தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/நெருப்புக் கோட்டை (7)

நெருப்புக் கோட்டை (7)

நெருப்புக் கோட்டை (7)


PUBLISHED ON : செப் 16, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 16, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்றவாரம்: அடர்ந்த காட்டிற்குள், இளங்குமரனிடம் உதவியாளனாக வர விருப்பம் தெரிவித்தான் மொட்டைத்தலையன். ஆனால், தந்தையின் அறிவுரைப்படி மொட்டைத்தலையர்களை நம்பமாட்டேன் என்று கூறி மறுத்தான் இளங்குமரன். இனி-

''உன் தயக்கத்துக்கான காரணம் இதுதானா? அப்படியானால், நீ எந்த வேலைக்காரனையும் அமர்த்திக்கொள்ள முடியாது. இந்தப் பகுதியில் இருக்கும் அத்தனை பேரும் என்னைப் போலத்தான் முடியே இல்லாமல் மொழு மொழு என்றிருப்பர். என்ன காரணமோ தெரியவில்லை. எங்கள் யாருக்கும் தலையில் முடியே வளருவதில்லை. சாபம் போல!

''முடி இல்லாத மனிதரானால் என்ன? நாங்கள் நேர்மையானவர்கள்; எஜமான விசுவாசமுடையவர்கள். கருப்பு ஒரு அழகு, சூடு ஒரு ருசி என்று கேள்விப்பட்டதில்லையா நீ? மொட்டைத் தலையனானாலும் என்னை நீ நம்பலாம். வேறு ஆளைத் தேடிப் போக வேண்டாம். என்னையே உன் உதவிக்கு ஏற்றுக் கொள்.

''இரவு நெருங்கிவிட்டது. இன்றிரவு நீ கானகத்தில் தான் இருந்தாக வேண்டும். இந்தத் தொத்தல் குதிரையையும், வழி தெரியாத உன்னையும் பார்த்தால் எனக்குப் பாவமாக இருக்கிறது. என்ன சொல்லுகிறாய்? எனக்கு வேறு வேலை இருக்கிறது. சீக்கிரம் சொல்!'' என்றான்.

இளங்குமரனுக்கு கவலையாகிவிட்டது. இந்தப் பகுதியிலுள்ள எல்லாருமே இப்படித்தான் மொட்டைத் தலையராக இருப்பர் என்றால், அப்பாவின் வார்த்தைப்படி நடப்பது முடியாத காரியம். இவனையும் விட்டால் அப்புறம் என்ன செய்வது என்ற முடிவோடு, ''ஐயா, எனக்கு ஒன்றுமே புரியவில்லை. சின்ன வயதிலிருந்தே அப்பாவின் வார்த்தைக்குக் கீழ்படிந்து வளர்ந்தவன். உன்னை ஏற்றுக் கொண்டால் என் தந்தையின் எச்சரிக்கையைப் புறக்கணித்தவனாகிவிடுவேன்.

''இதற்கு முன் இரண்டு மொட்டைத் தலையர்கள் உதவியாளர்களாக ஏற்றுக் கொள்ளும்படி என்னை அணுகினர். அவ்விருவரையும் நிராகரித்துவிட்டேன். நீங்கள் மூன்றாவது நபர். இங்கு வாழும் மக்கள் எல்லாருமே மொட்டைத்தலையர்கள்தாம் என்றும், இப்பகுதியைப் பற்றிய வழி முறைகளெல்லாம் அறிந்தவர் என்றும் நீங்கள் கூறுவதால் உங்களையே என் பணியாளனாக ஏற்றுகலாமென்று கருதுகிறேன்,'' என்றான்.

''பலே பலே! இதுதான் அறிவாளிக்கு அழகு. சரி புறப்படு குதிரையைத் திருப்பு. என்னோடு வா. இரவு தங்குவதற்கு ஒரு பத்திரமான இடத்துக்குப் போகலாம்,'' என்று கூறி தன் குதிரையை முன்னால் நடத்திச் சென்றான் மொட்டைத் தலையன். இளவரசனும் அவனைப் பின் தொடர்ந்தான்.

