PUBLISHED ON : ஜூன் 07, 2013

முன்னொரு காலத்தில் மக்கள் அதிகம் கேள்விப்பட்டிராத நாடு ஒன்று இருந்தது. அந்த நாட்டு ஏரிக்கரையில் வெட்டுக்கிளியும், கொசுவும் பேசிக் கொண்டிருந்தன.
''கொசுவே! நான் அதிக உயரம் தாவுவேன். என்னைப் போல உயரம் தாவுபவர் யாரும் இல்லை,'' என்று பெருமையுடன் சொன்னது வெட்டுக்கிளி.
அதற்குக் கொசு, ''உன்னை விட நான் அதிக உயரம் தாவுவேன்,'' என்று பெருமை பேசியது.
அந்த ஏரியில் சோம்பலுடன் இருந்த விரால் மீன் அவற்றின் பேச்சைக் கவனித்தது.
''நான் தாவ மாட்டேன். தாவினால் உங்கள் இருவரையும் விட அதிகம் உயரம் தாவுவேன்,'' என்றது விரால் மீன்.
இதைக் கேட்ட வெட்டுக் கிளியும், கொசுவும் கோபம் கொண்டன.
''நான்தான் அதிக உயரம் தாவுவேன்,'' என்றது வெட்டுக்கிளி.
''இல்லை, நான்தான் அதிக உயரம் தாவுவேன்,'' என்றது கொசு.
அவற்றால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை.
''நம்மில் யார் அதிக உயரம் தாவுகின்றனர்? என்று போட்டி வைத்து முடிவு செய்வோம்,'' என்றது வெட்டுக்கிளி.
''நான் அதற்கு ஒப்புக் கொள்கிறேன்,'' என்றது கொசு.
ஏதும் பேசாமல் அமைதியாக இருந்தது விரால் மீன். அதுவும் போட்டிக்கு ஒப்புக் கொண்டதாக இரண்டும் நினைத்தன.
இந்த விந்தையான போட்டி பற்றிய செய்தி எங்கும் பரவியது. எல்லாரும் அதைப் பற்றியே பேசத் தொடங்கினர்.
இதைக் கேள்விப்பட்ட அந்நாட்டு அரசன்,''அமைச்சரே! வெட்டுக்கிளிக்கும், கொசுவிற்கும், விரால் மீனிற்கும் தாவும் போட்டி நடக்கப் போகிறதாமே... உண்மையா?'' என்று கேட்டார்.
''உண்மைதான் அரசே,'' என்றார் அமைச்சர்.
''இப்படி ஒரு போட்டி எந்த நாட்டிலும் நடந்தது இல்லை. இந்தப் போட்டியை நாமே சிறப்பாக நடத்தினால் என்ன?'' என்று கேட்டார் அரசர்.
''அரசே! இந்தப் போட்டியை நீங்கள் நடத்தினால் உங்கள் புகழ் எங்கும் பரவும். அரண்மனை முன் உள்ள பெரிய திடலில் போட்டியை வைத்துக் கொள்ளலாம். எல்லாரும் பார்த்து மகிழ்வர். போட்டியில் வெல்பவருக்குப் பெரிதாகப் பரிசு தர வேண்டும். அப்போது தான் உங்களுக்குப் பெருமை கிடைக்கும். என்ன பரிசு தரலாம்?'' என்று அமைச்சர் கேட்டார்.
என்ன பரிசு தரலாம் என்று சிந்தித்தார் அரசர். மகளின் நினைவு அவருக்கு வந்தது.
சோம்பேறியான அவள் எதிலும் ஆர்வம் காட்டுவது இல்லை. எப்போதும் தூங்கி வழிந்தபடி உள்ளாள். இந்தப் போட்டி அவளை விழிக்க வைக்கும். உற்சாகத்தைத் தரும் என்று நினைத்தார்.
''அமைச்சரே! போட்டியில் வெல்பவருக்கு இளவரசியைத் திருமணம் செய்து வைத்தால் என்ன?'' என்று கேட்டார்.
''அரசே! அப்படியே அறிவித்து விடலாம்,'' என்றார் அமைச்சர்.
இந்தச் செய்தி நாடெங்கும் அறிவிக்கப்பட்டது. பல நாட்டு அரசர்களுக்கும் ஓலை அனுப்பப் பட்டது. இதை அறிந்த இளவரசி எந்த ஆர்வமும் காட்டவில்லை. என்ன நடந்தாலும் நடக்கட்டும், என்று சலிப்புடன் தூங்கத் தொடங்கினாள்.
