
துரியோதனன் பாலகனாக இருந்தபோது, ஒரு விஷயம் மிகுந்த மன குடைச்சலை தந்தது.
'மக்கள், ஏன் தருமனை மட்டும் நல்லவனாக கொண்டாடுகின்றனர்... நான் நல்லவனாக தெரிவதில்லையே' என்பது தான் அது. பீஷ்மரிடம் விடை கிடைக்கும் என நம்பினான். அவரை சந்தித்து, அது பற்றி கேட்டான்.
உடனே தருமனை அழைத்த பீஷ்மர், 'உங்கள் இருவரிடமும் ஒரு வேலை தருகிறேன்; மாலைக்குள் முடித்து விட வேண்டும்...' என்றார். ஒப்புக் கொண்டனர்.
துரியோதனனிடம், 'இவ்வூரில் இருக்கும் நல்லவர்களை கணக்கிட்டு வரவேண்டும்...' என்றார்.
தர்மனிடம், 'இவ்வூரில் தீயவர்களை கணக்கிட்டு வா...' என்றார்.
இருவரும் புறப்பட்டனர். மாலையில் திரும்பினர்.
முதலில் தருமனை அழைத்தார்.
அவன், 'இவ்வூரில் தீயோர் என ஒருவர் கூட இல்லை... அனைவரிடமும் ஏதாவது, ஒரு நல்ல குணம் உள்ளது...' என்றான்.
அடுத்து, துரியோதனனை பணித்தார் பீஷ்மர்.
கம்பீரமாக எழுந்தவன், 'ஒருவர் கூட இங்கு நல்லவர்களாக இல்லை... அனைவரிடமும், ஏதாவது தீய குணம் உள்ளது...' என்றான்.
புன்னகைத்த பீஷ்மர், 'இப்போது புரிகிறதா... தருமன், அனைவரிடத்திலும் உள்ள நன்மையை காண்கிறான். நல்லவனாக உள்ளான்; நீ, தீயதை மட்டும் காண்பதால், யாரும் உன் கண்ணுக்கு நல்லவராக தெரியவில்லை...' என்றார்.
குழந்தைகளே... தீமை செய்பவரிடமும் நன்மை இருக்கும் என்பதை உணர்ந்து பழக வேண்டும்!
சவு.சவுஜன்யா

