் கெஞ்சி, சபரிமலைக்கு மாலை அணிந்தேன். தவறுகள் செய்தாலும் வகுப்பில் தண்டனை தராததால் இறுமாப்புடன், சட்டை காலரை துாக்கி விட்டபடி வலம் வந்தேன். பாடங்களில் கவனம் செலுத்தாமல் மெத்தனமாக இருந்தேன்.
சபரிமலை சென்று திரும்பியதும், மாலை அணிந்திருந்த போது, கேட்ட அதே கேள்விகளை திரும்பவும் கேட்டார் ஆசிரியர்; ஆடு திருடியது போல் முழித்தேன்.
ஆவேசமடைந்தவர், 'கேட்டு ஒரு மாதம் ஆகிறது; இன்னுமா விடையை மனப்பாடம் செய்யவில்லை...' என, பின்னி எடுத்துவிட்டார். குறுக்கு புத்தியுடன் செயல்பட்டால் தண்டனை நிச்சயம் என உணர்ந்தேன்.
என் வயது, 43; இன்றும், கார்த்திகை மாதம் பிறந்தவுடன் அந்த சம்பவத்தை அசை போடுகிறது மனம்.
- மகேஷ் அப்பாசுவாமி, கன்னியாகுமரி.
தொடர்புக்கு: 94870 56476