போட்டிக்கான நாள் குறிக்கப்பட்டது. அதற்கான முன்னேற்பாடுகள் சிறப்பாகச் செய்யப்பட்டன. விளையாட்டு அரங்கம் கொடி களாலும், தோரணங்களாலும் அழகு படுத்தப்பட்டது.
போட்டியைக் காண்பதற்காகப் பல நாட்டு அரசர்களும் வந்திருந்தனர். பார்வையாளர்கள் இடத்தில் மக்கள் கூட்டம் அலை மோதியது.
அங்கே மேடையில் மணி முடியுடன் பெருமிதமாக வந்து அமர்ந்தான் அரசன். அவன் அருகில் இளவரசி அமர்ந்து இருந்தாள். பளபளக்கும் உடைகளுடன் அவள் காட்சி தந்தாள். அவள் கையில் தங்கத் தாமரை மலர் இருந்தது.
போட்டி நிகழும் இடத்திற்கு வெட்டுக் கிளியும், கொசுவும், விரால் மீனும் வந்தன.
அவற்றைப் பார்த்துக் கூட்டத்தினர் ஆரவாரம் செய்தனர்.
''இந்தப் போட்டியில் நான்தான் வெற்றி பெறுவேன்,'' என்று பெருமையுடன் சொன்னது கொசு.
''நான்தான் வெற்றி பெறுவேன்,'' என்று முழக்கம் செய்தது வெட்டுக்கிளி.
விரால் மீனோ, ஏதும் பேசாமல் சோம்பலுடன் இருந்தது.
இதைக் கவனித்த அரசன், ''அமைச்சரே! இந்த மீன் மற்றவர்களை போலப் பெருமை பேசவில்லை; ஆரவாரம் செய்யவில்லை; செயலில் வீரம் காட்டுபவர்கள் பேச மாட்டார்கள். இந்தப் போட்டியில் இதுதான் வெல்லப் போகிறது,'' என்றான்.
''அரசே! இன்னும் சிறிது நேரத்தில் யார் வெற்றி பெறுவார் என்பது தெரிந்து விடும்,'' என்றார் அமைச்சர்.
போட்டி தொடங்கியது.
முதலாவதாக வந்த கொசு கூட்டத்தினரை வணங்கியது. ''நான் மாவீரர்களின் குலத்தில் பிறந்தவன். எத்தனையோ வீரர்களின் ரத்தத்தைக் குடித்தவன். நான் சுற்றிப் பார்க்காத இடமே இல்லை. என் திறமையை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள்,'' என்று ஆரவாரமாகப் பேசியது.
இதைக் கேட்டுக் கூட்டத்தினர் கை தட்டி, ஆரவாரம் செய்தனர்.
அடுத்ததாக வந்த வெட்டுக்கிளி, எல்லாரையும் வணங்கியது.
''நான் அரச குலத்தில் பிறந்தவன். எப்போதும் பச்சைப் பட்டாடைதான் அணிவேன். என் இனிமையான குரலை எல்லாரும் விரும்புவர்,'' என்றது. இனிமையாகப் பாடியும் காட்டியது.
அதற்கும் மக்கள் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.
மெல்ல அசைந்து, அசைந்து அங்கே வந்தது விரால் மீன். ஏதும் பேசாமல் அப்படியே படுத்துக் கொண்டது.
இதனால் எரிச்சல் அடைந்த கூட்டத்தினர், ''இந்த மீன் ஆறு மாதம் சேற்றுக்குள் தூங்கும். ஆறு மாதம் விழித்து இருக்கும். அசைவதற்கே சோம்பல் படும். இதுவா போட்டியில் வெல்லப் போகிறது?'' என்று பேசத் தொடங்கினர்.
எங்கும் கூச்சலும், குழப்பமுமாக இருந்தது. யார் பேசியதும் காதில் விழவில்லை.
இதைப் பார்த்த அரசன், ''அமைதி! அமைதி! சிறிது நேரத்தில் போட்டி தொடங்கப் போகிறது. அமைதி!'' என்று உரத்த குரலில் கத்தினார்.
கூட்டம் அமைதியானது.
-1 தொடரும்.
