PUBLISHED ON : செப் 12, 2014

மோகன் தம்பி தினேஷ். இருவரும் சகோதரர்கள். இருவரும் குணத்தில் வேறுபட்டு இருந்தனர். மூத்தவன் கொஞ்சம் முரடன்; இளையவனோ இளகிய மனம் படைத்தவன். வீட்டில் இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வர். அவர்கள் அம்மா கீதாவிற்கு இவர் கள் தகராறைத் தீர்த்து வைப்பதில் பொழுது போய்விடும்.
ஒருநாள் தினேஷ் பள்ளிவிட்டு வீடு திரும்பும் போது, ஒரு நாய்க்குட்டி ரோட்டு ஓரம் பரிதாபமாகக் கிடப்பதைப் பார்த்தான். அதை தொட்டுப் புரட்டிப் பார்த்தான். அது அவன் கைகளை நக்கியது. பார்க்க அழகாக இருந்த நாயை எடுத்து வளர்த்தால் என்ன என்று நினைத்தான். அதை வீட்டிற்கு எடுத்து வந்தான்.
''அம்மா இந்த நாய் தெருவிலே பரிதாப மாகக் காட்சி அளித்தது. அதான்எடுத்து வந்தேன். இதை நான் வீட்டில் வளர்க்கப் போறேன்!'' என்றான் தினேஷ்.
இதைக் கேட்டதும் மோகன், ''அம்மா நாயெல்லாம் வீட்டிலே வளர்த்தால் சரிப்பட்டு வராது. அது எப்போதும் கத்தும். நிம்மதியாகத் தூங்கவிடாது. இதை எங்கேயாவது விட்டு விட்டு வரச் சொல்லுங்கள்!'' என்றான்.
''டேய் மோகன் மிருகங்கள் மீது பாசம் காட்டுவது நல்லது தானே. அதுவும் ஒரு ஜீவன் தான். மேலும் தம்பி ஆசைப்படுகிறான். அவன் ஆசையை ஏன் கெடுக்க வேண்டும்?'' என்றாள் கீதா.
தனக்கு வெற்றி என பெருவிரலைத் தூக்கிக் காட்டினான் தினேஷ்.
என்ன நடக்கப் போகுது பார் என்று சொல்வது போல தம்பியை முறைத்துப் பார்த்தான் மோகன்.
அந்த நாய்க்கு டைகர் எனப் பெயரிட்டு செல்லமாக வளர்த்தான் தினேஷ்.
தினேஷ் இல்லாத நேரம் மோகன் அந்த டைகரிடம் தன் வெறுப்பைக் காட்டத் தவறுவது இல்லை.
ஒருநாள் டைகருக்கு வைத்த பாலை, மோகன் எடுத்து வெளியே கொட்டப் போனான். அதை அவன் தாய் பார்த்தாள்.
''நில் மோகன்! என்ன காரியம் செய்யத் துணிந்தாய். உனக்கு வைத்த சாப்பாட்டை, உனக்கு இல்லாமல் ஆக்கினால் உனக்கு எவ்வளவு கோபம் வரும். அந்த நாய் உனக்கு என்ன கேடு பண்ணியது? பிற ஜீவன் கள் மீது மனிதர்களாகிய நாமே கருணை காட்டாவிட்டால் எப்படி? நம்மை போல்தான் பிற ஜீவன்களும். கருணையை நம் உள்ளத்தில் வளர்த்துக் கொள்ளாவிட்டால் நெஞ்சம் கல்போல் ஆகிவிடும். இனிமேல் இப்படித் தவறுகளைச் செய்யாதே!'' என அவன் அம்மாள் கடிந்து கொண்டாள்.
பால் தட்டை டைகரிடம் கொண்டு போய் வைத்தான் மோகன்.
''இன்றைக்குப் பிழைச்சுப்போ!'' என முணுமுணுத்தவாறு வந்தான்.
