PUBLISHED ON : ஜூன் 24, 2011

இதுவரை: அமைச்சர் அறிவுமதி ஏற்பாட்டில் பூங்குழலி போர்பயிற்சி பெற பயிற்சிக்கூடம் வந்தாள். இனி-
பூங்குழலி போராயுதங்களில் பயற்சிபெற ராஜகுருவால் நாள் குறிக்கப்பட்டது . அன்று அரண்மனை விழாக்கோலம் பூண்டது. அரசப் பிரதாணிகள் ஒவ்வொருவராக, ஆயுதப் பயிற்சிக்கூடத்துக்கு வரத் தொடங்கினர். மக்களும், தங்கள் மேகநாட்டின் எதிர்கால இளவரசி பூங்குழலி, போராயுதங்களின் பயிற்சியை பெறுவதை காண கூட்டம் கூட்டமாக வர ஆரம்பித்தனர்.
பூங்குழலி போராயுத பயிற்சிப் பெற தேவையான சிக்கென்ற உடையில், இடுப்பில் கட்டிய உடைவாளுடன், குறைந்தபட்ச நகையணிந்து, சிகை அலங்காரத்தை பயிற்சிக்கு இடைஞ்சலாக இல்லாமல் செய்துகொண்டு ஒரு குட்டி இளவரசியாக மாறிவிட்டிருந்தாள்.
அவளையும் அழைத்துக்கொண்டு, நான்கு குதிரைகள் கட்டிய சற்று பெரிய ரதத்தில், அரசரும், அரசியும் பயிற்சி கூடத்திற்கு வந்தனர். இசைக் கருவிகள் மங்கள ஒலி எழுப்பின. அறங்காவலர்கள் திருமுறைகளை ஓதினர். வெளியே இருந்து வேட்டு சப்தம் கேட்டது. சிவநேசன், வில்லாளன், வடிவழகன், குணாளன், யதுகிரி ஆகியோர் காத்திருந்தனர் எல்லாரையும் வரவேற்க.
அமைச்சர் அறிவுமதி வந்தார். போராயுதப் பயிற்சியாளர்களை பார்த்தும் பார்க்காதது மாதிரி பார்த்து, நான் சொன்னதெல்லாம் நினைவிருக்கட்டும் என்பது போல பார்த்தார். அப்போது, அவரது இடது கரம் உடைவாளைப் பற்றி இழுத்தது, பயிற்சியாளர்களை எச்சரிப்பது போலிருந்தது.
பேரறிவாளனும், புலந்திரனும் சேர்ந்தே வந்து தங்களுக்கென போடப்பட்டிருந்த இருக்கைகளில் அமர்ந்தனர். பூங்குழலி, புலந்திரனை பார்க்க, புலந்திரன் பூங்குழலியைப் பார்க்க அவர்களிருவரையும் பார்த்தான் பேரறிவாளன்.
நீண்ட மேடையில், விதவிமான வாட்களும், கேடயங்களும் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. அதுபோல, வில்லும், அம்புகளும் சிறிய அளவிலிருந்து பெரிய அளவு வரை வைக்கப்பட்டிருந்தன. ஏதேனும் அடிபட்டால் முதலுதவி செய்ய தேவையான மருந்துகள் ஒரு பெட்டியில் வைக்கப்பட்டிருந்தன. ஒரு பெரிய பானையில் குளிர்ந்த நீர் நிரப்பப்பட்டு மூடி, அதன் மீது ஒரு குவளை கவிழ்த்து வைக்கப்பட்டிருந்தது.
