
முன்கதை: சித்தி கொடுமையால் அவதிப்பட்ட சின்ரல்லாவுக்கு உதவியது அழகிய தேவதை. உலகைக் காண, தங்க செருப்புகளை பரிசாக வழங்கியது. அவற்றில் ஒன்றை தொலைந்து, மகிழ்ச்சி இழந்தாள் சின்ரல்லா. இனி -
எல்லாவற்றையும் இழந்து வாடிய சின்ரல்லா, மறுநாள் கண் விழித்தாள்.
அவள் முன் கடுகடுப்புடன், 'மகாராணி மாதிரி துாங்குறியா... வீட்டில் எவ்வளவு வேலை கிடக்கிறது...' என கூச்சல் இட்டாள் சித்தி.
பயத்துடன் எழுந்த சின்ரல்லா, முகத்தை கழுவி, அடுப்படிக்குப் போனாள்.
அங்கு கண்ட காட்சியால் மூச்சே நின்று விடும் போலிருந்தது.
ஜெசிந்தாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றவர்கள் சாப்பிட்ட எச்சில் பாத்திரங்கள் குவிந்து கிடந்தன. அவற்றை சுத்தம் செய்ய சொட்டு தண்ணீர் கூட இல்லை.
வேதனையுடன் கிணற்றடிக்குச் சென்று, குடத்தில் தண்ணீர் எடுத்து வந்தாள். பாத்திரங்களையும், வீட்டையும் கழுவி சுத்தம் செய்தாள்.
ஜெசிந்தாவும், சித்தியும் ஊஞ்சலில் ஆடியபடி இனிப்பு பண்டங்களை தின்றனர்.
திடீரென தெருவில் முரசு சத்தம் கேட்டது.
அதைக் காண வாசலுக்கு ஓடினர்.
சின்ரல்லா மனதிலும், அதை பார்க்கும் ஆசை எழுந்தது.
கைகளை கழுவி, வெளியே வந்தாள்.
இதைக் கண்டதும், 'இவ பெரிய மகாராணி; நாட்டை ஆளப்போகிற இளவரசி; அரசர், மக்களுக்கு அனுப்பும் செய்தியை அறிய ஓடி வருகிறாள். போ... உன் வேலையை கவனி...' என, விரட்டினாள் சித்தி.
சின்ரல்லாவின் முகம் சுருங்கியது; கூனிக் குறுகியபடி வீட்டிற்குள் வந்தாள்.
அரசரின் அறிவிப்பை கூற துவங்கினான் முரசு அறைபவன்.
டும்... டும்... டும்...
நாட்டு மக்களுக்கு அரசர் அறிவிப்பது என்னவென்றால்...
'அரண்மனை தோட்டத்தில் இளவரசர் உலா வந்த போது, ஒரு தங்க செருப்பைக் கண்டெடுத்தார். அது வசீகரமாக உள்ளது. ஒரு இளம் பெண்ணின் செருப்பு என நம்புகிறார் இளவரசர். அந்த செருப்பின் ஜோடியை வைத்திருப்பவரை காண விரும்புகிறார். தங்கச் செருப்பை வைத்து இருப்பவர் உடனடியாக, அரண்மனைக்கு வரவும்...'
இவ்வாறு கூறி, மீண்டும் முரசு அறைந்தான்.
அதைக் கேட்ட மக்கள் திகைத்தனர்.
'தங்க செருப்பா... யாரிடம் ஒரு செருப்பு உள்ளதோ... யார் தான் அந்த அதிர்ஷ்டசாலியோ...' என பேசிக்கொண்டனர்.
இரவெல்லாம் துாங்கவே இல்லை சித்தி. அந்த ஒற்றை தங்க செருப்பு பற்றியே யோசித்தபடியிருந்தாள். அது மட்டும் கிடைத்தால், மகள் ஜெசிந்தாவை இளவரசியாக்கலாம் என ஏங்கினாள்.
கொட்டக் கொட்ட முழித்தபடி யோசித்தாள். ஒரு வழியும் தெரியாமல், எரிச்சலும், ஆத்திரமும் அடைந்தாள்.
