PUBLISHED ON : ஜூன் 14, 2013
சாமைப் பார்த்து அந்தப் பெண் ''திருடன்... திருடன்!'' என்று கூச்சலிட்டாள்!
சைக்கிளின் முன்னால் குனிந்தபடி, வெகுவேகமாகப் பெடல் செய்து பறந்து கொண்டிருந்த சாம், 'க்ரீச்' என்று சடன் பிரேக் போட்டு சைக்கிளை நிறுத்தி, அப்படியே ஒரு ஒடி ஒடித்து அந்தப் பெண்ணின் அருகில் சைக்கிளைச் சாய்த்து, ஒரு காலைத் தரையில் ஊன்றி நின்றான்.
''என்னைப் பார்த்தா திருடன் என்று கத்தினீர்கள்?'' என்று கேட்டான்.
கத்திய பெண்ணுக்கு அதாவது தன் கைப்பையை பறிகொடுத்து நிற்கும் அவளுக்கு சங்கடமாகப் போய்விட்டது. அவள் கைப்பையை பறித்துக் கொண்டு ஓடியது அவன் அல்ல என்று அறிந்தால் சங்கடம் தானே! சாமை அவளுக்குத் தெரியும். ஆகவே, ''எங்கே இப்படி மின்னல் வேகத்தில் சைக்கிளில் போகிறாய்?'' என்று கேட்டாள்.
''ஒரு பந்தயம், நாலாவது அவென்யூ வழியா, 92வது தெருவைக் கடந்து, ஏழாவது அவென்யூவில் புகுந்து, 32வது தெருக்கோடியை யார் முதலில் அடைகிறார் கள் என்று. அதான் வேகமாப் போறேன். பந்தயத்திலே எனக்குத் தோல்விதான். ஜிட்டு இந்நேரம் அங்கே போயிருப்பான்.
அது சரி... என்று ஏதோ கேட்க முயன்ற சாமை அந்தப் பெண்ணே விளக்கினாள்.
''என் கைப்பையைப் பிடிங்கிட்டு ஓடினது நீன்னு நெனைச்சு...!''
''உங்க கைப்பை பறிபோயிடுத்தா?'' சைக்கிளிலிருந்து இறங்கினான் சாம்.
''ஆமா, வீட்டை விட்டு வெளியே வரும் போது யாரோ, ஓசைப் படாமல் பின்னால் வந்து என் கைப்பையை 'லபக்'குனு பிடிங்கிட்டு, என் தலையில் பலமாக அடித்துக் கீழே தள்ளிட்டு ஓடிட்டான்!'' என்றாள் தவிப்பு நீங்காதவளாக.
''அப்படி யாரும் ஓடறதை நான் பார்க்கலியே. ஒருவேளை அவன் வீட்டின் பின்பக்க வழியா ஓடி இருப்பானோ?'' சாம் வரிசை கட்டி நிற்கும் வீடுகளை நோட்ட மிட்டான். அது பணக்காரர்களின் பங்களாக் களைக் கொண்ட அமைதியான அவென்யூ.
''பின்பக்கமா ஓடி இருந்தா என் கைப்பை போச்சுதான். போலீசுக்குப் போன் பண்றேன்,'' என்று நகர்ந்தாள் அந்த பெண். அருகில்தான் அவன் வீடு, போலீஸ் என்றதும் சாமின் துப்பறியும் உணர்வு சிலிர்த்துக் கொண்டது.
''உங்கள் வீட்டில் யாருமில்லையா? உங்கள் பையைப் பறித்ததை யாரும் பார்த்திருக்க வாய்ப்பு உண்டா?'' என்று கேட்டான்.
''இப்போ யாருமில்லே, நான் தனியாத் தான் இருக்கேன். வீட்டைப் பூட்டிக் கொண்டு தான் ஷாப்பிங் கிளம்பினேன்,'' என்றவள் எதையோ நினைத்துக் கொண்டவளாக, ''இரு இரு... வடிவேலு இருப்பான். கேட், வேலிக்கெல்லாம் பெயிண்ட் அடிக்கச் சொல்லி இருந்தேன்!''
வேகமாக நடைபாதையில் பரபரத்த அந்த பெண்ணை, சாம் பின்தொடர்ந்தான். கொல்லைப் பக்கத்து ஷெட்டில் வடிவேலு வெள்ளைப் பெயிண்டை ஒரு டப்பாவிலிருந்து வேறொன்றில் கொட்டிக் கொண்டிருந்தான். இவர்களைப் பார்த்ததும்...
''இந்த டின்னு ஓட்டைம்மா. அதான் வேற டின்னிலே மாத்தறேன்!'' என்றான் தூக்கு டின்னில் உள்ள கவனத்தை திருப்பாமல்.
வடிவேலுவுக்குப் பதினெட்டு வயதிருக்கும். அவனை ரவுடிக் கும்பலிலே பார்த்த நினைவு சாமுக்கு வந்தது.
''இந்தம்மாவோட கைப்பையைப் பிடிங்கிக்கிட்டு யாராவது ஓடினதைப் பார்த்தாயா?'' என்று கேட்டான் சாம் அவனிடம்.
''இல்லையே! நான் எதையும் கேட்கலே. யாரையும் பார்க்கலே. ஐந்து நிமிடமா இந்த ஷெட்டிலே தான் இருக்கேன், '' என்றான் வடிவேலு.
