PUBLISHED ON : செப் 16, 2016

பாண்டவர்கள் மாறுவேடத்தில், பிறர் அறியா வண்ணம் நாட்களைக் செலவழிக்க, விராட ராஜ்யத்தையே சிறந்ததெனத் தேர்ந்தெடுத்தனர்.
பாண்டவர்களில் இளையவர்கள் நால்வரும், தங்களுக்குள் ஒரு முடிவிற்கு வந்த பின், தருமரை நோக்கி, ''அண்ணா... தருமம் தவறாத, மென்மையான உள்ளமும், கருணையும் நிறைந்த தாங்கள், இந்த வேடத்தில் எந்த வேலையைச் செய்ய முடியும்? அவமதிப்பையும், அலட்சியத்தையும் தங்களால் பொறுத்துக் கொள்ள இயலுமா?'' எனக் கண்ணீர் மல்க வினவினான் அர்ஜுனன்.
''அர்ஜுனா, என்னைப் பற்றி நீ சிறிதும் கவலைப்படாதே. நன்றாக யோசித்து, நானொரு முடிவிற்கு வந்துவிட்டேன். இதோ பார்!'' என்று தருமர் தன் உள்ளங்கையைத் திறந்தார்.
தந்தத்தால் செய்த சதுரங்கக் காய்கள் மின்னின. சகோதரர்கள் வியப்பால் மவுனமாகினர்.
தருமர் தொடர்ந்து கூறினார்.
''தம்பிகளே... இவற்றின் பலத்திலே விராட அரச சபையில் இடம்பெற்று விடுவேன். நான் முன்பு மகாராஜா தருமனுக்கு உற்ற நண்பனாக இருந்து, சதுரங்கம் ஆடி மகிழ்வித்து வந்த பிராமணன் என்று என்னை அறிமுகப்படுத்தினால் ஒருவரும் சந்தேகிக்க முடியாது''
''அண்ணா, சாம்பல் மூடிய நெருப்புத் துண்டுபோல் நாங்கள் மாறுவேடத்தில் மறைந்தே வாழ்வோம். ஆனால், ஒன்று, தங்களுக்கு யாரேனும் துன்பம் தந்தால், உடலிலிருந்து ஒரு துளி ரத்தம் சிந்தினாலும்... நான் சும்மா இருக்க மாட்டேன். இது சத்தியம்!'' என்றான் அர்ஜுனன்.
அர்ஜுனனின் ஆவேசம் நிறைந்த சபதத்தைக் கேட்ட பாண்டவர்கள் திடுக்கிட்டனர்.
தருமர் ஏழை அந்தணன் போல் உடை அணிந்து சதுரங்கக் காய்களை ஒரு துணியில் சுருட்டி எடுத்தவாறு விராட அரசனைக் காணச் சென்றார்.
''மகாராஜா! நானோர் ஏழை அந்தணன். என்னிடமிருந்த பொருளை எல்லாம் இழந்து விட்டதால், தங்களை நாடி வந்துள்ளேன். எல்லாக் கலைகளும் அறிந்த நான், தங்களை மகிழ்விப்பேன் என்பது உறுதி,'' என்றார் தருமர்.
''அந்தணரே, தாங்கள் எந்ந நாட்டிலிருந்து வருகிறீர்கள்? பெயரென்ன? எவ்விதம் என்னை மகிழ்விக்க முடியும்?''
''அரசே! என் பெயர் கங்கபட்டர். நான் அத்தினாபுரத்திலிருந்து வருகிறேன். மகாராஜா தருமரின் உற்ற நண்பன். சதுரங்கம் ஆடுவதில் வல்லவனான நான், தருமர் வனவாசம் சென்றதும் அங்குமிங்கும் சுற்றி அலைந்தேன். சதுரங்கம் மட்டுமல்ல, ஜோதிடம், வேதாந்தம், மற்றும் பல கலைகளும் நானறிவேன்!''
விராட அரசன் பெரிதும் உவகையடைந்தவனாய், ''கங்கபட்டரே, உம்மை நான் வரவேற்கிறேன். என்னுடன் சதுரங்கம் விளையாடி என்னை மகிழ்வித்து, எனக்கு உற்ற நண்பராக நீர் இருப்பீராக,'' என்று கூறினான்.
''மகாராஜா, ஒரே ஒரு வேண்டுகோள், எந்நிலையிலும், அரச குடும்பத்தினரைத் தவிர்த்து வேறு எவருடனும் சதுரங்கம் ஆடும்படி நேர்ந்து விடலாகாது. யார் தோற்றாலும், ஜெயித்த பொருளை திருப்பித்தரவும் மாட்டேன். இதைத் தாங்கள் மனமுவந்து ஏற்க வேண்டும்,'' என்றார் கங்கபட்டர்.
