தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/தன்னிலை இழக்காதே!

தன்னிலை இழக்காதே!

தன்னிலை இழக்காதே!


PUBLISHED ON : அக் 30, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 30, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி, நேஷனல் உயர்நிலைப் பள்ளியில், 1954ல், 9ம் வகுப்பு படித்தேன். தமிழ் ஆசிரியர் கரிச்சான் குஞ்சு நாராயணசுவாமி ஐயர். மிக அருமையாக பாடம் நடத்துவார்.பசித்த மானுடம், எது நிற்கும் போன்ற நுால்களை எழுதியவர். என் தந்தை சீனிவாசன் நடத்தும் நாடகங்களுக்கு வசனம் எழுதுவார். அதற்காக, ஞாயிற்றுக்கிழமைகளில் என் வீட்டுக்கு வருவார். ஒருநாள் வீட்டுப் பாடம் எழுதிக் கொண்டிருந்தேன். என் சின்ன தம்பி வெளியில் விளையாடியபடி அடிக்கடி தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தான். அவனை கட்டுப்படுத்தும் விதமாக கதவை மூடி வைத்திருந்தேன்.மீண்டும் கதவை தட்டும் சத்தம் கேட்டதும், 'திருட்டுப்பயலே... படிக்க விட மாட்டாயா... தடியனே...' என கோபத்தில் கத்தினேன். பதில் வராததால் கதவை மெல்ல திறந்தேன்; அதிர்ச்சியில் உறைந்தேன். அப்பாவை காண வந்திருந்த ஆசிரியர் நின்றுகொண்டிருந்தார். தலை குனிந்தபடி, 'ஐயா... தம்பி என்று நினைத்தேன்...' என மென்று முழுங்கினேன்; சிரித்தபடி உள்ளே வந்தார். மறுநாள் வகுப்பில் கலங்கியபடி அமர்ந்திருந்தேன். நிலை கொள்ளாமல் தவித்தேன். வகுப்பு முடிந்ததும், 'மாலையில் என்னை வந்து பார்...' என்றார். நடுக்கத்துடன் சென்றேன். புன்னகையுடன், 'நீ அமைதியும், அடக்கமும் நிறைந்தவன் என தெரியும். ஆனால், இவ்வளவு கோபம் கூடாது... 'எந்த நிலையிலும் தன்னிலை இழக்க கூடாது; எதையும் நிதானமாக சமாளிக்க வேண்டும்; அப்போது தான் எதிர்காலம் சிறப்பாக அமையும்...' என, புத்திமதி கூறினார். அதை மனதில் கொண்டேன். எனக்கு, 81 வயதாகிறது; அவர் தந்த அறிவுரை இன்றும் பயன்படுகிறது. மறக்க முடியாத அந்த பெருந்தகையை வணங்குகிறேன்!

- எஸ்.நாராயணன், சென்னை.தொடர்புக்கு: 97909 58041

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us