PUBLISHED ON : அக் 30, 2021

மதுரை மாவட்டம், சமயநல்லுார், அரசு மேல்நிலைப் பள்ளியில், 1984ல், 12ம் வகுப்பு படித்தபோது புவியியல் ஆசிரியராக இருந்தார் தங்கராஜ். கலை ஆர்வம் மிக்கவர். வீட்டில் இருந்து, முக்கிய வரைபடங்களை எடுத்து வந்து காட்டி, பாடங்களை விளக்குவார். அவை மனதில் பதிந்ததால், நிறைய மதிப்பெண்கள் பெற்றோம்.
ஒருமுறை கைத்திறன் போட்டி நடத்தினார். விதவிதமான கைவினைப்பொருள் செய்து எடுத்து வந்தனர் மாணவ மாணவியர். காய்ந்த பனை ஓலையில், குதிரை ஒன்றை செய்து, வண்ணம் தீட்டியிருந்தேன்.
அத்துடன், செய்முறை நோட்டு அட்டையில் ஒட்டகம் படம் வரைந்து, அது பாலைவனத்தில் நடப்பது போல உருவாக்கியிருந்தேன்; மிகவும் பாராட்டினார்.
பொது தேர்வுக்கு முன் அவரிடம், 'ஆட்டோகிராப்' வாங்க டயரியை நீட்டினேன். அதில், 'இயற்கையே உனக்கு வழிகாட்டி; வாழ்க்கை பயணம் தொடர வாழ்த்துகள்' என எழுதி அன்பளிப்பாக, 10 ரூபாய் தந்து ஆசிர்வதித்தார். மிகவும் நெகிழ்ந்தேன்.
தற்போது, என் வயது, 54; அந்த ஆசிரியர் கொடுத்த, 10 ரூபாயும், நெகிழ்ச்சியான வாழ்த்துகளும் நினைவை விட்டு அகலவில்லை!
- எஸ்.பாபு, மதுரை.
தொடர்புக்கு: 98657 79066