குதிரை மின்னல் வீரன் ஓரக்கண்ணால் மொட்டைத் தலையனையும், அவனை நேர்மையானவன் என்று நம்பி விட்ட அப்பாவி இளவரசனையும் பார்த்து மனத்துக்குள் சிரித்துக் கொண்டது.

'நடப்பதையெல்லாம் வேடிக்கை பார்ப்போம்... நாம் இப்போது தலையிட வேண்டாம்' என்று மன்னரின் ஆணைப்படி மவுனமாகச் சென்றது.

நல்லவனைப் போலப் பேசி நாடகமாடிய மொட்டைத் தலையனும், யோக்கியனைப் போலவே நடந்தான்.

ஒரு பெரிய ஆலமரம், தன் விழுதுகளால் குடிசை போல உருவாக்கி இருந்த இடத்துக்கு, இளவரசனை அழைத்துப் போனான் மொட்டைத்தலையன். காட்டு விலங்குகளிடம் இருந்தும், குளிரிடமிருந்தும் காப்பாற்றிப் பாதுகாப்பளித்தது அந்த ஆலம் விழுதுக்குடில்.

அதிகாலையில் எழுந்து பயணத்தைத் துவங்கினர். அடர்ந்து இருள் மூண்டிருந்த கானகத்தில் நெருக்கத்தில் இருந்து விடுபட்ட, சூரிய வெளிச்சம் விழும் காட்டுப் பகுதியில் நெடுநேரம் பயணம் செய்தனர். திடீரென்று, தாகமாக இருப்பதாகக் கூறி இளவரசனிடம் குடிநீர்க் குடுவையைக் கேட்டான் மொட்டைத் தலையன். குதிரையின் சேணத்தில் கட்டித் தொங்க விட்டிருந்த நீர்க் குடுவையை எடுத்து, அவனிடம் கொடுத்தான் இளவரசன்.

நீர் அருந்துவது போல அதன் மூடியை அகற்றி வாய் அருகே கொண்டு போனவன், முகம் சுளித்து, மறுவினாடி அந்தக் குடுவை நீர் அத்தனையையும் கீழே ஊற்றினான். அவன் செயல் இளங்குமரனுக்கு அதிர்ச்சி அளித்தது.

''இதென்ன காரியம்? குடிநீர் முழுவதையும் இப்படிக் கீழே கொட்டிவிட்டாயே. இக்கானகத்தில் நல்ல நீர் கிடைக்காதென்பது தெரியாதா உனக்கு? வெயில் ஏற ஏறத் தாகமெடுக்குமே, அப்போது என்ன செய்வது? இப்படி முட்டாள்தனமான காரியம் செய்யலாமா?'' என்று கடிந்து கொண்டான் இளவரசன்.

''இளவரசே... நான் நன்மையே செய்தேன். அந்த நீர் கெட்டுவிட்டது. அதை அருந்தினால் நம் உடல் நலம் கெடும். நம் பயணம் தடைபடும். இந்தக் காட்டில் சுத்தமான குடிநீர் எங்கு கிடைக்கும் என்று எனக்குத் தெரியும். கவலைப்படாதீர். இன்னும் சிறிது நேர பயணத்தில் ஒரு கிணறு வரும். தூய்மையான குளிர்ந்த நீர், நிரம்பச் சுவையாகவும் இருக்கும்.

''அந்தக் கிணற்றைச் சுற்றிலும் குளுமையான நிழல் தரும் சோலை மரங்களும் உண்டு. நாம் அங்க போய்க் கொஞ்சம் இளைப்பாறுவோம். தாகம் தீர குளிர்ந்த நீரைப் பருகுவோம். இக்குடுவையைச் சுத்தம் செய்து அந்தக் கிணற்று நீரை நிரப்பிய பின், நம் பயணத்தைத் தொடருவோம்,'' என்றான், வஞ்சகனான மொட்டைத்தலையன்.

அவனுடைய ஆறுதலான வார்த்தையில் ஏமாந்து திருப்தியடைந்தான் இளங்குமரன்.

