PUBLISHED ON : ஜூன் 07, 2013

எவ்வித முன்னறிவிப்புமின்றி பூமி குலுங்குகிறது. கட்டடங்கள் சரிகின்றன... பூமி பிளக்கிறது... மக்கள் பீதியினால் அலறியடித்துக் கொண்டு இங்கும், அங்கும் செய்வதறியாது ஓடுகின்றனர்.
தீ பற்றிப் பரவுகிறது... புகையும், புழுதியும், இடிபாடுகளும், மக்களின் மரண ஓலமும் இயற்கையின் சீற்றம்.
நம் புராண இதிகாசங்களில் மட்டுமல்ல... கிரேக்க, ரோமானியப் புராணங்களிலும் பூமி அதிர்வுக்கான கதைகள் உள்ளன. இவ்வுலகை அஷ்டதிக்கஜங்கள் தாங்குவதாக எட்டு திக்குகளிலும் எட்டு யானைகள் தாங்கி நிற்பதாக வருணிக்கப்படுகின்றன. யானை கள் மட்டுமா? கூர்மம் எனப்படும் ராட்சஸ ஆமையின் மீதுதான் பூமி நிறுத்தப்பட்டிருப் பதாகவும் ஒரு நம்பிக்கை. கிரேக்க புராணத்தில் அட்லஸ் என்பவன் பூமியைச் சுமந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இப்படி பூமியைச் சுமப்பவர்கள்- பூமியின் கனம் தாங்காமல் தங்கள் உடல்களைத் தளர்த்திக் கொள்ள ரிலாக்ஸ் அல்லது சுமையைத் தோள் மாற்றிக் கொள்ள முற்படும் போதே பூகம்பங்கள், பூமி அதிர்வு ஏற்படுகின்றன என்பதெல்லாம் விஞ்ஞான யுகத்துக்கு முற்பட்ட காலத்து நம்பிக்கைகள்.
இன்றைய விஞ்ஞான ஆராய்ச்சிப் படி பூமி தன்னை நிலையாக ஒழுங்குபடுத்திக் கொள்ளச் செய்யும் முயற்சியின் விளைவே புவியதிர்வுகள் என்று விளக்கியுள்ளனர். பூமியின் சரித்திரத்தை ஆராயும் நிபுணர்களான 'ஜியாலஜிஸ்ட்' பூமி தோன்றிய போது மிகமிகச் சூடாகவும், மிருதுவான பொருளினால் ஆனதாகவும் இருந்தது. பிறகு பல மில்லியன் ஆண்டுகள் தொடர் மழையினால் பூமியின் வெப்பம் தணிந்து, குளிர்ந்து, மிருதுவான பொருள், பூமி உருண்டையின் மேல் போர்வையான மண் (ஓடு) கெட்டிப்பட்டது. பூமியின் இந்த கெட்டிப்பகுதியான ஓட்டுக்குக் கீழே, பூமி மிருதுவாகவும், அதற்கும் கீழே கொப்பளிக்கும் தீக்குழம்போடுமிருக்கிறது. அடுப்பின் மீதுள்ள பாத்திரத்தில் கஞ்சி, கொப்புளம் விட்டுக் கொதிப்பது போல.
இப்படி கொப்புளமிட்டுக் கொதிக்கும் நிலக்குழம்பும், மிருதுவான கெட்டிப்படாத மண்ணும் ஒன்றோடு ஒன்று மோதி தங்களை நிலைப்படுத்திக் கொள்ளப் போராடுகின்றன. இவற்றின் இந்தப் போராட்டம் நாம் உணருவதுபோல தீவிரமானதல்ல. ஆகவே, பூமிக்குள் நிகழும் இந்த அழுத்தங்களை நாம் அறிவதில்லை; அதாவது பாதிப்பதில்லை.
சில நேரங்களில் அந்த அழுத்தப் போராட்டம் எல்லை மீறிப் போகவே பூமியினாலும் தாங்க முடியாமல் பெருமூச்சு விடுகிறது. இப்பெரு மூச்சே பூமி அதிர்வுகளாக நாம் உணருகிறோம் என்று விளக்குகின்றனர்.
பூமி பெருமூச்சு விடும் போது பூமிக்கடியில் உள்ள பலவீனமான பகுதிகள், பாறைகள் நகருகின்றன. இந்த அசைவு, அதிர்வு பூமியின் மேல் பகுதியை அடையும் போது, அங்குள்ள கட்டடங்கள் நிலை குலைந்து சரிகின்றன. பூமியின் மேல்பரப்பில் உள்ள பொருள்கள் ஒன்றோடு ஒன்று நெருக்கிக் கொண்டு இணைவதினால் ஏற்படுகிறது.தரையில் ஜமுக்காளத்தை விரிக்கும்போது அதன் இருமுனைகளும் எப்படிச் செயல்படுகிறதோ அதே போல பூமியின் மேல் பக்கத்தில் மடிப்புகள் ஏற்படுகின்றன. ஜமுக்காளம் போன்றதில்லையே பூமியின் மேல்பரப்பு (தரை). ஆகவே மடியும் போது வெடிப்புகள் ஏற்படுகின்றன. வெடிப்பில் ஒருபகுதி கீழே அழுந்த, மற்றொரு பகுதி மேலே உயருகிறது. இவ்வாறு பூமியின் மேல் பகுதியின் ஓட்டில் இடமாற்றம் ஏற்படுகிறது.
(இடது-பூமிக்கடியில் பாறைகள் மடிந்து பூமிக்கு மேலே தள்ளப்படுகிறது (புஷ்)வலது பாறை அடுக்குகள் உடைந்து மேலும், கீழுமாக மாறி பூமியின் மேல் பரப்பில் மாற்றம் ஏற்படுகிறது)
நிலநடுக்கத்தின் போது பூமியின் ஓடு மேலும், கீழுமாக இடம் மாறுவது போல படுக்கை நிலையிலும் முன்னும் பின்னுமாக நகருகிறது. படுக்கை நிலையில் (கிடைக் கோட்டு நிலையில்) ஏற்படும் மாற்றங்களே மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். பூமியின் அடியில் ஏற்படும் இந்த நடுக்கம், பூமி தன்னை ஒழுங்கு படுத்திக் கொள்ளும் செயல். ஒருமுறை ஏற்படுவதினால் மட்டும் நாசம் விளைவிப்பதில்லை.
ஒரு அதிர்வைத் தொடர்ந்து ஏற்படும் அடுத்தடுத்த அதிர்வுகளே நாச முண்டாக்கு பவை. பூமி அதிர்வுகளின் அளவை அறியும் கருவியின் பெயர் 'சீஸ்மோகிராப்' ஆண்டு தோறும் சீஸ்மோகிராப் கருவி முப்பதி னாயிரம் நில நடுக்கங்களைப் பதிவு செய்கிறது. ஆனால், இவற்றில் நூறு அதிர்வுகள் மட்டுமே கடுமையானவைகளாக (சீரியஸ்) இருக்கும்.
***