தொடங்கலாம் என்பது போல ராஜகுரு வடிவழகனைப் பார்த்தார். அவன் ஒரு சிறிய கேடயத்தையும், சிறிய வாளையும் நீட்டி, அவற்றை அவள் எப்படி பிடித்துக்கொள்ள வேண்டுமென்று வடிவழகன் சொல்வதற்கு முன்பே, பூங்குழலி கேடயத்தின் பின்புறத்தில் மையத்திலுள்ள கைப்பிடியில் தன் இடதுகை விரல்களைவிட்டு திருப்பி பிடியை பிடித்துக்கொண்ட கையோடு வாளை வலது கையால் காற்றில் இப்படி அப்படி ஒருமுறையும், தலையைச் சுற்றி ஒருமுறையும் வீசி, வீரலட்சுமி விக்கிரகத்தின்முன் ஒரு காலை மடக்கி உட்கார்ந்து சிரம் தாழ்த்து வீரலட்சுமியை வணங்கியதும், சொல்லிக் கொடுக்காமலே இவ்வளவையும் பூங்குழலி எப்படி செய்தாள் என்ற வியப்பும், வினாவும் அனைவருக்கும் ஏற்பட்டது.
வடிவழகனுக்கே அவளைப் பாராட்ட வேண்டும் போலிருந்தது. என்ன லாவகம், என்ன நேர்த்தி. தன்னை அடக்கிக்கொண்டு தன் கேடயத்தையும், வாளையும் கையில் எடுத்துக் கொண்டான். பயிற்சி மையத்தின் நடுப்பகுதிக்குச் சென்று பூமியைத் தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டாள் பூங்குழலி.
வடிவழகன் தரையில் உடம்பை ஒருமுறை சுற்றி, கேடயத்தை ஒரு கையால் பிடித்து, வாளை மறுகையால் பிடித்து, இப்படி செய்யுங்கள் இளவரசியாரே என்று சொல்லி முடிப்பதற்குள் அதை செய்து முடித்துவிட்டிருந்தாள் பூங்குழலி.
வாளை அவளை நோக்கி வடிவழகன் பாய்ச்ச, அதை வாள் போரில் மிகவும் பரிச்சயமுள்ளவர் போல பூங்குழலி அதைத் தடுத்தாள். அடுத்த முறை வடிவழகன் வாளை சற்று வேகமாக வீசியபோது, அதை எதிர்பார்த்திருந்தவள் போல, பூங்குழலி தன் பலங்கொண்ட மட்டும் தடுத்து மோதியபோது, அவன் வாள் கையிலிருந்து தெறித்து சற்றுத் தள்ளிப்போய், 'டங்'கென்று விழுந்தது.
பூங்குழலியைப் பார்த்தால், பயிற்சி பெற வந்தவள் போலத் தெரியவில்லை; பயிற்சியை வெற்றிகரமாக முடித்துவிட்டு வந்தவள் போலிருந்தது. அவளுடைய திறமையைக் கண்டு எல்லாருக்கும் மகிழ்ச்சி ஏற்பட்டது. தங்களையும் மறந்து கைத்தட்டினர். அமைச்சர் அறிவுமதி, முதல் கோணல் முற்றும் கோணலாகி விடுமோ என அச்சமடைந்தார்.
வாள் திடீரென்று கையிலிருந்து தெறித்துப் போய்விட்டதால், வடிவழகனுக்கு மணிக்கட்டில் வலி ஏற்பட்டது. மறுபடியும் அவனால் வாளை கையில் எடுக்க முடியவில்லை. 'என்னை மன்னித்து விடுங்கள் அமைச்சர் பெருமானே...' என்பது போல அமைச்சரைப் பார்த்தான் வடிவழகன்.
அடுத்தது வில்வித்தை வில்லாளன் வந்தான். சபையினரை வணங்கினான். பிறகு ஒரு வில்லை எடுத்து பூங்குழலியிடம் கொடுக்க, ஆயுதமேடை சமீபம் அவன் சென்றபோது, அம்புகள் நிறைந்த அம்பார துணியை தன் வலதுகைப்பக்கமாக கொண்டு வந்து இடுப்பில் கட்டி, ஒரு வில்லை எடுத்து அதன் நாணை ஒரு சுண்டு சுண்டிக் கொண்டிருந்தாள் பூங்குழலி.