மொட்டைத் தலையன் இளவரசனை பாதை மாற்றி அழைத்துப் போனான். சிறிது தூரம் சென்றதும், ஒரு மேடான பகுதி வந்தது. மரங்கள் இல்லாமல் திறந்த வெளியாக, நடுவில் ஒரு கிணறும், அதை சுற்றிப் பசுமையான சோலையும் இருந்தது. குளிர்ந்த காற்று இதமாக வீசியது.

இளங்குமரனுக்கு மொட்டைத் தலையன் நிஜமே பேசி இருக்கிறான் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

''இந்தக் கிணறுதான். இதன் கீழே, ஒரு ஊற்று உள்ளது. அதிலிருந்து பொங்கும் நீர், ஜிலீரென்று இருக்கும். உடலுக்கும், உள்ளத்துக்கும் ஆரோக்கியமளிக்கும் மருத்துவத் தன்மை கொண்ட சுவையான நீர் இது,'' என்று அதன் பெருமையை விளக்கினான் மொட்டையன்.

அந்தக் கிணற்றிலிருந்து நீர் இறைக்கும் ஜகடை இல்லை. உள்ளே இறங்கிச் செல்ல படிகளும் இல்லை. காட்டுமரத்தால் உருவாக்கப்பட்டிருந்த ஒரு ஏணி கிணற்றினுள் இறக்கப்பட்டிருந்தது. அதன் வழியாகத்தான் கிணற்றினுள் இறங்கி நீர் ஊற்றை அடைய வேண்டும். மொட்டைத்தலையன் அந்த ஏணியின் வழியே கிணற்றினுள் இறங்கினான்.

சிறிது நேரத்துக்குப் பின், கிணற்றுக்குள்இருந்து அவன் பேசினான்.

''ஆஹா! இங்கே எப்படி குளுகுளு என்றிருக்கிறது தெரியுமா? இப்படி ஒரு நீரூற்றைக் கண்டுபிடித்து வழிப்போக்கர்களின் சவுகரியத்துக்காக கிணற்றைக் கட்டிய அந்தப் புண்ணியவானை எத்தனை பாராட்டினாலும் தகும். இந்த நீரூற்றின் அருகிலேயே வாழ் நாளெல்லாம் இருந்து விடலாம் போலிருக்கிறதே. மேலே வரவே விருப்பமில்லை,'' என்று கூறியபடியே வந்தான் மொட்டைத் தலையன்.

''இளவரசரே... அந்தக் குளுகுளு சுகத்தை நீங்களும் அனுபவிக்க வேண்டாமா? கிணற்றின் கீழே போய் ஊற்று நீரை அள்ளிப் பருகிவிட்டு வாருங்கள், உங்கள் உடலில் புதிய தெம்பும், சக்தியும், உற்சாகமும் உண்டாகும். பயணத்தில் களைப்பே தோன்றாது,'' என்று ஆசை கொள்ளச் செய்தான்.

மொட்டைத் தலையனிடம் முழு நம்பிக்கை கொண்ட இளவரசன் இளங்குமரன், ஆவலோடு ஏணிப்படிகள் வழியே கிணற்றினுள் இறங்கினான்.

ஆழமான அந்தக் கிணற்றினுள் இறங்கி, அதன் நீர் நிலையை அடைந்தான். மொட்டையன் கூறியதுபோல அக்கிணற்று நீர் கற்கண்டாகத்தான் இனித்தது. அதன் சுவையோடு அந்தச் சூழலும் நிரம்பக் குளிர்ச்சியாகவே இருந்தது. இரண்டு வாய் நீரை அருந்தி அக்குளிர்ந்த நீரால் முகத்தைத் துடைத்த போது, இளவரசன் அருகே இருந்த ஏணி சரேலென்று மேலே தூக்கப்பட்டது. திடுக்கிட்டான் இளவரசன்.

கிணற்றினுள்ளிருந்து அண்ணாந்து பார்த்தான். மொட்டைத் தலையன் வேகவேகமாக ஏணியை மேலே தூக்கியதை கண்டான். குளிர்ச்சியும், கும்மிருட்டும் நிறைந்த ஆழ்கிணற்றின் அடியிலிருந்து மேலே பார்த்த போது, கிணற்றின் வாசலில் மொட்டைத் தலையனின் முகம் பயங்கரமாக காட்சியளித்தது.

- தொடரும்...

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us