PUBLISHED ON : ஜூன் 24, 2011

ஒரு ஊரிலே நல்ல குணமுள்ள ஒரு மனிதன் தனது மனைவியோடு வாழ்ந்து வந்தான். அவர்களுக்கு ஒரே மகன். அந்தச் சிறுவன் எப்போது பார்த்தாலும் தண்ணீரிலேயே விளையாடிக் கொண்டிருப்பான். எங்கே தண்ணீரை அவன் கண்டாலும் உடனேயே அங்கே விளையாடுவதற்காக நின்றுவிடுவான். குளத்தைக் கண்டால் அந்த இடத்தைவிட்டு நீங்கவே மாட்டான்.
சிறுவன் இப்போது இளைஞன் ஆகிவிட்டான். அவனை ஒரு சிறந்த மாலுமியிடம் அனுப்பினர்.
பிறகு இளைஞன் பயிற்சி பெறத் தொடங்கினான். கொஞ்ச நாட்களிலேயே கப்பல் ஓட்டுவது பற்றிய சகல நுட்பங்களையும் அந்த இளைஞன் நன்கு கற்றுக் கொண்டான்.
குறிப்பிட்ட காலத்திற்கு முன்னரே அந்த இளைஞன் தன்னுடைய பயிற்சிகளை முடித்துக் கொண்டான். அதனால் சந்தோஷமடைந்த வயோதிக மாலுமி, ''அன்பான இளைஞனே! நீ கற்க வேண்டியதெல்லாம் குறிப்பிட்ட காலத்திற்கு முன்னரே கற்றுவிட்டாய். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் கொடுக்கிறது. இனி நீ கற்க வேண்டியது எதுவுமே இல்லை!'' என்றார்.
அவன், வயோதிகரான அந்த மாலுமியிடம் இருந்து விடைபெற்றுக் கொள்ளும்போது, அவர் அவனிடம் மூன்று முடிச்சுகள் போட்ட கயிறு ஒன்றினைக் கொடுத்தார்.
''உலகிலே உள்ள காற்றுகள், சமுத்திரங்கள், நாடுகள் ஆகியவற்றைப் பற்றி மட்டும் ஒரு நல்ல மாலுமி அறிந்திருந்தால் போதாது. நல்ல மாலுமி ஒருவனுக்கு இவை மட்டுமே போதுமானவை அல்ல. எனவே, நான் உனக்கு இந்த முடிச்சுப் போட்ட கயிற்றினைத் தருகிறேன். இந்தக் கயிற்றை நீ வைத்திருக்கும்வரை நீ சமுத்திரங்களுக்கும், காற்றுகளுக்கும் தலைவனாக இருப்பாய். இவை எல்லாம் உனது சொற்படியே நடக்கும்!''
முதியவரான மாலுமி கொஞ்ச நேரம் நிறுத்திவிட்டுத் தொடர்ந்தார்.
''இந்தக் கயிற்றிலே உள்ள மூன்று முடிச்சுகளிலும் நிறைய ரகசியங்கள் உள்ளன. கடலில் அலை ஏதும் அடிக்காமல் மிகவும் அமைதியாக இருக்குமானால், இந்தக் கயிற்றிலே உள்ள முதல் முடிச்சினை நீ அவிழ்த்துவிடு. உடனே கப்பல் ஓடுவதற்குத் தேவையான காற்று வீசத் தொடங்கும்.
''இரண்டாவது முடிச்சை அவிழ்த்துவிட்டாயானால் புயல்காற்று சீறி எழும். மூன்றாவது முடிச்சை அவிழ்த்தாயானால் காற்று அடங்கி சமுத்திரம் அமைதியாகிவிடும்.''
இப்படிச் சொல்லிவிட்டு வயதான மாலுமி அவனுக்கு விடை கொடுத்தார். பின்னர், இளைஞனான மாலுமி கப்பலில் தனது பதவியினை ஏற்றுக் கொண்டான். அவன் கப்பலை ஓட்டிச் செல்கையில் எந்த இடையூறும் நேரவில்லை. மிகவும் இலகுவாக அவனது பயணங்கள் அமைந்தன.
சரியான காற்றையும், நீரோட்டங்களையும் அவதானித்து கொஞ்ச நாட்களிலேயே அந்த இளைஞன் மாலுமிகளிடையேயும், மக்களிடையேயும் சிறப்பான பெயரினைப் பெற்றுவிட்டான். எங்கு பார்த்தாலும் அவனைப் பற்றிய பேச்சுதான்.