''அவையோர்களே, இன்றிலிருந்து கங்கபட்டர் நம்முடைய அரச அவையினரில் ஒருவராக இடம் பெறுவார். என் அந்தரங்க நண்பரான அவருக்கு, அரசியலிலும் மற்ற எந்த விஷயங்களிலும் எனக்குத் தக்க ஆலோசனை கூற உரிமையுண்டு. கங்கபட்டருக்கு அந்தப்புரத்திலும் வரவேற்புண்டு!''
அவையினர் ஆரவாரத்துடன் கங்கபட்டரை வரவேற்றனர்.
கங்கபட்டரான தருமர் அரச அவையில் இடம் பெற்றபின், பீமன், வல்லபன் என்ற பெயரில் மடப்பள்ளியிலும், திரவுபதி அந்தப்புரத்தாதியாகவும், சகாதேவன், நந்திபாலன் என்ற பெயரில் பசுக்களை மேற்பார்வை செய்பவனாகவும், நகுலன் கிரந்திகன் என்னும் பெயரில் குதிரைகளை மேற்பார்வையிடுபவனாகவும், அர்ஜுனன், பெண் உருவெடுத்து, பிருகறளையாகி, அந்தப்புரப் பெண்களுக்கு ஆடல், பாடல் கற்பிப்பவனாகவும் இடம் பெற்றனர். நாட்கள் இன்பமாக சென்றன.
விராட அரசன் போர்க்களத்திலிருந்து திரும்பியிருந்தான். அந்தப்புரத்தில் நுழைந்ததும் கவுரவப்படையெடுப்பைப் பற்றிய செய்தி கிடைத்தது. அரசகுமாரன் உத்தரனிடத்தில் விராட அரசனுக்கு அளவற்ற வாஞ்சை. தன் புதல்வன் தன்னந்தனியாக பிருகறளையைச் சாரதியாகக் கொண்டு, போர்க்களம் சென்றிருக்கிறான் என்ற செய்தி கேட்டதும் விராட அரசன் அனலிலிட்ட புழுவாகத் துடித்தான். கவலையும், திகிலும் சூழ்ந்த அரசனைக் களிப்பிக்க, கங்கபட்டர் எடுத்த முயற்சிகள் யாவும் தோல்வியுற்றன.
அச்சமயம் தூதுவர்கள் உள்ளே நுழைந்து மன்னனை வணங்கி, ''மகாராஜா! அரசகுமாரர் கவுரவர்களைத் தோற்கடித்து விட்டார். சூறையாடிச் சென்ற பசுக்களை மீட்டு, வெற்றியுடன் வந்து கொண்டிருக்கிறார்!''
கங்கபட்டர் முகம் மலர மீண்டும், ''கேட்டீர்களா மகாராஜா! பிருகறளையைச் சாரதியாகக் கொண்டவன் தோற்பதாவது?'' என்றார்.
விராட அரசன் பதில் கூறாது தூதுவர்களுக்கு பரிசு வழங்கினான்.
நகர் முழுமையும் வெற்றி விழாக் கொண்டாடும்படி உத்தரவுகள் பிறப்பித்தான். இதன் பின் கங்கபட்டரை நோக்கி, ''பட்டரே, வாருங்கள். மீண்டும் ஆடலாம். என் மனம் மகிழ்ச்சியால் நிறைந்துள்ளது பட்டரே!'' என்றான்.
கங்கபட்டர் காய்களை உருட்டவில்லை.
''அரசே மிதமிஞ்சிய மகிழ்ச்சியில், திளைப்பவர்களுடனும், தூதர்களுடனும் சதுரங்கம் ஆடுவது சரியல்ல என்பர் பெரியவர்கள். அதனால் அரசே, வேறு எதுவானாலும் கூறுங்கள். நான் தங்கள் விருப்பத்தை நிறைவேற்றுகிறேன்,'' என அமைதியுடன் கூறினார் கங்கப்பட்டர்.
மேலும், எவ்வளவு எடுத்து சொல்லியும் விராட அரசன் இணங்க மறுத்துவிடவே, வேறு வழியின்றி கங்கபட்டர் காய்களை உருட்டினார்.
ஆட்டம் துவங்கியது. ஆடிக்கொண்டிருந்த விராட அரசன், ''கங்கபட்டரே! என் புதல்வனின் வீரத்தைப் பார்த்தீர்களா? பீஷ்மர், துரோணர், கிருபர் போன்ற மாபெரும் வீரர்களை எல்லாம் தோற்கடித்து விட்டானே! நீர் என்னவோ அந்தப் பேடியைப் புகழ்கிறீரே?''
