sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/யானையாக ஆசை!

யானையாக ஆசை!

யானையாக ஆசை!


PUBLISHED ON : ஜூன் 12, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 12, 2015


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒரு புற்றில் எறும்பு ஒன்று வசித்து வந்தது. ஒருநாள், அந்த எறும்பானது தனது புற்றுக்குள் இருந்தபடியே, நீண்ட நேரமாக சிந்தனை செய்தது. அப்போது அதன் மனதில் ஓர் யோசனை தோன்றியது.

நாம் எத்தனை நாட்கள்தான் இந்த புற்றின் உள்ளேயே சிறிய உருவமாக இருப்பது. நாம் யானையைப் போன்று பெரிய உருவமாக மாற வேண்டும். இந்த உலகத்தில் எல்லா இடமும் சென்று சுற்றிப் பார்க்க வேண்டும். நாம் யானை வடிவத்தில் எல்லாரையும் பார்க்க வேண்டும் என்று தன் மனதுக்குள், ஆசை கொண்டது.

மெதுவாக புற்றில் இருந்து வெளியே வந்தது எறும்பு. நாம் யானையாக மாற வேண்டுமென்றால் என்ன செய்வது என்று பலமாக யோசனை செய்தது. அதற்கு எந்த யோசனையும் தோன்றவில்லை. நீண்ட நேரம் யோசனை செய்த படியே மலையடிவாரத்தில் அப்படியும், இப்படியுமாக ஊர்ந்து சென்று கொண்டிருந்தது.

அந்த நேரத்தில் எறும்பின் அருகே ஒரு ஓணான் வந்தது.

''ஓணானே சற்று நில். எனக்கொரு யோசனையைச் சொல்,'' என்றது எறும்பு.

''எறும்பே, உனக்கென்ன யோசனையை நான் சொல்ல வேண்டும். நீ என்னிடம் யோசனை கேட்பதைப் பார்க்கையில், எனக்கு வியப்பாகத்தான் இருக்கிறது,'' என்றது ஓணான்.

''ஓணானே, இது உனக்கு வியப்பு ஏற்படும் கேள்விதான். என்னுடைய கேள்விக்கு தக்க முறையில் நீ பதில் சொல்வாய் என்று எதிர் பார்க்கிறேன்,'' என்றது எறும்பு.

''முதலில் உன்னுடைய கேள்வியைக் கேள்,'' என்று ஆர்வமாக கேட்டது ஓணான்.

''ஓணானே, நான் யானையைப் போன்ற பெரிய உருவமாக மாற வேண்டும். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டது எறும்பு.

இதனைக் கேட்டதும் ஓணான் திடுக்கிட்டது.

''எறும்பே, இதென்ன ஆசை. உனக்கேன் இந்த ஆசை ஏற்பட்டது? யானையைப் போன்று உன்னால் எப்படி உருவம் மாற முடியும்? இதெல்லாம் நடக்காத கதை. உன்னுடைய எண்ணத்தை மாற்றிக் கொள். உன் கேள்வியானது எனக்கு வேடிக்கை யாகத்தான் இருக்கிறது,'' என்றபடி சென்றது ஓணான்.

இந்த ஓணானுக்கு நமக்கு ஆலோசனை வழங்கும் தகுதியில்லை என்றே நினைக்கிறேன். அதனால் நாம் வேறு யாரிடமாவது ஆலோசனையை கேட்கலாம் என்று முடிவு செய்தது எறும்பு. உடனே அங்கிருந்து வேறு இடத்திற்கு ஊர்ந்து சென்றது. அந்த நேரத்தில் எறும்பின் அருகே ஒரு தவளையானது வந்தது.

அந்தத் தவளையைப் பார்த்தது எறும்பு.

''எறும்பே, என்னை நோக்கியே வருகிறாயே... என்னால் உனக்கு ஏதாவது உதவிகள் ஆக வேண்டுமா?'' என்று கேட்டது தவளை.

''ஆமாம் தவளையே, ஒரு உதவியின் பொருட்டுத்தான் உன்னிடம் நான் வந்துள்ளேன். இப்போது எனக்கு நீ தக்க முறையில் ஆலோசனை கூறவேண்டும்,'' என்றது எறும்பு.

''எறும்பே, நீ என்னிடம் என்ன கேட்கப் போகிறாய்? அதனை எனக்குத் தெளிவாக எடுத்துக்கூறு,'' என்றது தவளை.

''தவளையே, நான் என்னுடைய சிறிய உருவத்தை மாற்றி, யானையைப் போன்று பெரிய உருவமாக மாற வேண்டும். அதற்குத் தக்க முறையில் உன்னுடைய ஆலோசனையைக் கூறு,'' என்றது எறும்பு.