ஒருநாள் அம்மா தம்பியை அழைத்துக் கொண்டு கோவிலுக்குப் போயிருப்பதை வேலைக்காரி மூலம் தெரிந்துக் கொண்டான் மோகன்.
''சாந்தி!'' உனக்கு நேரமாச்சு நீ வீட்டுக்குப் போ. அம்மா வந்ததும் நான் சொல்லிக் கொள்கிறேன்!'' என வீட்டு வேலைக் காரியைப் போகச் சொன்னான். அவளும் வீட்டிற்குப் போனாள்.
''ஒரு ஆட்டோவை அழைத்து வந்து டைகரை அதில் ஏற்றினான். அவனும் ஏறிக்கொண்டான்.
பக்கத்து ஊரில் அதை இறக்கி விட்டுவிட்டு, அவன் ஆட்டோவில் திரும்பி தன் ஊருக்கு வந்தான்.
இனிமேல் இந்த டைகரின் தொல்லை இருக்காது என்று எண்ணினான். தன் நண்பன் பாலுவைப் பார்த்ததும் ஆட்டோவை அனுப்பி விட்டு, அவனோடு பஸ் ஸ்டாண்டில் நின்று பேசிக் கொண்டிருந்தான்.
திடீரென ஒருவன் மோகன் கழுத்தில் கிடந்த செயினைப் பறித்து விட்டு ஓடினான். திருடனை அவன் துரத்திப் போனான். திருடனோ வேகமாக ஓடினான். அவனுக்கு இவனால் ஈடு கொடுக்க முடியவில்லை. ஆனால், டைகர் வழி மறித்து, அவன் மீது பாய்ந்து கீழே தள்ளியது. திருடன் கையிலிருந்த செயின் கீழே விழுந்தது. மோகன் ஓடிப்போய் எடுத்தான். திருடன் அங்கிருந்து தப்பி ஓடினான்.
'டைகரின் தொல்லை பொறுக்க முடியாமல் அதற்குப் பல தொல்லைகள் கொடுத்தேன். இறுதியில் பக்கத்து ஊரில் விட்டு விட்டு வந்தோம். அதற்கு நாம் எவ்வளவு கொடுமை கள் செய்தாலும் திருடனிடமிருந்து தன் செயினைக் காப்பாற்றித் தந்திருக்கிறதே' என்று நினைத்துப் பெருமைப்பட்டான். அதைத் தடவி கொடுத்து, வீட்டிற்கு அழைத்து வந்தான்.
கோவிலுக்குப் போய் விட்டு வந்த தினேஷ் டைகர் வீட்டில் இல்லாதது பார்த்துத் திகைத்தான். அப்போது டைகரை அண்ணன் மோகன் அணைத்துத் தூக்கி வந்தது பார்த்து ஆச்சரியப் பட்டான்.
''தினேஷ் திருடனிடமிருந்து நம் டைகர் என் செயினைக் காப்பாற்றித் தந்தது. இது இல்லாவிட்டால் என் செயினை நான் இழந்திருப்பேன். நாய் தானே என இதனிடம் அலட்சியமாக இதுவரை நடந்து கொண்டேன். மிருகங்கள் எவ்வளவு அன்புடையவைகளாக இருக்கின்றன என இப்போது புரிந்து கொண்டேன். இனிமேல் ஜீவ காருண்யத்துடன் நடந்து கொள்வேன்!'' என்றான் மோகன்.
''அண்ணா! இதைக் கேட்க எவ்வளவு இன்ப மாக இருக்கிறது தெரியுமா? என் அண்ணன் என்றால் என் அண்ணன் தான்!'' என மோகனை அணைத்துக் கொண்டான் தினேஷ்.
இதைக் கண்ட அம்மா திகைத்தாள். மோகன் நடந்ததை அம்மாவிடம் சொன்னான். அம்மா மோகனுக்கு புத்திமதி கூறினாள்.
குட்டீஸ்... மிருகங்களிடம் அன்பு காட்டணும் சரியா?
***
