PUBLISHED ON : டிச 04, 2021

முன்கதை: அன்டார்டிகா பனிக்குள் சிக்கியிருந்த டைனோசர் உடல் பகுதியை வெட்டி எடுத்து வந்து, சோதனைச்சாலையில் டைனோ குட்டியை உருவாக்கினார் விஞ்ஞானி யோகிபாபு; அதை, சிறுவன் சந்திரஜெயனுக்கு பரிசளித்தார். வீட்டில் அதை பராமரிக்க பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இனி -
சந்திரஜெயனின் மார்பில் ஒடுங்கி, அவன் முகத்தை நக்கியது டைனோ; வழக்கமான சப்தத்தை எழுப்பாமல், கொஞ்சலாய் சிணுங்கியது. இன்னும் பலமாக இறுக அணைத்து, ''டைனோ என் செல்லமே...'' என்றான்.
வளர்ப்பு மிருகங்களிடம் அறிமுகபடுத்தினான் சந்திரஜெயன்.
கடைசியாக சின்சானிடம் வந்தான்.
டைனோவின் கைகளை பற்றி குலுக்கியது சின்சான்; பதுக்கி வைத்திருந்த வேர்கடலை உருண்டையை கொடுத்தது.
அதை வாங்கி, திருப்பி திருப்பிப் பார்த்தது டைனோ.
''சாப்பிடுற பொருள் தான் டைனோ... சுவையாக இருக்கும்...''
நன்றாக மென்று தின்று, நாக்கை சுழற்றி காட்டியது டைனோ. வேலைக்காரன் செந்தில் ஓடி வந்தான்.
''நம்ம வளர்ப்பு மிருகங்களுக்கும், பறவைகளுக்கும் தனித்தனி கூண்டும், வீடும் கட்டி தந்திருக்கிறோம்; டைனோவுக்கு என்ன செய்றது...''
''நல்ல கேள்வி... டைனோவுக்கும், தனி மர வீடு தேவை...''
தச்சரை வரவழைத்தான் சந்திரஜெயன்.
தோட்டத்துக்குள் பயந்து பயந்து வந்தார் தச்சர்.
''இந்த வீட்ல மனிதர்களை விழுங்கும் மிருகத்தின் குட்டி இருக்காமில்ல... அதை கொஞ்சம் கட்டி போடுங்க; இல்லன்னா வெளிய வாங்க பேச...''
''பயப்படாதீங்க... அது யாரையும் துன்புறுத்தாது...''
''கூண்டு என்ன அளவுல வேணும்...''
''அகலம், நீளம் மற்றும் உயரம் மூன்றடியும், கூண்டின் முன்பக்கம் மூடி திறக்கும் இரட்டை கதவும், அடிப்பகுதியில், கழிவுகள் வெளியேற திறப்பு வசதியோடு கூண்டு தயார் செய்யுங்க...''
''செய்துடலாம்; கூண்டுக்கு, 5 ஆயிரம் ரூபாய் செலவாகும்...''
''சரி கூண்டு எப்ப கிடைக்கும்...''
''ரெண்டே நாள்ல கொடுத்திடுறேன்... முன்பணம், 2 ஆயிரம் ரூபாய் கொடுங்க...''
பர்சை திறந்து, பணத்தை கொடுத்தான்; வாங்கி புறப்பட்டார் தச்சர்.
யோகிபாபு வந்தார்.
''நான் கிளம்புறேன்டா மருமகனே...''
''அப்பா தவணை கொடுத்திருக்காரேன்னு பயமா இருக்கா...''
''இல்லை... ௧௫ நாள் இல்ல... ௧௫ வருஷமானாலும் டைனோ உன் வீட்ல தான் இருக்கப்போகுது; நான் கிளம்புறேன்...''
''செல்பி எடுத்திட்டு போனவங்க, பேஸ்புக், வாட்ஸ் ஆப், டெலிகிராம் என சமூக வலை தளங்களில் போட்டுருக்காங்க... ஊரே அல்லோல கல்லோலப்படுது...''
அலைபேசி கருவியை திறந்தபடி கூறினான் சந்திரஜெயன்.
சிரித்தபடி கிளம்பினார் யோகிபாபு.
வாசனை சோப் போட்டு டைனோவை குளிப்பாட்டி, புட்டிபால் புகட்டினான்.
'கடவுளே... டைனோ வருகையை நல்லவிதமாக்கு... என் தந்தை மட்டுமல்ல; இந்த ஒட்டு மொத்த உலகத்தினர் அன்பையும் அது பெறட்டும்...' என வேண்டியபடி அதை தோட்டத்தில் விட்டான்.
''டைனோ... ரெண்டு நாள் தோட்டத்துல செடிகளுக்கு இடையே தங்கு... கூண்டு வந்த பின், அதில் தங்கிக்கலாம்...''
சிரித்தது டைனோ.
மறுநாள் காலை -
தோட்டத்துக்குள் புகுந்த சந்திரஜெயனிடம், ஓடி வந்தது டைனோ; அதன் வாயில் ரத்தம் கொட்டியது; அதன் கண்களில் கொலை வெறி கனன்றது!
இதைப் பார்த்ததும், சந்திரஜெயன் மனதிற்குள், பலவித எண்ணங்கள் கிளைத்து ஓடின.
'ஏதேனும் பறவை அல்லது மிருகங்களை கடித்துக் குதறி விட்டதோ' என சந்தேகித்தபடி, ''என்ன காரியம் செய்துட்ட டைனோ...'' என்றான்.
எதையோ சொல்ல முயன்று, பல வித சப்தங்களை எழுப்பியது டைனோ; அதன் உடல் மொழி, வேறு எதையோ உணர்த்த முயன்றது.
சந்திரஜெயனின் கால்களை உரசியது டைனோ; வாயிலிருந்த ரத்தத்தை, சந்திரஜெயனின் கால்களில் துடைத்தெடுக்கப் பார்த்தது.
சந்திரஜெயனின் தந்தை டைனோவின் வாயில், ரத்தம் வழிவதை பார்த்து விட்டார். மிகவும் பதைபதைப்புடன், ''சந்திரஜெயன்... உன் வளர்ப்பு மிருகங்கள் அல்லது பறவைகள் எதாவது ஒன்றை டைனோ பலகாரம் செய்து சாப்பிட்டு விட்டது... உன் மாமாவுக்கு போன் செய்து வரச்சொல்; உடனே டைனோவை அவரிடம் ஒப்படை...'' என்றார்.
''அவசரப்படாதீங்கப்பா... தோட்டத்துக்கு சென்று நடந்ததை ஆராய்வோம்...''
அப்போது ஓடி வந்தது சின்சான்.
'கர்ரா... முர்ரா...' என கத்தியது.
செந்தில், சந்திரஜெயன் மற்றும் சந்திரஜெயனின் அப்பா மூவரும் தோட்டத்துக்குள் விரைந்தனர்.
பறவைக் கூண்டு மற்றும் மிருகங்களின் வீடுகளை ஆராய்ந்தான் சந்திரஜெயன்; அனைத்தும், அதனதன் இருப்பிடத்தில் இருந்தன.
எதையோ பார்த்து கத்தினான் செந்தில்.
அவனை நோக்கி ஓடினான் சந்திரஜெயன்.
- தொடரும்...
- வஹித்தா நாசர்