எதையும் அறியாத சின்ரல்லா, அமைதியாக வேலைகளை கவனித்து வந்தாள்.
ஒரு வாரமாகியும், யாருமே செருப்பை எடுத்து வரவில்லை. ஏமாற்றம் அடைந்தார் இளவரசர்.
தங்கச் செருப்பு, தோட்டத்தில் கிடைத்ததால், அதற்கு உரியவள் இந்த நாட்டில் தானே இருக்க வேண்டும். எனவே, புதிய உத்தியைக் கையாண்டு, தங்கச் செருப்பின் சொந்தக்காரியைக் கண்டுபிடிக்க ஆசைப்பட்டார்.
தளபதியையும், காவலாளிகளையும் அழைத்தார். தன்னிடம் இருந்த ஒற்றை தங்கச் செருப்பை கொடுத்து, 'மாளிகை முதல், குடிசை வரை எல்லா வீடுகளுக்கும் சென்று, ஒவ்வொரு இளம் பெண் காலிலும், செருப்பை அணிவியுங்கள். யார் காலுக்கு பொருத்தமாக இருக்கிறதோ அவளை அழைத்து வாருங்கள்...' என்றார் இளவரசர்.
காவலாளிகள் வீடு வீடாக சென்றனர். யாருக்கும் அந்த செருப்பு பொருந்தவில்லை.
காவலர்கள் அன்று, சின்ரல்லாவின் ஊருக்கு வருவதாக இருந்தது.
இதை அறிந்து, 'ஜெசிந்தா காலிற்கு அந்த செருப்பு பொருந்த வேண்டும்' என துடிதுடித்தாள் சித்தி.
பின், சின்ரல்லாவை அழைத்து, மிகவும் கண்டிப்புடன், 'இன்று வெளியே வந்தால் கொன்று விடுவேன்...' என மிரட்டி, சமையல் அறைக்குள் அடைத்தாள்.
ஒற்றை தங்கச் செருப்புடன் வந்தனர் காவலர்கள்.
ரேணியாவும், ஜெசிந்தாவும் உபசரித்தனர். வந்த வேலையை கவனிக்கும் விதமாக, ஜெசிந்தா காலில் செருப்பை மாட்டினார் காவலர். அது பொருத்தமாக தெரியவில்லை.
அவளது முன்கால் கூட செருப்பினுள் நுழையவில்லை. ஆனாலும் விடவில்லை. மீண்டும் மீண்டும் அணிய முயன்றாள்; பொருந்தவேயில்லை.
இதைக் கண்டதும், 'சரியாகத்தான் பொருந்துகிறது... இன்னும் முயற்சிக்கலாம்...' என, ஜெசிந்தா காலில் செருப்பை மீண்டும் திணித்தாள் சித்தி.
பேராசையால் கால் விரல்கள், புண்ணாயின. செருப்பு பொருந்தவே இல்லை.
சிரித்தபடியே, 'உன் காலிற்கு ஏற்ற செருப்பு இதுவல்ல; அந்த அதிர்ஷ்டசாலி எங்கு இருக்கிறாளோ...' என முணுமுணுத்தபடி, புறப்படத் தயாராயினர் காவலர்கள்.
அப்போது, வீட்டுக்குள் லேசான அரவம் கேட்டது.
நிதானித்தபடி, 'வேறு யாராவது வீட்டில் இருக்கின்றனரா...' என்று கேட்டார் ஒரு காவலர்.
'ஒருவரும் இல்லையே...' என, அவசரமாக மறுத்தாள் சித்தி.
காவலர்கள் வெளியேறிய போது, அடுப்படியில் எதுவோ தெரிந்தது. நிதானித்து உற்று நோக்கினர்.
அது, சின்ரல்லாவின் அழகிய கண்கள். அதில் ஒளி மிகுந்து இருந்ததைக் கண்டனர். அறைக்குள், அவள் அடைப்பட்டு கிடப்பதைக் கண்டு திடுக்கிட்டனர்.
- தொடரும்...

