PUBLISHED ON : செப் 16, 2016

என் வயது 65. நான், ஆறு பெண்பிள்ளைகளோடு பிறந்த ஒரே ஆண்பிள்ளை. என் தந்தை கூலிவேலைக்குதான் செல்வார். ஆதலால், எனக்கு ஒரே ஒரு டவுசர், சட்டை மட்டும்தான் உண்டு. காலையில், பள்ளிக்கு போகும்போது அந்த சட்டை, டவுசரை போட்டுட்டு போய், மாலை வீடு வந்ததும் அதை துவைத்து, காயபோட்டு விடுவேன். காலையில் மீண்டும், அதை அணிந்து செல்வேன்.
இடைப்பட்ட நேரங்களில் எல்லாம் துண்டை கட்டிக் கொள்வேன். வெளியில் எங்கு சென்றாலும், நண்பர்களோடு விளையாட சென்றாலும் துண்டை கட்டிக் கொண்டுதான் செல்வேன். அதனால், துரை என்ற என்னோட பெயரை, 'துண்டு துரை' என்றே அழைக்க ஆரம்பித்து விட்டனர்.
இந்நிலை, ஆரம்ப பள்ளி முடித்து, வெளியூர் சென்று உயர் நிலைப் பள்ளியில் படிக்கும் வரை தொடர்ந்தது. அப்போது, இரண்டு சட்டை, டவுசர் கிடைத்ததால், துண்டை துறந்தேன். ஆனாலும், 'துண்டு துரை' என்ற பட்டபெயர் ஏனோ என்ன விட்டு விலக மறுத்தது. இன்று ஓரளவு வசதியோடு வாழ்ந்தாலும், என் சொந்ந கிராமத்திற்கு சென்றுவிட்டால், பால்ய நண்பர்கள் எல்லாரும் என்னை, 'துண்டு துரை' என்றே அழைப்பர். அந்த பெயர்தான் இன்றும் நான் கடந்து வந்த பாதையை மறக்காமல் வைத்திருக்கிறது.
இளமையில் வறுமை என்பது மிக மிகக் கொடுமை. பார்த்த பொருட்களை எல்லாம் உடனே கேட்டு கேட்டு அடம்பிடிக்கும் இன்றைய பிள்ளைகளே... தெரிந்து கொள்ளுங்கள் எங்களது கஷ்டத்தை.
- வி.எம்.பால்துரை, கீழ வைத்தியநாதபுரம்.
