PUBLISHED ON : நவ 20, 2021

மயிலாடுதுறை மாவட்டம், பொறையார், தவசுமுத்து நாடார் உயர்நிலைப் பள்ளியில், 1975ல், 11ம் வகுப்பு படித்தபோது, தடகள விளையாட்டில் ஆர்வமாக இருந்தேன்.
பள்ளிகளுக்கிடையேயான போட்டிகளில், பரிசும், சான்றிதழ்களும் பெற்று வந்தேன்.
மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிக்கு தேர்வாகி இருந்தேன்; அது தஞ்சாவூரில் நடக்க இருந்தது. வெளியூர் செல்ல அனுமதிக்க மறுத்து விட்டார் என் தந்தை. இதை அறிந்து, என் வீட்டிற்கு வந்தார் விளையாட்டு ஆசிரியை வசந்தா. என் தந்தையை சமாதானப்படுத்த முயன்றார். எவ்வளவு எடுத்துக் கூறியும் மறுத்து வந்தார் தந்தை.
விடாமுயற்சியுடன் பேசி, என் எதிர்காலம் குறித்து நம்பிக்கை ஏற்படுத்திய பின், ஒருவழியாக சம்மதம் தெரிவித்தார்.
அந்த போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றேன்; படிப்பை முடித்து, காவல் துறையில் சேர்ந்தேன்; அதற்கு, நான் பெற்றிருந்த விளையாட்டு சான்றிதழ்கள் உதவின. படிப்படியாக உயர்ந்து, ஆய்வாளராக பொறுப்பு வகித்து ஓய்வு பெற்றேன்.
தற்போது, என் வயது, 64; பெண்கள் அதிகம் வெளிவர அனுமதிக்காத அந்த காலச்சூழலில், எனக்காக பரிந்து பேசிய அந்த ஆசிரியை தந்த உற்சாகம் தான், வாழ்வில் உயர வழி வகுத்தது. இன்றும் அவரை மனதில் கொண்டுள்ளேன்.
- டி.சாந்தி, மதுரை.
தொடர்புக்கு: 99945 28280
