
திருவள்ளூர், காமராஜர் பள்ளியில், 2000ல் 5ம் வகுப்பு படித்தபோது, ஆண்டுவிழா நிகழ்ச்சி வெகுச்சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தன. வகுப்புத்தோழி அபியுடன், பரத நாட்டியத்துக்கு தயாராகி கொண்டிருந்தேன்; அவளது தாய், முன்கூட்டியே வந்து, பூ, நகைகளை அணிவித்து, கவரும் வகையில் அலங்காரம் செய்திருந்தார்.
பரத நாட்டிய உடை அணிந்து, என் அம்மா வருகைக்காக காத்திருந்தேன். நிகழ்ச்சி துவங்கும் வரை காணவில்லை; செய்வதறியாது கலங்கி நின்றேன்.
மேடையில் நடனமாட அறிவிப்பு செய்யவிருந்தனர்; கண்ணீருடன் நின்ற என்னைக் கண்டு, அருகில் வந்தார் ஆசிரியை பூங்கொடி. என் நிலையறிந்து, தான் சூடியிருந்த பூவை தயங்காமல் எனக்கு சூட்டி அழகுப்படுத்தினார். அவர் போட்டிருந்த நகைகளை கழற்றி, அணிவித்து, உரிய நேரத்தில் மேடை ஏற உதவினார்.
ஈடில்லா அன்பை பொழிந்த அவரை எண்ணியபடி, நெகிழ்ந்து ஆடினேன். சிறப்பாக ஆடியதாக பரிபூரண பாராட்டுதலை பெற்று மகிழ்ந்தேன். அந்த நிகழ்வை நினைக்கும் போதெல்லாம் மனம் பூரிக்கிறது.
எனக்கு, 30 வயதாகிறது; வாழ்க்கை சக்கரத்தில் எந்த கடின சூழலின் போதும், அந்த ஆசிரியையை நினைத்துக் கொள்கிறேன். அவருக்கு நன்றி சமர்ப்பிக்க கடமைப்பட்டுள்ளேன்.
- ஆ.லட்சுமி, திருவள்ளூர்.
தொடர்புக்கு: 75503 55209