ஒருநாள் இளம் மாலுமி தனது கப்பலைக் கரைக்குக் கொண்டு வந்தான். அப்போது நிறையக் கப்பல்கள் கரையிலே இருந்து புறப்படத் தயார் நிலையிலிருந்தன.
அந்த நேரத்திலே இளம் மாலுமி கயிற்றிலே இருந்த மூன்றாவது முடிச்சினை அவிழ்த்துவிட்டான். அப்போது கடல் அடங்கி காற்று ஏதுமின்றி அமைதியாகிவிட்டது. இதனால் கப்பல்கள் ஏதுமே அங்கிருந்து புறப்பட்டுச் செல்ல முடியவில்லை.
இப்படியே காற்று வீசாமல் ஒருநாள் சென்றது. இரண்டாவது நாளும் ஆயிற்று. காற்று வீசாததால் மாலுமிகளுக்கு மிகவும் வேதனை உண்டாயிற்று. கப்பல்கள் செலுத்தப்படாததால், மக்களுக்கு நிறைய வசதிக் குறைவுகள் ஏற்பட்டன.
இவை எல்லாவற்றையும் விட அங்கு ஆட்சி செய்த அரசனுக்கும் இதனால் கவலை ஏற்பட்டு விட்டது. ஏனென்றால், அரசனின் மகனான இளவரசனுக்கு கடல் கடந்த அடுத்த தேசத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
அங்கு போய் அந்நாட்டு இளவரசியை அழைத்துவர முடியாமல் இளவரசன் தவித்துக் கொண்டிருந்தான். தன்னை சமுத்திர வழியாகக் கூட்டிச் செல்கிறவருக்கு அவர் விரும்புகிற எதையும் பரிசளிப்பதாக இளவரசன் அறிவித்தான். அரசனோ தனது மகனான இளவரசனை பத்திரமாக மறுகரைக்குக் கொண்டு போய்ச் சேர்க்கிறவருக்கு தன்னுடைய ராஜ்ஜியத்தில் பாதியை அளிப்பதாக அறிவித்தான். இந்த அறிவிப்பைக் கேள்விப்பட்ட இளைஞனான மாலுமி, இளவரசனை கப்பலில் அழைத்துச் செல்வதாக அறிவித்தான்.
அப்படியே கப்பலில் இளவரசன் ஏறிக் கொண்டதும், மாலுமி தனது கயிற்றில் இருந்த முதலாவது முடிச்சினை அவிழ்த்துவிட்டான். அப்போது கடல் அமைதியாகி கப்பல் இலகுவாகச் சென்றது. கடைசி நேரத்திலே அடுத்த நாட்டிலே போய் இளவரசன் இறங்கிக் கொண்டான்.
சரியான தருணத்தில் அவன் போய் இறங்கியதால் அந்த இளவரசியைத் திருமணம் செய்து கொண்டான். சில கணங்கள் சென்றிருந்தாலும் அவளுக்கு வேறு நாட்டு இளவரசன் ஒருவன் மாலை சூடியிருப்பான்.
சரியான தருணத்தில் தனது மகனுக்கு உதவி செய்த மாலுமிக்கு அரசர் மிகவும் நன்றி கூறினார். முன்னர் வாக்குறுதி அளித்தபடியே தனது ராஜ்ஜியத்தில் பாதியை அவனுக்குப் பரிசாக அளிக்க முன்வந்தார். ஆனால், அந்த மாலுமி அரசன் கொடுத்த பரிசினை ஏற்றுக் கொள்வதற்கு மறுத்துவிட்டான்.
''அரசே! உங்கள் ராஜ்ஜியத்திலே பாதி எனக்கு வேண்டியதில்லை. என்னுடைய கப்பல்தான் எனக்கு மிகப்பெரிய ராஜ்ஜியம். அங்கே நான் ஒரு சக்கரவர்த்தியாகவே இப்போது இருக்கிறேன். எனவே, எனக்கு இதைவிடப் பெரிய ராஜ்ஜியம் இனி வேண்டியதில்லை!'' என்று அந்த இளம் மாலுமி கூறினான்.
அந்த இளம் மாலுமியை தனது அரண்மனையிலே கொஞ்ச காலம் இருந்து தங்கிச் செல்லுமாறு கேட்டுக் கொண்டான் அரசன். சில நாட்கள் அந்த இளம் மாலுமி தங்கியிருந்தபோது அரசனது மகளான இளவரசியும் அவனைப் பார்த்தாள். இளம் மாலுமியின் நற்குணங்களும், செய்கைகளும், அவளை மிகவும் கவர்ந்து கொண்டன. இளவரசி அந்த மாலுமி மீது நல்ல அபிப்பிராயமும் விருப்பமும் கொண்டான்.
