PUBLISHED ON : அக் 30, 2021

முன்கதை: இயற்கை மீது ஆர்வம் கொண்டவன் சிறுவன் சந்திரஜெயன். விஞ்ஞானியான அவன் மாமாவுடன், அன்டார்டிகாவுக்கு சென்றான். அங்கு, சுற்றிப் பார்த்த போது பனிப்புயல் வீசியது; பூகம்பம் ஏற்பட்டது. இனி -
பெரிய பள்ளங்கள் ஆங்காங்கே பூத்தன; பள்ளங்களுக்குள் சறுக்கி, ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து உருண்டனர். 'சட்... சடார்... பட்... படார்...' என பேரிரைச்சல்; காற்று கிழிப்பட்டது; 400 அடி துாரம் வரை சறுக்கி, 'னங்கார்...' என சத்தத்துடன் விழுந்தனர்.
மீண்டும் நிலத்தில் ஒரு விரிசல்; திரும்பவும், 500 அடி துாரத்துக்கு விரிசல் கீழோடியது. பூகம்பத்தின் அளவு, 8.0 ரிக்டராக பதிவாகி இருந்தது. வெவ்வேறு திசையில், அங்குமிங்கும் ஓடி, கடைசியில் ஓர் இடத்தில் தங்கினர்.
உடலில் காயம் ஏற்பட்டதால் மயங்கி விழுந்தனர். நிலமை சீராக மெதுவாக கண் விழித்தனர்; அருகில் ஏதோ படுத்திருந்தது; தடவிப் பார்த்தான் சந்திரஜெயன். சொரசொரப்பாக இருந்தது.
''மாமா... இதை பாருங்க...''
தடுமாறியபடி இருவரும் எழுந்தனர்; தடவியதை நிமிர்ந்து பார்த்தனர்; பச்சை நிற உடல் ஒன்று படுத்திருந்தது; விக்கி ஸ்தம்பித்தனர்.
'உயிருடன் இருக்கிறதா' என சோதித்தார் மாமா. அது எப்படி இருக்கும்; பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன், இறந்த டைனோசரின் உடல் கெடாமல், புத்தம் புதிதாய் பனிக்குள் கிடந்தது.
''எழுந்துக்கோ... டைனோசர் உடலைப் பாரு...''
''உண்மையில் இது டைனோசரா மாமா...''
''ஆமாம்...''
''டைனோசர், 20 கோடி ஆண்டுகளுக்கு முன், உயிர் வாழ்ந்த மிருகம்; கடைசி டைனோசர், ஒரு கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தது. பொதுவாக, மாமிச உண்ணிகள், ஒன்று மற்றொன்றை அடித்து சாப்பிடும்; சிலவகை டைனோசர், தாவரம் மற்றும் மாமிசம் சாப்பிடும் பண்பு கொண்டது; ஒரு சில டைனோசருக்கு, 500 பற்கள் இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது; மணிக்கு, 60 கி.மீ., வேகத்தில் ஓடும் திறன் பெற்றிருந்தது...''
''இவை பூமியில் எப்படி அழிந்தன மாமா...''
''விண்வெளி கற்கள் தாக்கி, இந்த உயிரினம் ஒட்டு மொத்தமாக அழிந்ததாக கூறுகின்றனர்; எரிமலை குழம்புகள் பூமியில் பரவியதால் மேலும் அழிந்திருக்கும் என நம்பப்படுகிறது...''
''டைனோசரின் விஞ்ஞான பெயர் என்ன...''
''விஞ்ஞான பெயர் டைனோசாரியா...''
''இங்குள்ள டைனோசர் உடல் துாங்குவது போல் இருக்கிறது; தட்டி எழுப்பினால் உயிரோடு வருமா...''
''குளிர்சாதன பெட்டியில் வைத்த பொருள் கெடாது இல்லையா; அப்படி தான், பனி பிரதேசத்தில் சிக்கிய டைனோசரின் உடலும் கெடாமல், புத்தம் புதிதாய் இருக்கு...''
''என்ன செய்யலாம்...''
''அப்படியே ஊருக்கா எடுத்து செல்ல முடியும்... ஒன்று சொன்னால், ஆச்சரியபட கூடாது...''
''சொல்லுங்க மாமா...''
''அன்டார்டிகாவுக்கு டைனோசர் தேடி தான் வந்தேன்; பனி புயலும், பூகம்பமும் ஆதரவாக செயல்பட்டு, டைனோசர் உடலைக் காட்டி விட்டன...''
''இந்த உடலை என்ன செய்ய போறீங்க...''
''பார்த்துக் கொண்டே இரு...'' என கூறி, இடுப்பில் மறைத்திருந்த கத்தியால், டைனோசர் உடலில் சிறு சதையை அறுத்து, டப்பாவில் போட்டு மூடினார்; அதை பாதுகாப்பாக ஒரு பையில் வைத்து பத்திரப்படுத்தினார் யோகிபாபு.
சில நிமிடங்களில் பனிக்காற்று உக்கிரமடைந்தது; பிரளய சத்தத்துடன் நிலம் இரண்டாக பிளக்க ஆரம்பித்தது.
இருவரும் தலைதெறிக்க ஓடினர்; மீண்டும் பனிப் புயலும், பூகம்பமும் சேர்ந்தடித்தன. அதேசமயம், டைனோசர் உடல் கிடந்த பகுதி மூடியது.
வெகு துாரம் ஓடியதால் இருவருக்கும் மூச்சிரைத்தது.
அந்த பனி பிரதேசத்தின் எல்லா திசைகளையும் பார்த்தனர்.
''சிறிது நேரத்தில், மீட்பு படையினர் வருவர். அவர்களிடம், டைனோசர் உடல் பற்றி எதுவும் கூற வேண்டாம்; ரகசியமாக இருக்கட்டும்...''
''சரி மாமா...'' என பேசி கொண்டிருந்த போது, சாலையில் பனியை ஒதுக்கி தள்ளியபடி, ஒரு ராட்சச வாகனம் வந்தது.
மார்ஷல் குதித்தபடி, ''பத்திரமாக இருக்குறீங்களா...'' என்றார்.
'' பெரிய பாதிப்பு இல்லை நிலையத்துக்கு சென்று, முதலுதவி எடுத்துக் கொள்கிறோம்; வேறு யாராவது பாதிக்கப் பட்டுள்ளனரா...'' என வினவினார் யோகிபாபு.
''என்ன இப்படி கேட்கிறீங்க... 8.0 ரிக்டர் அளவில் பூகம்பம் தாக்கியுள்ளது; அதன் மையப்புள்ளி, ஆராய்ச்சி நிலையங்கள் தான். இதுவரை, 12 பேரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது; எதையாவது கண்டெடுத்தீர்களா...'' என்றார் மார்ஷல்.
- தொடரும்...
- வஹித்தா நாசர்
