PUBLISHED ON : ஜூன் 07, 2013
சாம் தன் அப்பாவின் வரவிற்காகக் காத்திருந்தான். இரவில் அவன் அப்பாவுடன் அமர்ந்து சாப்பிட்டால்தான் அவனுக்குத் தூக்கம் வரும். ஆகவே, பாடங்களை எல்லாம் முடித்துவிட்டுக் காத்திருப்பான். கேஸ் விஷயமாக வெளியூர் போக வேண்டி இருந்தால், அவர் முன்கூட்டியே போன் செய்து தெரிவித்து விடுவார், அவன் காத்திருக்கக் கூடாது என்பதற்காக.
அன்று அவர் வெளியூர் தான் போயிருந்தார். ஆனால், எப்படியும் இரவு திரும்பி விடுவதாகக் கூறி இருந்ததினால், சாம் காத்திருந்தான்.
சாப்பாட்டுக்காக மட்டுமல்ல, அப்பா கொண்டு வரப்போகும் செய்திக்காகவும் தான். அன்று பட்டப்பகலில் அடுத்திருந்த கிராமத்தில் துப்பாக்கி முனையில் பாங்க் கொள்ளை அடிக்கப்பட்டது. இருபது லட்ச ரூபாய். கொள்ளையர் தப்பிவிட்டனர். அது பற்றி விசாரிக்கவே, ஸ்தலத்துக்குப் போயிருந்தார் சாமின் அப்பா. அவர் இன்ஸ்பெக்டராயிற்றே!
வீட்டின் வெளியே பைக்கின் 'டட் டட் டட்' ஒலி வரவரப் பெரிதாகி வீட்டுவாசலில் வந்து நிற்பதற்கும், சாம் கதவைத் திறப்பதற் கும் சரியாக இருந்தது. அவன் யூகம் பொய்ப்பதே இல்லை. அவன் அப்பாதான்.
களைத்துப் போய் வந்திருந்ததால் பாங்க் கொள்ளை பற்றி எதுவும் கேட்கவில்லை அவன். அவர் உடைகளைந்து, உடல் சுத்தம் செய்து கொண்டு, உணவு மேஜை முன் வந்து அமரும் வரை பொறுமையை கடை பிடித்தான். அவன் அம்மா தட்டுக்களில் சுடச்சுட தோசைகளைப் பரிமாறினாள். சட்னியும், சாம்பாரும் வைக்கப்பட்டிருந்தன.
ஆர்வத்தோடு உண்ண ஆரம்பித்த அவன் அப்பா, சாப்பிட்டுக் கொண்டே கேட்டார்.
''என்ன சார்! பேச்சையே காணோம்?'' என்று வம்புக்கிழுத்தார் துப்பறியும் புலியான தம் மகனை.
''வயிற்றுக்கு ஈயப்பட்ட பிறகே வம்புக்கு இடம் என்பது அம்மாவின் கட்டளை! அதுதான் இந்த மவுனம்!'' என்றான் சாம்.
''நியூஸ் பாத்திருப்பியே...!''
''பாத்தேன், மாலைச் செய்தித்தாளில். திருடர்கள் இருவர் துப்பாக்கி முனையில், பாங்க் ஊழியர்களை மிரட்டி, ஓர் அறையில் அடைத்து விட்டுக் கொள்ளையடித்துச் சென்ற பணம் இருபது லட்சம். பத்திரிகை கூறும் செய்தி இவை. ஸ்தலத்துக்குப் போன உங்களிடமிருந்து இன்னும் பல சுவையான தகவல்களை எதிர்பார்க்கிறேன்,'' என்றான் சாம்.
''பத்திரிகை நிருபர் பாணியில் பிரமாதமாகப் பேசுகிறாயே!'' என்று தம் மகனைப் பாராட்டியவர் சாப்பாட்டை முடித்துக் கொண்டு, கூடத்துக்கு வந்து அமர்ந்தார்.
''அது ஒரு ஒதுக்குப்புறமான கிராமம். மாதத்தின் முதல் வாரத்தில் தான் வாடிக்கையாளரின் கூட்டமிருக்கும். மற்ற நாட்களில் அதிகமிருக்காது. இன்று காலை பதினோரு மணிக்கு ஒரு காரில் இரண்டு பேர் பாங்க்குக்கு வந்திருக்கின்றனர். தெருவில் ஆள் நடமாட்டமில்லை. ஆண்கள் வயல் வெளி, அங்கு இங்கு என்று போயுள்ள நேரம். பாங்கில் இரண்டொரு வாடிக்கையாளர்கள் தான். உள்ளே வந்த இருவரும் கண்மட்டும் தெரிய, வாய், மூக்கை கைக்குட்டையால் மறைத்துக் கொண்டிருந்தனர். டிப்டாப்பாக உடை அணிந்திருந்த அவர்கள் வேகமாகச் செயல்பட்டனர்.
