PUBLISHED ON : டிச 18, 2021

சென்னை, போரூரைச் சேர்ந்தவர் ஹரிகரன் சிவராமன்; வங்கியில் பணியாற்றும் இவர், கர்நாடக இசையில் வாய்ப்பாட்டுக் கலைஞர். இவரது மகன் சூர்யா நாராயணனுக்கு, 8 வயதாகிறது. தந்தை பாடுவதை கேட்டு ஆர்வம் கொண்டவரை, கலைமாமணி சந்தான கோபாலகிருஷ்ணனிடம் பயிற்சி பெற வைத்தார்.
பள்ளிக்கு செல்ல முடியாத கொரோனா காலத்தில் பாடி, பயிற்சி பெற்றார் சூர்யா. பக்தி பாடல்களில் ஆர்வம் காட்டினார்.
தொழில் முறையில் யுடியூப் சேனலில் பாடினார். அவர் பாடிய, 'மாடு மேய்க்கும் கண்ணே...' உள்ளிட்ட பாடல்கள் புகழின் உச்சத்திற்கு சென்றன.
கர்நாடக இசை மற்றும் பக்தி பாடல்கள் என, 60 பாடல்களை மனப்பாடமாக பாடும் திறன் பெற்றுள்ளார் சூர்யா; பக்கவாத்தியக் கலைஞர்களுடன், மேடைக் கச்சேரியும் செய்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி பண்டிகைகளின் போது பாடியவை, யுடியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. பண்டிகை கால பாடல்களுக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர்.
'முத்தைத்தரு பக்தித் திருநகை...' போன்ற கடின பாடல்களைக் கூட, சுலபமாக பாடுகிறார்!
'நீ எல்லாம் தெய்வம் இல்லை... எனது நெஞ்சே நீ வாழும் எல்லை முருகா...' என்று பாட ஆரம்பித்தால், உருகாதவர் இருக்க முடியாது.
ஆசிய நாடான மலேசியாவில் நடைபெற உள்ள சர்வதேச கர்நாடக இசை விழாவில், பாட தயாராகி வருகிறார் சூர்யா. அவரது பாடல்களால் பக்தி வளரட்டும்.
- எல்.முருகராஜ்
