தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/செவிட்டு மீன் இனம்!

செவிட்டு மீன் இனம்!

செவிட்டு மீன் இனம்!


PUBLISHED ON : ஜூன் 24, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 24, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடல் ஒரு இரைச்சல் மிக்க இடம். பலவகையான மீன்களும் நண்டு போன்ற ஒட்டிலிகளும் உணவையும் காதலையும் தேடி அலையும் போது பல வகையான ஒலிகளை எழுப்புகின்றன. பிற பிராணிகளை வேட்டையாடி வாழ்கிற 'ஸ்குவிட்' போன்ற ஒரு பிராணிக்கு இந்த ஒலிகளை உணர்ந்து புரிந்து கொள்கிற திறமை இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமே. எந்த ஒலி எந்தப் பிராணியிடமிருந்து வருகிறது என்பதைத் தெரிந்து வைத்திருப்பது இரையைப் பிடிப்பதில் மிகவும் உதவியாக இருக்கும்.

ஆனால், ஸ்குவிட்களிலும் அதன் தாயாதிகளான கடல் சிலந்தி கணவாய் மீன் ஆகியவற்றுக்கும் செவிப் புலனுறுப்புகளே கிடையாது என்று விஞ்ஞானிகள் கண்டுப்பிடித் துள்ளனர். மற்ற கடல் வாழ் உயிரினங்களைப் போலன்றி அவை சுத்தமான டமாரச் செவிடுகள்.

விஞ்ஞானிகளுக்கு இந்தச் செவிட்டுத் தன்மை ஒரு விளங்காத புதிராக இருக்கிறது. ஏனெனில், கடல் சிலந்தியும், ஸ்குவிட்டும் முதுகெலும்பில்லாத பிராணிகளில் மிகவும் பரிணாம முன்னேற்றமடைந்த இனங்களைச் சேர்ந்தவை. அவற்றிற்கு அதிக புத்திக்கூர்மை உண்டு. அவை மனிதர்களுக்குள்ளதைப் போன்று இரண்டு கண்களையும், கூர்மையான பார்வையையும் பெற்றிருக்கின்றன. தவிர அவை தகவல் பரிமாறிக் கொள்கிற வழக்கமுடையவை. ஸ்குவிட் மிகுந்த திறமையுடன் தனது சகாக்களுக்குச் செய்தி சொல்லுவதில் மன்னன். அது தனது தோலிலுள்ள நிறமி செல்களைச் சுருக்கி விரிப்பதன் மூலம் பலவிதமான நிறமாற்றங்களைத் தன் உடலில் காட்டி அதன் மூலமும் பிறருக்குத் தகவல் தெரிவிக்கிறது.

இதையெல்லாம் பார்க்கும்போது தமக்குச் செவியுணர்வினால் அனுகூலம் எதுமில்லாததால்தான் ஸ்குவிட்டும் அதன் தாயாதிகளும் வேண்டுமென்றே செவியமைப்புகளை வளர்த்துக் கொள்ளவில்லை என விஞ்ஞானிகள் எண்ணுகின்றனர். அவற்றுக்கு காது கேட்டால் ஏதோ இடைஞ்சல் ஏற்படுகிற வாய்ப்பு உள்ளது. பனாமா விலுள்ள ஸ்மித் சோனியன் வெப்பப் பிரதேச ஆய்வுப் பயிலகத்தில் பணியாற்றுகிற மார்ட்டின் மொய்னிஹான் கரீபியன் கடல் பகுதிகளில் வசிக்கும் ஸ்குவிட்களைப் பற்றி விரிவாக ஆய்வு செய்திருக்கிறார். ஸ்குவிட்டுகள் சுற்றியிருக்கிற சத்தங்களைக் காதில் போட்டுக் கொள்ளாமலிருக்கிறதால்தான், அவை தமது எதிரிகளான திமிங்கலங்களிடமிருந்து தப்பிக்க முடிகிறது என அவர் கூறுகிறார்.

சண்டைகளின்போது போர் வீரர்கள் வீராவேசத்துடன் கூச்சலிட்டுக் கொண்டு பாய்ந்து வருவதைக் கண்டு, எதிரிகள் திகைத்துப் போய் நின்று விடுவார். அதேபோலச் சில இனத் திமிங்கலங்கள் பெருங்ககூச்சலிட்டுத் தமது இரையைச் செயலற்றதாக்கி விடுகின்றன. அவை ஒரு உரத்த ஒலிக்கற்றையை வீசுவதன் மூலம் தமது இரைகளை ஸ்தம்பித்துப் போக வைக்கின்றன. அந்த ஒலிக்கற்றையின் அழுத்த அலைகள் தண்ணீருக்கடியில் வெடிக்கிற குண்டுகளின் அழுத்த அலைகளுக்குச் சமமான வலுவுள்ளதாயிருக்கும். அவற்றால் தாக்கப்படுகிற எல்லா விலங்குகளுக்கும் உடனே மரணம்தான்.

ஆனால், எல்லாச் சமயங்கிளிலும் உயிரை வாங்குகிற அளவிற்குத் திமிங்கலங்கள் ஒலிக்கற்றை வீசுவதில்லை. செறிவு குறைவான ஒலிகள் வெளிப்படும் சந்தர்ப்பங்களில் காது இல்லாமலிருப்பது அனுகூலமானது!

பிராணிகளின் செவி உறுப்புகள் மிகவும் மென்மையான திசுக்களாலானவை. சின்னச் சின்ன அதிர்வுகளைக் கூட உணருகிற வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். அதீதமான ஒலி அழுத்தத்தினால் மற்ற உறுப்புகளை விடச் செவியுறுப்புகளுக்குத்தான் சேதமடைகிற வாய்ப்புகள் அதிகம். இதனால் காதுகள் இருப்பது பிராணிகளுக்கு இடைஞ்சல்தான்.

கடல் சிலந்திகளுக்கும் ஸ்குவிட்களுக்கும் கூர்மையான பார்வையுண்டு. எனவே, அவற்றுக்குக் காது கேட்கும் திறன் அவ்வளவு அத்தியாவசியமானதல்ல. மேலும், திமிங்கலங்கள் சூழ்ந்து கொண்டு தாக்கும்போது காதுகளும் கண்களும் அளவுக்கு மீறிய விஷயங்களைப் பதிவு செய்வது தொந்தரவாகத்தானிருக்கும். எதைப்பார்ப்பது... எதைக் கேட்பது என்கிற குழப்பநிலை ஏற்படுவது உயிருக்கே உலை வைத்து விடும்.

காதிலே விழாததைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்கிற வசதி, ஸ்குவிட்களுக்கு இருப்பதாக மொய்னிஹாசன் கூறுகிறார். திமிங்கலங்களின் கூச்சல் அலையைக் கேட்கிற திறமை ஸ்குவிட்டுகளின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கலாம். ஸ்குவிட்டுகளுக்கு செவிப்புலன் ஒரு ஆபத்தை விளைவிக்கிற அனாவசியமான ஆடம்பரம்தான்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us