''காவல்காரர் உட்பட பாங்க் சிப்பந்திகள், வாடிக்கையாளர் அனைவரையும் சத்தம் போட்டால் சுட்டுவிடுவதாக மிரட்டி, ஒரு அறையில் அடைத்தனர். காஷியர் கையாலேயே பணப்பெட்டியை காலி செய்து, தான் கொண்டு வந்திருந்த பையில் நிரப்பச் சொன்னான் ஒருவன். மற்றவன் காஷியரையும் அந்த அறைக்குள் கொண்டு போய்த் தள்ளினான். அப்படி முடக்கப்பட்டவர்களில் பாங்க் காவலாளி காளியப்பன் மோட்டாப் பேர்வழி, பலசாலி. ஆனாலும் துப்பாக்கி முன் என்ன செய்வது?
''தப்பிச் செல்லும்போது கொள்ளையரில் ஒருவன் என்ன நினைத்துக் கொண்டானோ தெரியவில்லை. காளியப்பனை அங்கு விட்டால் ஆபத்து என்று கருதி, அவனை வெளியே இழுத்து வந்து, அவன் வாயின் நடுவே கைக் குட்டையை வைத்துத் தலைக்குப் பின்னால் இழுத்து கத்த முடியாதபடி முடிபோட்டிருக்கிறான். பிறகு, கைகளையும் பின்னால் சேர்த்துக் கட்டித் தங்கள் காரிலேயே கொண்டு போயிருக்கின்றனர்.
''நடுவழியில் தங்களுடன் கொண்டு வந்திருந்த டின்னிலிருந்து காருக்கு பெட்ரோல் நிரப்பியிருக்கின்றனர். அதன் பிறகு காளியப்பனை கொண்டு போக விரும்பாத அவர்கள் கட்டைக் கூட அவிழ்க்காமல் அவனையும், காலி பெட்ரோல் டின்னையும் தூக்கிப் பாதையோரத்தில் வீசிவிட்டு, பறந்திருக்கின்றனர்.
''நான் தகவல் வந்து அங்கு போன போது காவல்காரக் காளியப்பன் பாங்குக்குத் திரும்பி இருந்தான். பாங்க் கொள்ளையிடப் பட்டதைக் கேள்விப்பட்டு அக்கம் பக்கத்துக் கிராமங்களிலிருந்தெல்லாம் ஜனங்கள் கூடிட்டாங்க. பாங்க் ஊழியர்களும், கொள்ளையர்களுடன் மிக நெருக்கமாகக் காரில் அமர்ந்து போன காளியப்பனும் கூறிய அடையாளங்களிலிருந்து போலீஸ் பைலில் உள்ள இரண்டு பழங்குற்றவாளிகளின் போட்டோக்களைக் கொண்டு வந்திருக்கிறேன்,'' என்று முடித்தார் சாமின் அப்பா.
'கொள்ளையடித்தவர்களைப் பிடிக்க முடியல்லே... சரியான அடையாளமும் தெரியல்லே...' என்று தனக்குத் தானே கூறிக்கொண்டார். சாம் சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்தான்.
பிறகு, ''ஏதோ இரண்டு கேடிகளின் போட்டோக்களை சந்தேகத்தின் பேரில் கொண்டு வந்ததாகக் கூறினீர்களே... எங்கே காட்டுங்கள் பார்க்கலாம்,'' என்றான் அப்பாவிடம்.
அவர் இரு போட்டோக்களை மேஜை மீது வைத்தார்.
''அவர்கள் கூறிய அங்க அடையாள வர்ணனையிலிருந்து இவ்விரு நக்சலைட் தீவிரவாதிகளையும் பொறுக்கி இருக்கிறேன். இது வேலு உயரமானவன், ஆபத்தானவன், வாலிபன், கட்டான உடல். இவன் காத்தான். ராட்சத உருவம். யானை பலம். எதற்கும் துணிந்தவன்,'' போட்டோவிலுள்ள இருவரைப் பற்றியும் விளக்கம் அளித்தார் இன்ஸ்பெக்டர்.
''இரு போட்டோக்களையும் மாறி, மாறிப் பார்த்த சாம் ஒரு போட்டோவைத் தன் அப்பாவிடம் கொடுத்து இவன்தான் கொள்ளையின் தலைவன். காலி பெட்ரோல் டின்னிலுள்ள கைரேகைகளையும், இவன் கைரேகைகளையும் ஒப்பிட்டுப் பாருங்கள். பாங்க் கொள்ளைக்குத் தலைமை தாங்கி வந்தது இவன்தான் என்பது தெரியும்,'' என்றான்.
விடைகள்: சாம் தேர்ந்தெடுத்த போட்டோ காத்தானுடையது. மோட்டாப் பேர்வழியான காளியப்பனை ஒரு கையினால் தூக்கி வீசுமளவுக்கு யானை பலம் வேண்டும். அத்தகையவன் காத்தான் தான். காலி பெட்ரோல் டின்னின் கைப்பிடியிலிருந்த விரல் அடையாளம் போலீஸ் ரிகாட்டிலிருக்கும் காத்தானின் கைரேகைக்கு ஒத்தியிருந்தது. குற்றவாளி யார் என்பது உறுதியாகி விட்டது. இனி அவனைப் பிடிக்க வேண்டியது போலீஸின் கடமை. எப்படி சாமின் மூளை.