சாம் அந்த ஷெட்டை நோட்டமிட்டான். இந்த ஷெட்டுக்கும் அவன் பெயிண்ட் அடிக்கும் கேட்டுக்குமிடையே ஐம்பதடி தூரமிருக்கும். ஷெட்டிலிருந்து கேட்டுக்குப் போகும் பாதையில் வெள்ளை பெயிண்ட் ஆங்காங்கே ஒழுகிச் சிந்தி இருந்தது. சாம் அதை நோட்டமிடுவதைக் கண்ட வடிவேலு, ''இந்த டின்னுக்கு அடியிலே ஓட்டைன்னு தெரிஞ்சதும், வேற டின்னில் மாத்த ஷெட்டுக்கு வந்தேன். வழியிலே சிந்தி இருக்கிற பெயிண்டே அதுக்கு சாட்சி. நான் திருடனைப் பார்க்கல்லே...'' என்றான்.
''இந்தப் பாதையிலேயே நீ எங்கே இருந்திருந்தாலும் திருடன் இவங்களைத் தாக்கி, கைப்பையை பிடிங்கினதை உன்னால் பார்த்திருக்க முடியும்,'' என்றான் சாம்.
''நான் எதையும், யாரையும் பார்க்கலே, ஆளை விடுங்க,'' என்றான் கடுப்புடன் வடிவேலு.
சாம் வெள்ளைப் பெயிண்டின் ஒழுகலை உற்றுப் பார்த்தான். வடிவேலு பொய் சொல்லவில்லை என்றே தோன்றியது. வீட்டுக்கார அம்மாவைத் தாக்கி, கைப் பையைக் கவர்ந்து ஷெட்டுக்கு ஓடிவர அவகாசம் கிடையாது. அப்படி அந்தம்மாவைத் தாண்டி அவன் வீட்டுக்கு ஓடி இருந்தால், அவள் அவனைப் பார்த்திருப்பாள்.
சட்டென்று சாமின் கவனத்தை அது கவர்ந்தது. எது? வெள்ளைப் பெயிண்டின் ஒழுகல். அதில் ஒரு மாற்றமிருந்தது. கேட்டிலிருந்து ஷெட்டுக்கு வரும் பாதி தூரம் வரை வெள்ளைப் பெயிண்ட் வட்டம் வட்டமாக இரண்டடி இடைவெளியில் ஒழுகியிருந்தது. பாதி தூரத்திற்கு மேல் பெயிண்டின் ஒழுகல் வட்டமாக இல்லாமல், தூர தூர, விலகி விலகி ஒழுகி இருந்தது. வீட்டுக்கார அம்மாவைத் தனியே அழைத்துப் போனான் சாம். தணிந்த குரலில் அவளிடம் கூறினான்.
''எங்க அப்பா போலீஸ் இன்ஸ்பெக்டர்னு தான் உங்களுக்குத் தெரியும். அதனால் அவனை நிறுத்தி வையுங்க. நான் என் அப்பாவை அனுப்பி வைக்கிறேன். அவர்கிட்டே அவன் உண்மையை மறைக்க முடியாது. உங்க கைப்பை கிடைத்து விடும், கவலைப்படாதீங்க,'' என்று கூறி சைக்கிளில் ஏறிச் சிட்டாகப் பறந்தவனிடம், 'அதெப்படி வடிவேலுவுக்குத் திருடனை தெரியும்னு சொல்றே'ன்னு கேட்க வாயெடுத்தாள் அந்தப் பெண். ஆனால், சாம் அங்கிருந்தால் தானே?
விடைகள்:
ஒழுகும் பெயிண்ட் டின்னோடு அதை மாற்ற ஷெட்டுக்குப் போனதாகக் கூறினான் வடிவேலு. ஆனால், ஒழுகிய பெயிண்ட் அடையாளங்கள் வடிவேலு வின் நடைக்கு விளக்கம் தருவதாக இருந்தன. ஷெட்டிற்குப் போகும் பாதையின் பாதி தூரம் வரை ஒழுகல் இரண்டடிக்கும் ஒன்றாக இருந்தது. அதன்பிறகு பெயிண்ட் ஒழுகிய சொட்டு குறுகலாகவும் இடை வெளியில் அதிக தூர வித்தியாசமும் காணப்பட்டது. அந்த மீதிப் பாதையை வடிவேலு ஓட்ட ஓட்ட மாக நடந்து கடந்திருந்தான். ஏன், ஓடி இருக் கிறான். ஒழுகல் சொட்டுச் சொட்டாக வட்ட மாக விழாமல் கோடு போலச் சிதறிக் குறுகலாகச் சொட்டி இருக்கிறது.
ஆகவே பாதி வழியில், வீட்டுக்கார அம்மாளின் கைப்பையைப் பறித்து ஓடிய திருடனை வடிவேலு பார்த்திருக்கிறான். அதனால் பயந்து போய் ஷெட்டை நோக்கி ஓடி இருக்கிறான் ஒளிந்து கொள்ள. ரவுடி களோடு பழக்கமுள்ள வடிவேலுக்கு கைப்பையைப் பிடுங்கிய கேடியிடம் ஒரு வகை பயம். ஆகவே, அவனைக் காட்டிக் கொடுக்க விரும்பவில்லை. தன் தந்தை யிடம் சாம் தன் ஊகத்தைக் கூறவே, அவர் வடிவேலுவிடமிருந்து, உண்மையை கக்க வைத்து விட்டார். கைப்பையும் மீட்கப் பட்டு, ரவுடியும் கம்பி எண்ணலானான்.
***
