
ஆறுவகை உணவு!
அரசு அதிகாரி ஒருவர் நிறைய லஞ்சம் வாங்கி ஏராளமாக சம்பாதித்து வந்தார். அவர் ஒரு சாப்பாட்டுப் பிரியர். தினமும் ஆறுவகை உணவு வகைகளை விதவிதமாக சமைக்கும்படி சமையல்காரனுக்கு சொல்வார்.
ஒருமுறை லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளிடம் கையும் களவுமாகப் பிடிபட்டார். வேலை போயிற்று. அதனால், அது நாள்வரை அவர் கெட்ட வழியில் சம்பாதித்த பணத்தைக் கொண்டே வாழ வேண்டி இருந்தது.
வக்கீல், கோர்ட் என்று படுசெலவுகள். செலவைக் குறைக்க விரும்பி தனது சமையல்காரனைக் கூப்பிட்டு, ''எனக்கு இனிமேல் ஒருவகை உணவு மட்டும் போதும். சாப்பாட்டு செலவைக் குறை,'' என்றார்.
அடுத்த ஒரு மாதம் முழுவதும் தினமும் ஒருவகை சாப்பாடுதான் சாப்பிட்டார். அப்படியும் மாதக் கடைசியில், செலவு குறையாமல் முன்போலவே இருப்பதைக் கண்டு, சமையல்காரனைக் கூப்பிட்டு விசாரித்தார்.
''தங்களுக்கு வேலை போய் விட்டதால் ஒரே ஒரு வகை சாப்பாடு உங்களுக்குப் போதும் என்று சொன்னீர்கள். ஆனால், என்னுடைய வேலை இன்னும் போகவில்லையே... அதனால் வழக்கம் போல் எனக்கு ஆறு வகை சாப்பாடு செய்து சாப்பிடுகிறேன்... நீங்கள் என்னை இப்படி பழக்கி விட்டீர்கள்.... நான் என்ன செய்வது?'' என்று சொல்லியபடி தலையைச் சொறித்தான்.
அதிகாரி சினம் கொண்டு, அவனை உதைத்து, 'இன்றோடு உன்னை வேலையை விட்டு நீக்குறேன்!' என்று துரத்தி விட்டார்.
மனம் விட்டு பேசணும்!
ஒரு மனநல ஆலோசகரிடம், கணவனும், மனைவியும் தங்களது பிரச்னை பற்றி பேச வந்தனர். இருபது ஆண்டுகள் திருமண வாழ்வு புளித்துப் போய்விட்டதாக இருவரும் புலம்பித் தீர்த்தனர்.
மனநல ஆலோசகர் இருவரையும் மனம் விட்டுப் பேசுமாறு சொன்னார்.
'நீ எப்போதுமே அந்த பாழாப் போன சாம்பார் சாதம் சமைத்தே என்னை வெறுப்பேத்துற' என்றான் கணவன்.
'சாம்பார் சாதத்தை நீங்கள் விரும்பி சாப்பிடுவதால், அடிக்கடி அதை செய்கிறேன்' என்றாள் மனைவி.
அப்போதுதான் ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த பாசமே புரிந்தது.
இதுக்குத்தான் புருஷன், பொண்டாட்டி மனம் விட்டு பேசணும் என்பது.