அதைப் பார்த்ததும், வில்லாளன் அசந்துபோய்விட்டான். வாள் வித்தையில் தன் திறமையைக் காட்டியவள், வில்வித்தையில் என்ன ஜாலம் புரியப்போகிறாளோ என்று நினைத்தான். இடது கையில் வில்லை எடுத்து அதை தன் மார்புக்கு எதிரே பிடித்து ஒருமுறை இழுத்துவிட்டாள் பூங்குழலி. அது வளைந்து நின்றது.
''குருவே! நான் வில்லை பிடித்ததும், நாண் ஏற்றியதும் சரிதானே?'' என்று கேட்டாள் பூங்குழலி.
''மிகவும் சரியே இளவரசியாரே... அம்புரா துணியிலிருந்து ஒரு வில்லை எடுத்து, வில்லில் நாணேற்றி, அம்பு பாய்ந்து செல்ல வேண்டிய கூர்மையான பகுதியை முன்பாகவும், வளைந்து நாணேற்றிய நாணில் வில்லின் பிற்கடைசி பக்கத்தையும் பொருத்தி, வில்லை எவ்வளவு வளைக்க முடியுமோ, அவ்வளவு பின் பக்கம் வளைத்து, அதோ சற்று தூரத்தில் பூஜ்ய வடிவம் நீல வண்ணத்தில் தீட்டப்பட்டுள்ளதே அதை குறிபார்த்து...'' என்று வில்லாளன் கூறிக்கொண்டிருக்கும் போதே, பூங்குழலியின் கை வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு அந்த பூஜ்ய வடிவ நீலநிற வட்டத்தினுள் பாய்ந்து, செருகி மேலுங்கீழும் ஆடியது.
எப்போது பூங்குழலி அம்பு எய்யப்பட வேண்டிய இடம் பார்த்து குறி வைத்தாள் என்பது எதுவுமே தெரியாமல் சரியாக வில்லை வளைத்து இலக்கு நோக்கி அம்பை விட்ட அவளுடைய திறமையில் எல்லாரும் வாய்ப்பிளந்து பார்த்தனர்.
அசந்துபோய் நின்ற வில்லாளன், சொல்லிக் கொடுப்பதற்கு முன்பே செய்து முடிக்கிற இவளை தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று தெரிந்து தலை குனிந்தான்.
''மற்ற பயிற்சிகளை நாளை தொடரலாம்,'' என்று முடிவெடுத்து, அனைவரும் அங்கிருந்து புறப்பட்டனர். புறப்படுவதற்கு முன்பு, அரசரிடம் சென்று பூங்குழலியைப் பாராட்டினர்.
அமைச்சர் அறிவுமதியால் முடியவில்லை. தம் முயற்சிகள் இப்படி முறியடிக்கப்படுகின்றனவே! அடுத்து, தோல்வியே அடைய முடியாத ஏதாவது ஒரு முயற்சியை செய்தே ஆக வேண்டுமென்று எண்ணினார்.
''பேரறிவாளா... பயிற்சிக்கு வந்த அன்றே எப்படி பூங்குழலியால் இவ்வளவு வெற்றிகரமாக செயல்பட முடிந்தது?'' என்று கேட்டான் புலந்திரன்.
''பூங்குழலி அறிவுமிகுந்தவள் புலந்திரன். பட்டத்து யானையால் தான் தேர்ந்தெடுக்கப்பட்டதை விரும்பாதவர்கள் தன்னை ஒழிக்க திட்டமிடுவர் என்பதை முன்பாகவே யூகித்துக்கொண்டு, அரண்மனை நூலகம் சென்று அங்குள்ள போர்முறை ஏடுகள் நூல்களை எல்லாம் திரும்ப திரும்பப் படித்து அதை எதிர்கொள்ள தன்னை தயார்படுத்திக் கொண்டு விட்டாள் பூங்குழலி!'' என்றான் பேரறிவாளன்.
(- தொடரும்)
