PUBLISHED ON : நவ 20, 2021

முன்கதை: சிறுவன் சந்திரஜெயனை அழைத்து அன்டார்டிகா சென்றார் விஞ்ஞானி யோகிபாபு. அழிந்த உயிரினம் டைனோசர் உடலை கண்டு சிறு பகுதியை வெட்டி எடுத்தார். அதில் டைனோசர் குட்டியை உருவாக்கி சிறுவனுக்கு பரிசளிக்க முடிவு செய்தார். இனி -
அன்று, சந்திரஜெயனின் வீடு, விழா கோலம் பூண்டிருந்தது; மின் விளக்குகளால் அலங்கரிக்கபட்டிருந்தது.
வீடெங்கும் தோரணமும், பலுான்களும் தொங்கின.
டவுசர் மற்றும், 'தொள... தொள' டி - சர்ட்டில் அழகாக இருந்தான் வேலைக்காரன் செந்தில்.
'பிறந்த நாள் விழா, காலை, 10:00 மணிக்கு; நீங்க வந்த பின், கேக் வெட்டுவேன் மாமா...' அலைபேசியில் தெரிவித்தான் சந்திரஜெயன்.
'சரியாக, 9:50க்கு, அங்கு இருப்பேன். பிறந்த நாள் பரிசு என்ன என்பது, உனக்கு தெரிந்தது தான். இருந்தாலும், அதை முறைப்படி தர ஆயத்தமாய் இருக்கிறேன்...'
எதிர்முனை இணைப்பில் பேசினார் யோகிபாபு.
'சந்திரஜெயனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!' என்ற வாசகம், கேக் மீது எழுதியிருந்தது; கையில் பரிசுடன் வந்தனர் அக்கம் பக்கத்தினர்.
வாசலை பார்த்த படியே அலைபேசியை எடுத்து, 'மாமா... இப்போ எங்க இருக்கீங்க...' என்றான் சந்திரஜெயன்.
'இன்னும், 10 நிமிஷத்துல அங்கே இருப்பேன்...'
சில நிமிடங்களில்...
வாசலில் சத்தம் கேட்டது. பரிசுடன் வந்தார் மாமா.
ஓடிச் சென்று ஆசையாய் அணைத்தான் சந்திரஜெயன்.
யோகிபாபுவை வரவேற்றனர் சந்திரஜெயனின் பெற்றோர்.
அலங்கரிக்கப்பட்ட கேக்கை சுற்றி எல்லாரும் வட்ட மடித்து நின்றனர்; வளர்ப்பு மிருகங்கள் சுற்றி நின்றன.
அனைவரும், பிறந்த நாள் வாழ்த்து கூறினர்.
சங்கீதத்தில், மனிதநேயம், சகோதரத்துவம் மற்றும் நட்பு குழைந்தடித்தன.
கேக்கை வெட்டி, அம்மா, அப்பா மற்றும் மாமாவுக்கு ஊட்டினான் சந்திரஜெயன்.
பதிலுக்கு, சந்திரஜெயனுக்கு ஊட்டி, ''நுாற்றாண்டு காலம் வாழ்க மருமகனே...'' என வாழ்த்தினார் யோகிபாபு.
தோழி தீவிதாவுக்கும் கேக்கை ஊட்டினான்.
பறவைகளும், மிருகங்களும் உற்சாக கூச்சல் எழுப்பின. ஒரு வாழைப்பழத்தை பரிசளித்தது சின்சான்.
வந்த அனைவரும், பரிசு வழங்கி, கை குலுக்கி வாழ்த்து கூறினர்.
''எல்லாரும் இருந்து சாப்பிட்டு தான் போகணும்...'' என்றான் சந்திரஜெயன்.
பிறந்தநாள் பரிசாக, மொபைல் போன் மற்றும் வீடியோ கேம் கொடுத்தனர் பெற்றோர்; தோழி தீவிதா, ரேபான் குளிர் கண்ணாடியை கொடுத்தாள்.
ஜப்பானிய முறையில் குனிந்து, ''மருமகனே... பாக்சை திறந்து பாரு...'' என்றார் யோகிபாபு.
''வேண்டாம் மாமா... விருந்தினர் எல்லாரும் இருக்காங்க...''
''இருக்கட்டுமே... நான் கொடுத்த பெட்டியில் என்ன இருக்குன்னு அவங்களும் பார்க்கட்டும்...''
''பயப்படுவாங்க...''
''முதல் பார்வையில் பயம் இருக்கும்; அப்புறம் கொஞ்சி விளையாட ஆரம்பிச்சுருவாங்க...''
''இந்த, 10 நாள் இடைவெளியில், மனிதர்களுடன் எப்படி பழகுவது என, டைனோவுக்கு சொல்லி கொடுத்திருக்கீங்களா...''
''ஆமாம்... மினி ரோபோ பராமரிப்பில் தான், டைனோ இருந்தது...''
''பெட்டிக்குள், டைனோவுக்கு மூச்சு திணறாதா...''
''அட்டை பெட்டியில், சிறு சிறு துவாரம் வழியாக, ஆக்சிஜன் கிடைக்கும்; சுவாசிக்க ஒரு சிரமமும் இருக்காது...''
''அண்டாகா கசம்... அபூகா உகும்... திறந்திடு சிசேம்...''
அட்டை பெட்டியை பிரித்தான் சந்திரஜெயன்.
பெட்டியில் இருந்து குதித்தது டைனோ. அது, மின்னியது; கழுத்து குறுகி இருந்தது, வாயில் குட்டி குட்டியாய் கீழே மற்றும் மேலே, 100 பற்கள் இருந்தன; வட்ட கண்கள்; பின்னங்கால்களை தரையில் ஊன்றி, முன்னங்கால்களை துாக்கி நின்றது.
'ழியேய்...' என சத்தம் போட்டு, சந்திரஜெயனின் கால்களை பின்னி நக்கியது.
அவ்வளவு தான்!
பிறந்த நாள் விழாவுக்கு வந்த அனைவரும், பயத்தால் நடுங்க ஆரம்பித்தனர். வளர்ப்பு மிருகங்கள், திசைக்கு ஒன்றாய் சிதறின; மேலுதட்டை பிதுக்கி, பற்களை காட்டி பயந்தது சின்சான்.
முகம் சுளித்தனர் சந்திரஜெயனின் பெற்றோர்.
- தொடரும்...
- வஹித்தா நாசர்