ஒருநாள் அந்த அரண்மனைக்கு சிலர் வந்தனர். தனியான தீவு ஒன்றின் அரசனால் அவர்கள் அங்கு அனுப்பப்பட்டிருந்தனர். அந்த நாட்டு இளவரசியை, தமது தீவுகளின் அரசனுக்கு திருமணம் பேசவே அவர்கள் அங்கு வந்திருந்தனர். ஆனால், இளவரசியோ, அந்தத் திருமணத்துக்கு சம்மதிக்க மறுத்துவிட்டாள்.
திருமணம் பேச வந்தவர்கள், அதைப் பற்றி ஒன்றுமே பேசாமல் அன்றிரவு மட்டும் அங்கே தங்கிச் செல்வதற்கு அனுமதி கேட்டனர். அனுமதி பெற்றுக் கொண்டு இரவு அங்கேயே தங்கினர்.
நடுச்சாமம் ஆனது. யாருக்கும் தெரியாமல் இளவரசியைத் திருட்டுத்தனமாகத் தூக்கிக் கொண்டு அவர்கள் தமது நாட்டிற்குப் புறப்பட்டுவிட்டனர்.
இதனால் அரசன் மிகவும் கவலை கொண்டான். அந்த எதிரி அரசனின் தீவு, மலைகளால் சூழப்பட்டது. இயற்கை அகழிகள் எங்கும் காணப்பட்டது. அதை வெற்றி கொள்வதே மிகவும் சிரமமாயிருந்தது.
அரசன் தனது மகளைப் பற்றிச் சொன்னதும் இளம் மாலுமி அங்கிருந்து யுத்தத்திற்குப் புறப்பட்டான். இளம் மாலுமியின் படையைக் கண்டதும், தீவுகளின் அரசன் தனது படையுடன் நாட்டிலிருந்து வெளியே வந்தான். அவனது கப்பற்படையுடன் எதிரிகளை அழித்து ஒழிப்பதற்காகப் புறப்பட்டான்.
அந்த வேளையிலே அவர்களுக்குக் கொஞ்ச தூரம் தள்ளி இளம் மாலுமி நங்கூரத்தை இட்டு கப்பல்களை நிறுத்திக் கொண்டான். பிறகு கயிற்றிலுள்ள இரண்டாவது முடிச்சை அவிழ்த்துவிட்டான். உடனே காற்றுப் பொங்கி எழுந்து வீசிற்று. கடல் அலைகள் மளார் மளாரென்ற சத்தத்துடன் உயரே எழுந்து வீழ்ந்தன. கடலில் அங்குமிங்குமாய் குமுறல்கள் தோன்றின.
இளம் மாலுமி கப்பல்களுக்கு ஏற்கனவே நங்கூரம் இட்டிருந்தமையால் அவனுக்கும், அவனது கப்பல்களுக்கும் ஒரு சேதமும் உண்டாகவில்லை. ஆனால், எதிரியின் கப்பல்கள் பெரும்புயலில் சிக்கிக் கடலினுள்ளே மூழ்கிப் போய்விட்டன.
கொஞ்ச நேரத்தில், இளம் மாலுமி, கப்பலில் இருந்தவாறு மூன்றாவது முடிச்சினை அவிழ்த்தான். உடனே கடல் அமைதியாயிற்று. இளம் மாலுமி தீவுகளின் அரசனது அரண்மனைக்குள்ளே போய் இளவரசியை மீட்டு வந்தான்.
அந்த அழகிய இளவரசியை மிகவும் மரியாதையோடு, இளைஞனான மாலுமி அவளது நாட்டிற்கு அழைத்துக் கொண்டு சென்றான். தனது மகளைக் கண்ட அரசன் ஆனந்தக் கண்ணீர்விட்டு அன்புடன் வரவேற்றான். இளம் மாலுமியை அரசன் பெரிதும் பாராட்டினான். நன்றி கூறி மகிழ்ந்தான். பிறகு இளவரசிக்கும், இளம் மாலுமிக்கும் திருமணமாயிற்று.
அதன் பிறகு அரண்மனையில் இருந்து அவன் கடற்கரை ஓரமாகச் சென்று நீண்ட நேரம் கடலையே பார்த்துக் கொண்டிருப்பான். அந்த முடிச்சுகள் உள்ள கயிற்றை தனது மகனுக்குக் கொடுக்க அவன் பத்திரமாக வைத்திருந்தான்.
***
