PUBLISHED ON : ஜன 16, 2021

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, எஸ்.பி.கே.உயர்நிலைப் பள்ளியில், 1961ல், 9ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது, ஹிந்தி ஆசிரியராக ஜெகதீசன் இருந்தார். அருமையாக பாடம் கற்பிப்பார்.
உடலுறுப்புகள் பற்றி பாடம் நடத்திக் கொண்டிருந்தார். ஒரு மாணவியிடம், 'மூக்கு' என்பதன், ஹிந்தி சொல்லைக் கேட்டார். திணறியவளிடம், அருகிலிருந்தவள் நாக்கையும், மூக்கையும் தொட்டுக் காட்டினாள்.
அதைக் கவனித்த ஆசிரியர், 'என்ன சேஷ்டை செய்கிறாய் சேஷம்மா...' என்றார். செயலை மறைக்காமல் துடுக்குடன், 'சார்... நாக்குன்னா மூக்கு; மூக்குன்னா வாய்...' என்றாள். அனைவரும் சிரித்தோம். ஹிந்தி மொழியில், 'நாக்' என்ற சொல், தமிழில், மூக்கையும், 'முஹ்' என்ற சொல், 'வாய்' என்ற பொருளையும் தரும்.
அவளை பாராட்டினார். உற்சாகமடைந்தவள், 'ஆங்கில எழுத்தான, 'டி' க்கும் உடல் குறிப்பால் விளக்கம் வைத்திருக்கிறேன்...' என்றாள்.
ஆர்வத்துடன், 'சொல் கேட்டோம்...' என்றார் ஆசிரியர்.
உடனே, 't' என்ற ஆங்கில எழுத்தை பாவனை செய்தபடி, 'இது சாதாரணமானது... தொந்தியுடன் கூடியதை, 'D' எனலாம்...' என்றாள். அவ்வளவு தான்; வகுப்பில் சிரிப்பொலி அடங்க வெகு நேரமானது.
என் வயது, 71; இன்றும், 'நாக்க முக்க...' என துவங்கும் பாடலைக் கேட்கும் போது, வகுப்பில் நடந்த நிகழ்ச்சியை நினைத்து மகிழ்கிறேன்.
- ஆர்.விக்டோரியா, மதுரை.
தொடர்புக்கு: 99433 99785

