
மலை நாட்டில் வசித்து வந்தான் சிறுவன் பொன்னன். அவ்வூர் ஜமீந்தாரின் ஆடுகளை மேய்த்து பிழைப்பு நடத்தி வந்தான்.
ஊரை சுற்றி, பச்சை கம்பளம் விரித்தது போல், பசுமையான புல்வெளி இருந்தது. கடமையில், சிறிய தவறும் நேர்ந்து விடாதபடி பொறுப்புடன் இருப்பான்.
ஒரு நாள் -
ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தான் சிறுவன்.
அவ்வழியே வந்த குதிரைவீரன், 'தம்பி... அருகிலுள்ள கிராமத்திற்கு செல்ல வேண்டும்; வழி சொல்ல முடியுமா...' என்று கேட்டான்.
மிக நிதானமாக, 'ஐயா... சற்று சிரமம் தரும் வழிப்பாதை; மிகக் கவனமாக போக வேண்டும்; இல்லையெனில், வழி தவற நேரிடும்...' என, எச்சரித்தபடி வழியை காட்டினான் பொன்னன்.
அவன் விளக்கமாக பேசிய விதம் குதிரைவீரனுக்கு பிடித்து விட்டது.
'என்னுடன் வந்து வழி காட்டுகிறாயா...'
மறுதலித்து தலையசைத்தான் பொன்னன்.
'பணம் தருகிறேன்...'
'ஐயா... வாயில்லாத ஜீவன்கள் இந்த ஆடுகள். அவற்றை பாதுகாப்பின்றி தவிக்க விட்டு வர முடியாது; அவை வழி தவறி சென்று விட கூடும்; சிலசமயம், ஓநாய்களுக்கு இரையாகலாம்; என்னை மன்னியுங்கள். உடன் வந்து உதவ முடியாது...'
'உனக்கு இழப்பு ஏற்பட்டால் என்னால், ஈடு செய்ய முடியும் தம்பி... அவசரமாக போக வேண்டும்; என்னுடன் வந்து வழி காட்டு...'
கட்டளை இடுவது போல பேசினான் குதிரைவீரன்.
'மன்னிக்க வேண்டும் ஐயா... இவை என் ஆடுகள் அல்ல; எஜமானரின் ஆடுகள்; இவற்றை கண்காணிப்பது என் பணி; கடமையை துறந்து, உதவ வருவது முறையல்ல...'
பொன்னனின் குரலில் கண்டிப்பு தெரிந்தது.
அவனை ஆர்வத்துடன் பார்த்த குதிரை வீரன், 'ஆடுகளை, நான் பார்த்து கொள்கிறேன்... கிராமத்திற்கு சென்று எனக்கு வழிகாட்ட யாரையாவது அழைத்து வருகிறாயா...' என்றான்.
'ஐயா... அதிலும் கஷ்டம் இருக்கிறது; புதியவரான உங்கள் குரலையும், தோற்றத்தையும் பார்த்து, ஆடுகள் மிரளும்; உங்களை என்னால் நம்ப முடியவில்லை...'
'என்னையா நம்ப முடியவில்லை...'
வியந்தபடி கேட்டான் குதிரைவீரன்.
'எப்படி ஐயா... உங்களை நம்புவது; என்னை கடமை தவற கூறுகிறீர்களே...'
சிறிதும் பயமோ, தயக்கமோ இன்றி பேசினான் பொன்னன்.
அவனை, நட்புடன் பார்த்தான் குதிரை வீரன். சிறுவனின், கடமையுணர்வு நெஞ்சை தொட்டது.
'நீ, சொல்வது முற்றிலும் சரி; உன்னை போல் விசுவாச பணியாளை பெற்ற, உன் எஜமான் பாக்கியசாலி; கிராமத்திற்கு செல்லும் வழியை மட்டும் கூறு; நான், சமாளித்து கொள்கிறேன்...' என்றான் குதிரைவீரன்.
அப்போது, சில வீரர்கள் அங்கு வந்தனர். குதிரை வீரனை சூழ்ந்து மிகவும் பணிவாக, 'மன்னா... உங்களை, எங்கெல்லாம் தேடுவது...' என கூறி ஆனந்த கூச்சலிட்டனர்.
பொன்னன் முகத்தில் பயம் ஏற்பட்டது.
'குதிரைவீரனாக வந்தவன், இந்நாட்டு மன்னனா... யார் என, அறியாது உதவ மறுத்தேனே; தண்டனை தருவாரோ' என எண்ணியபடி நின்றான்.
அப்போது, 'நீ, கடமை தவறாத கர்மயோகி...' என பாராட்டி, புறப்பட்டான் குதிரையில் இருந்த மன்னன்.
சில நாட்களுக்கு பின் -
பொன்னனை, மன்னரிடம் அழைத்து சென்றான் ஒரு சேவகன்.
அரண்மனையில் நல்ல பணி வழங்கப்பட்டது.
மிகவும் மகிழ்ச்சியோடு, 'மிக்க நன்றி மன்னா... என் எஜமானரிடம் விபரம் கூறி, அவர் வேறொரு பணியாளை நியமித்த பின் வருகிறேன்...' என்றான் பொன்னன்.
தொடர்ந்து அரண்மனையில், கடமை தவறாது பணிபுரிந்து பாராட்டுகளையும், பதவி உயர்வுகளையும் பெற்றான் பொன்னன்.
குழந்தைகளே... எந்த எதிர்பார்ப்பும் இன்றி, கடமை செய்பவருக்கு உயர்வுகள் தேடி வரும்.
ஸ்ரீமல்லிகா குரு

