PUBLISHED ON : செப் 16, 2016

அருப்புகோட்டை தேவாங்கர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்த போது, எனக்கு மூன்று தோழிகள் உண்டு. நாங்கள் நால்வரும் வகுப்பில் கடைசி பெஞ்சிற்கு முந்தைய பெஞ்சில் சேர்ந்து அமர்ந்திருப்போம். நொறுக்குத் தீனி ஸ்டால் வசதி பள்ளியில் உண்டு.
எங்கள் ஆங்கில ஆசிரியை மட்டும் வகுப்பு இடைவேளையில் வெளியே செல்ல அனுமதிக்கமாட்டார். அந்த நேரத்திலும் வகுப்பெடுப்பார். அதனால் நாங்கள் நால்வரும் வீட்டிலிருந்து தின்பண்டம் கொண்டு வந்து, என் தோழிகளில் ஒருத்தியிடம் கொடுத்து விடுவோம்.
அவள் இடைவேளை நேரத்தில், பெஞ்சுக்கு அடியில் சென்று அமர்ந்து, எங்கள் ஒவ்வொருத்தர் கையிலும் பங்கு வைத்துக் கொடுப்பாள். அதை டீச்சர் பார்க்காமல் சாப்பிடுவோம்.
அன்று யதார்த்தமாக என்னை அழைத்து முன்னாடி நின்று வாசிக்கச் சொல்லி விட்டு நடந்து வந்து, என் இடத்தில் அமர்ந்தார் ஆசிரியை. இதை அறியாத என் தோழி, அடியிலிருந்து நான் என்று நினைத்து, ஆசிரியையின் கையில் அல்வாவைத் திணிக்க, நாங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்க, வகுப்பில் ஒரே சலசலப்பு.
மாட்டிக் கொண்ட எங்களை, கையில் அல்வாவோடு, 10 நிமிடம் வகுப்பை சுற்றி வரச் சொன்னார் ஆசிரியர்.
அப்போதைக்குக் கண்டித்தாலும், அன்றிலிருந்து இடைவேளையில் வகுப்பெடுப்பதை விட்டுவிட்டார். அதன்பின் பள்ளியில் எங்களை, 'அல்வா கூட்டம்' என்று அழைத்தனர்.
இன்றும் அல்வாவைப் பார்த்தால் என்னால் சிரிப்பை அடக்க முடியாது!
- பொ.சசிகலா, அருப்புக்கோட்டை.