''மகாராஜா, மன்னியுங்கள், பீஷ்மர், துரோணர், கிருபர் போன்ற மாவீரர்களை அரசகுமாரன் ஒருவனால் மட்டும் தோற்கடிக்க முடியுமா? பிருகறளை ஒருத்தியால் மட்டும் இது முடியும். புஜபல பராக்கிரமத்தில் வீரத்தில் அவளுக்கு இணையானவர் எவருமில்லை அரசே,'' எனக் கூறிக் கொண்டிருந்த கங்கப்பட்டர், ''ஆ!'' என்று அலறினார்.
அவர் நெற்றியிலிருந்து செங்குருதி குபுகுபுவெனப் பாய்ந்து வந்தது.
பரபரப்புடன் கங்கபட்டர் ரத்தம் பூமியில் விழாதவாறு தம் கையில் ஏந்திக் கொண்டார். பிருகறளையைப் புகழ்ந்ததைக் கேட்டு சீற்றம் கொண்ட விராட அரசன், பகடையை முகத்தில் எறிந்து விட்டான் என்பதை அறிந்ததும், சைரந்திரியாக அருகில் நின்ற பாஞ்சாலி நெஞ்சம் பதைபதைத்தாள். தங்கப்பாத்திரத்தில் நீர் கொணர்ந்து காயத்தைக் கழுவினாள்.
கங்கபட்டர் பதற்றமடையவில்லை; பொறுமையிழக்கவில்லை; அமைதியுடன் வீற்றிருந்தார். தூதுவர்கள் அரசகுமாரனின் வருகையை வந்துரைத்தனர். கங்கபட்டர் தூதுவனை அருகில் அழைத்து, ''அரசகுமாரர் உத்தரனை மட்டும் உள்ளே அழைத்து வாருங்கள். பிருகறளை ஆசார வாயிலில்
நிற்கட்டும்!'' என்று கூறினார்.
தூதுவர்கள் தலை வணங்கி வெளியே சென்றனர். கங்கபட்டருக்கு அர்ஜுனனின் பயங்கரமான சபதம் மீண்டும் நினைவுக்கு வந்தது.
யுத்தத்திலன்றி மற்ற சமயங்களில் தருமரின் உடலிலிருந்த ஒரு பொட்டு ரத்தம் சிந்தினாலும், அவ்விதம் காயம் ஏற்படக் காரணமாக இருந்தவரை உயிருடன் விடமாட்டேன் என்றல்லவா அர்ஜுனன் சபதமிட்டிருந்தான்.
அர்ஜுனன் இந்நிலையில் தம்மைக் கண்டால் என்ன விபரீதம் விளையுமோ என்று அஞ்சினார்.
உள்ளே நுழைந்த உத்தரகுமாரன் ரத்தத்தில் நனைந்து, காயத்தைக் கழுவிக் கொண்டிருக்கும் கங்கபட்டரைக் கண்டதும் பரபரப்படைந்தான்.
தன்னைத் தழுவ ஓடி வந்த தந்தையை நோக்கி, தந்தையே! ''கங்கபட்டரை இவ்விதம் துன்புறுத்தியது யார்?'' என்று வினவினான்.
''நான்தான்!'' என்றான் விராட அரசன், பெருமை தொனிக்கும் குரலில்.
''தவற்றுக்குரிய தண்டனை அளித்தேன். மாவீரர்களை எல்லாம் புறமுதுகிட்டு ஓடச் செய்த உன் வீரத்தைப் புகழாது, அந்த பேடி பிருகறளையைப் புகழ்ந்ததின் பலன் இது,'' விராட அரசன் வெறுப்புடன் பேசினான்.
''தந்தையே என்ன காரியம் செய்து விட்டீர்? இக்கணமே இவரிடம் மன்னிப்புக் கேளுங்கள். இல்லாவிடில் நம் குலமே நசிந்துவிடும். புத்திர பாசத்தால் எத்தகைய பாவம் செய்து விட்டீர்!'' எனக் கூறவே, விராட அரசனும் தன் தவறுக்கு வருந்தியவனாய் கங்கபட்டரிடம் மன்னிப்புக் கேட்டான்.
''மன்னவா, நான் முன்னரே தங்களை மன்னித்து விட்டேன். தங்கள் மீது எனக்கு எவ்வித வருத்தமுமில்லை. பலமும், செல்வமும் மிகுந்த தலைவர்கள், தங்களை அண்டியுள்ளவர்களிடம் இவ்விதம் சீற்றம் கொள்வது இயல்புதானே?'' என்றார் கங்கபட்டர்.
விராட அரசன், கங்கபட்டரின் பெருந்தன்மைக்கு முன்னர் தலைகுனிந்தான்.