''எறும்பே, இதென்ன முட்டாள்தனமான கேள்வியாக இருக்கிறது. உன்னுடைய முட்டாள்தனமான கேள்விக்கு நான் பதில் சொல்ல முடியாது,'' என்று வேறு பக்கமாக சென்றது தவளை.

அதனைக்கண்டு எறும்பு ஆத்திரமடைந்து, 'என்னை முட்டாள் என்று சொல்கிறாயா? எனக்கு யோசனை சொல்கிற அளவுக்கு உனக்கு அறிவில்லை என்றே நினைக்கிறேன். அதனால்தான் எனக்கு ஆலோசனை கூறாமல் ஓடுகிறாய்' என்று மனதிற்குள் கூறிக் கொண்டது.

பின்னர் அந்த இடத்தைவிட்டு வேறு இடத்தை நோக்கி ஊர்ந்து சென்றது. அப்போது எறும்பின் எதிரே ஆமை ஒன்று வந்தது.

''ஆமையே, சற்று நில். எனக்காக வேண்டி நேரத்தை ஒதுக்கி, என் கேள்விக்கு ஆலோசனை வழங்கு,'' என்றது எறும்பு.

''எறும்பே, நீ என்ன கேட்கப் போகிறாய்?'' என்று ஆவலோடு கேட்டது ஆமை.

''ஆமையே, நான் யானையைப் போன்று பெரிய உருவமாக மாற வேண்டும். அதற்கு நீதான் ஆலோசனை கூற வேண்டும்,'' என்றது எறும்பு.

''எறும்பே, உனது பேச்சைக் கேட்கிறபோது எனக்கு வியப்பும், சிரிப்பும் ஏற்படுகிறது. கடவுள்தான் நம்மைப் படைத்துள்ளார். நீ யானையைப் போன்று உருவம் மாற வேண்டுமென்றால் கடவுளிடம் சென்று முறையிடு. கடவுள் மனது வைத்தால்தான் உன் எண்ணம் நிறைவேறும்,'' என்று கூறியபடி சென்றது ஆமை.

ஆமையின் கருத்தை எறும்பும் ஏற்றுக்கொண்டது.

''ஆமையின் கருத்து சரியாகத் தான் இருக்குமென்று தெரிகிறது. அதன்படியே நாம் நடந்து கொள்ளலாம்,'' என்று முடிவு செய்தது எறும்பு.

நீண்ட நேரமாக யோசனை செய்த எறும்பானது ஒரு முடிவுக்கு வந்தது. பின்னர் அது பெரிய பாறை ஒன்றின் மீது ஏறியது. கடவுளை நினைத்துத் தவம் செய்யத் தொடங்கியது.

பத்து நாட்கள் எறும்பு உணவு எதுவும் உட்கொள்ளாமல் கடுமையான தவத்தில் இருந்தது. எறும்பின் தவத்தைக் கண்டு கடவுள் மனம் உருகினார்.

''எறும்பே, உன்னுடைய கடும் தவத்தைக் கண்டு நான் மனம் உருகினேன். நீ எதற்காக என்னை நினைத்து தவம் செய்தாய்?'' என்று கேட்டார் கடவுள்.

''கடவுளே, நான் தோற்றத்தில் யானையாக வேண்டும். எறும்பாக இருக்கும் நான் யானையாக மாற வேண்டும் என்பதற்காகவே இந்தத் தவத்தை மேற்கொண்டேன்,'' என்றது எறும்பு.

''எறும்பே, இதோ இப்போதே உன்னை நான் யானையாக மாற்றுகிறேன்,'' என்று கூறியபடி எறும்பை யானையாக மாற்றிவிட்டு மறைந்தார். தான் யானையாக மாறியதைக் கண்டு எறும்பு மகிழ்ச்சியடைந்தது.

உடனே அது தனது இருப்பிடத்தை விட்டு காட்டிற்குள் சென்றது. காட்டிற்குள் இரண்டு சிங்கங்கள் யானையைத் தாக்க முயற்சித்தன. சிங்கத்தின் பிடியில் இருந்து தப்பித்து ஓடியது யானை.

''ஐயோ, இதென்ன கொடுமை. நாம் முன்பின் யோசிக்காமல் காட்டிற்கு வந்து விட்டோமே. காட்டில் நமக்குப் பெரிய ஆபத்து இருக்கிறதே. நம்மைத் துரத்தி வருகின்ற இரண்டு சிங்கங்களும் நம்மை அடித்தே கொன்றுவிடும் போலத் தெரிகிறதே. நாம் அதற்குள் ஓடி உயிர் பிழைத்திட வேண்டியதுதான்,'' என்று முடிவு செய்தபடி வேகமாக ஓட்டமெடுத்தது யானை.

