PUBLISHED ON : பிப் 12, 2022

முன்கதை: அன்டார்டிகா உறை பனிக்குள் கிடந்த டைனோசர் உடலில் இருந்து, டைனோ குட்டியை உருவாக்கி, சிறுவன் சந்திரஜெயனுக்கு பரிசளித்தார் விஞ்ஞானி யோகிபாபு. வியந்தபடி அதை பார்க்க வந்தனர் பலர். இனி -
சந்திரஜெயன் வீட்டின் முன், பள்ளி பேருந்துகள் வந்து நின்றன; மாணவ, மாணவியர் இறங்கினர். அன்புடன் வரவேற்றான் சந்திரஜெயன்.
மாணவர்களை ஒழுங்குபடுத்தி, ''டைனோ இருக்கும் இடத்தில் சத்தம் போடக்கூடாது; வரிசையில் செல்லுங்கள். டைனோவுக்கு தின்பண்டம் எதுவும் கொடுத்து விடாதீங்க...
''அதை தொட்டு தடவவோ, கிள்ளவோ கூடாது. புகைப்படம் எடுக்கலாம்; ஆனால், கண்ணை கூசும், 'பிளாஷ் லைட்' கூடாது...'' என முன் எச்சரிக்கை செய்தார் வகுப்பு ஆசிரியை.
'டைனோ குட்டியா இப்போ இருக்கு... அது வளர்ந்தால் இந்த இடம் பத்தாது இல்ல...' என்றனர் மாணவர்கள்.
''இந்த டைனோ, போன்சாய் தொழில் நுட்பத்தால் சிறிதாக உருவாக்கப்பட்டது; 100 ஆண்டு கடந்தாலும், இப்போதைய அளவில் தான் இருக்கும்...''
விவேகமாக பதிலளித்தான், சந்திரஜெயன்.
''கிட்ட போனா அது கடிச்சு தின்னுருமா...''
நடுக்கத்துடன் கேட்டாள் ஒரு மாணவி.
''இந்த டைனோ தாவர உண்ணி; இலை தழை, காய்கறி, பழங்களை தான் உண்ணும்...'' என விளக்கினான் சந்திரஜெயன்.
''டைனோசர் குட்டி போடுமா அண்ணா...'' என்றான் ஒரு மாணவன்.
''போடாது தம்பி...''
உற்சாக கூச்சல் போட்டபடி பிரவேசித்தனர் மாணவர்கள்.
மரவீட்டில் படுத்திருந்த டைனோ, கலவரம் அடைந்து, 'எதற்கு என்னை பார்க்கிறீர்கள்' என்பது போல் விழித்தது.
'வீட்டுக்குள் புகுந்து, நாஸ்தி செய்றாங்களே... எல்லாம் இந்த யோகிபாபுவால் வந்த வினை; இன்னும், என்னென்ன வம்பு தும்புகள் வரபோகிறதோ...'
தலையில் கை வைத்தபடி புலம்பினர் சந்திரஜெயனின் பெற்றோர்.
தோழி தீவிதாவுடன் மாணவர்களை ஒழுங்குபடுத்தினான் சந்திரஜெயன்.
காலை முதல் மதியம் வரை, 509 பேர் டைனோவை பார்த்து சென்றனர்.
மதியம், வீட்டு வாசலில், ஓர் அறிவிப்பு பலகையை மாட்டினான் சந்திரஜெயன்.
அதில், 'பார்வையாளர் அனுமதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது; பார்வை நேரம் பின்னர், அறிவிக்கப்படும்' என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது.
''ஐயா...''
புதியகுரல் ஒன்று கேட்டது.
''யாரு... என்ன செய்தி...'' என்றான் சந்திரஜெயன்.
''ஐயா... டைனோசரை இலவசமாக காட்டினால், கூட்டம் இப்படி தான் கூடும்; பார்வையாளர் நேரம், காலை, 8:00 மணிக்கு துவங்கி, மதியம், 2:00 மணி எனவும், மாலை, 4:00 மணிக்கு துவங்கி, இரவு, 8:00 மணி வரை என அறிவிக்கலாம்...
''ஒரு பார்வையாளருக்கு, 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கலாம்; டைனோவுடன், 'செல்பி' எடுத்தால், 100 ரூபாய் வாங்கலாம். வீட்டு வாசலில் சிற்றுண்டி சாலை அமைத்து உணவை, 'டபுள்... டபுள்...' விலைக்கு வியாபாரம் செய்தால், கல்லா கட்டும்...'' என்றான்.
''இந்த யோசனை எல்லாம் நான் கேட்டேனா...''
கடுப்புடன் கேட்டான் சந்திரஜெயன்.
''பார்வையாளர் கட்டணம், சிற்றுண்டி என, எல்லாத்தையும், கார்ப்பரேட் நிறுவனத்திடம், ஆண்டு குத்தகைக்கு கொடுத்து, லம்பா சம்பாதிக்கலாம்; உங்களிடம் மேலாளராக பணிபுரிய விருப்புகிறேன்...'' என்றான் புதியவன்.
''எனக்கு இது போன்ற செயல்களில் ஈடுபாடு இல்லை... நீங்க போகலாம்...'' என்றான் சந்திரஜெயன்.
''அப்படி சொல்லாதீங்க... இந்த சின்ன வயசுல, கோடீஸ்வரர் ஆக முடியும்; இது போல வாய்ப்பு, யாருக்கும் கிடைக்காது; நல்லா யோசிச்சு சொல்லுங்க...'' என்றான்.
''வெளியே போங்க...''
கோபத்தில் கத்தினான் சந்திரஜெயன்.
''தம்பி... இப்ப கோபமா இருக்கீங்க... என், 'விசிட்டீங் கார்டு' வெச்சுக்கோங்க; நல்லா யோசிச்சு முடிவெடுங்க. ரெண்டு நாள் கழிச்சு பேசலாம்..'' என்றான்.
விசிட்டிங் கார்டை வாங்கியபடி, ''ஓராண்டு ஆனாலும், என் முடிவில் மாற்றம் இல்லை...'' என்றான் சந்திரஜெயன்.
''ரொம்ப வருத்தப்படுவீங்க தம்பி...'' என்றான் புதியவன்.
''வெளியே போறீங்களா...''
முணுமுணுத்தபடியே வெளியேறினான் புதியவன்.
தொடர்ந்து, ஒரு வாரம், டைனோவை துாக்கியபடி, மால், காய்கறி சந்தை, சினிமா தியேட்டர், ஓட்டல் என சுற்றினான் சந்திரஜெயன்.
எங்கு போனாலும், கூட்டம் சூழ்ந்து ஆர்வமுடன் விசாரித்தது.
பெண்கள் தான் அதிகம் மொய்த்தனர்; குழந்தைகள், டைனோவை கொஞ்சினர்.
சில நாட்களாக, வெளியே சுற்றிய டைனோ, சுணங்கி படுத்தது.
அன்று காலையில் எதுவும் சாப்பிடவில்லை.
''டைனோ... என்னாச்சு உனக்கு...'' என்றான் சந்திரஜெயன்.
கண்களை மூடி மூடி திறந்தது; தன் நிலையை சொல்ல முயன்று தோற்றது.
- தொடரும்...
வஹித்தா நாசர்