ஒருவழியாக காட்டை விட்டுத் தப்பித்து ஒரு கிராமத்தின் பக்கமாக வந்தது. யானையைக் கண்டதும் கிராமத்து மக்கள் எல்லாரும் அலறி அடித்தபடி ஓடத் தொடங்கினர்.

''ஐயோ, காட்டிற்குள் இருந்து யானை வந்து விட்டதே. உடனே இந்த யானையைப் பிடித்துச் செல்லும்படி யானைப் பாகனுக்கு தகவல் அனுப்ப வேண்டும். இல்லையென்றால், இந்த யானையானது நம்மைக் கொன்றாலும் கொன்று விடும்,'' என்று யானைப் பாகனுக்குத் தகவல் அனுப்பினர்.

உடனே யானையானது திடுக்கிட்டது.

'ஐயோ, நம்மைப் பிடித்து என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை' என்று கவலையுடன் செய்வதறியாது திகைத்தது.

சிறிது நேரத்தில் யானைப் பாகன் ஒருவன் ஊருக்குள் வந்தான்.

அவன் யானையின் அருகில் சென்றான். பின்னர் அதன்மீது ஏறி அமர்ந்து கொண்டான். யானையை ஓட்டியபடி தனது இருப்பிடத்திற்குப் புறப்பட்டான். வழியெங்கும், யானையைப் பிச்சையெடுக்க விட்டான்.

யானையோ மனம் வருந்தியது.

'ஐயோ, இதென்ன கொடுமை. நாம் இந்த யானைப்பாகனுக்காக பிச்சையெடுக்க வேண்டுமா? நம் உழைப்பில் இவன் உயிர் வாழ நினைக்கிறானே. நாம் அநியாயமாக இவனிடம் மாட்டிக் கொண்டோமே' என்று கவலையடைந்தது யானை.

தன் இருப்பிடத்திற்கு வந்த யானைப் பாகனோ யானையை ஒரு அறையில் விட்டு அறைக்கதவை அடைத்துக் கொண்டான். அதற்குச் சரியானபடி தீனி கொடுக்கவில்லை. யானை பசியால் வாடியது.

இதென்ன கொடுமை. நாம் யானையாக மாறி இத்தனை துன்பங்களையும் அனுபவிக்க வேண்டுமா? நாம் எறும்பாக வாழ்ந்தபோது நிம்மதியாக இருந்தோம். ஆனால் பேராசையின் காரணமாக இப்படி பெரியதொரு துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

இந்தத் துன்பத்தில் இருந்து நாம் விடுபட வேண்டுமென்றால் மீண்டும் கடவுளை நினைத்துத் தவமிருக்க வேண்டியதுதான். கடவுள் ஒருவரால்தான் நமக்கு தக்க உதவியை செய்ய முடியும் என்று மனதில் எண்ணியவாறு கடவுளை நினைத்தது யானை.

யானையின் நிலைமையை உணர்ந்து கடவுளும் அதன் முன்னே தோன்றினார்.

உடனே யானையானது. ''இறைவா, என்னை நீ முன்புபோல் எறும்பாகவே மாற்றி விடு. நான் இங்கே ஒவ்வொரு நிமிடமும் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்,'' என்று கண்ணீர் விட்டது.

கடவுளும் யானையை எறும்பாக மாற்றினார்.

''எறும்பே, உன்னுடைய இயல்பு நிலையை மறந்து உன்னை நீயே உணர்ந்து கொள்ளாமல் யானையாக மாற வேண்டும் என்று பேராசைப் பட்டாய். அதனால் உனக்கு ஏற்பட்ட துன்பத்தையும் உணர்ந்து கொண்டாய்.

இனிமேலாவது உன்னை நீயே உணர்ந்து கொள். உருவத்தில் சிறியவனாக இருந்தாலும் உன்னிடம் சுறுசுறுப்பு, சேமிப்பு போன்ற உயர்ந்த குணங்கள் இருக்கிறது என்பதை உணர்ந்து கொள். உன்னை நீயே தாழ்வாக நினைக்காதே,'' என்றார் கடவுள்.

எறும்பும் கடவுளின் அறிவுரையை ஏற்றுக் கொண்டது. அதன் பின்னர் கடவுள் மறைந்து விட்டார். எறும்பு தன் இருப்பிடத்திற்கு சந்தோஷமாக புறப்பட்டு சென்றது.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us