தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/எடை என்ன தெரியுமா?

எடை என்ன தெரியுமா?

எடை என்ன தெரியுமா?


PUBLISHED ON : மே 09, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 09, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இங்கிலாந்து நாட்டை அரசி எலிசபெத் அரசாண்டு கொண்டிருந்த காலம். அப்போது அவருடைய அவையிலே கவிஞர்களும், போர்ப்படைத் தலைவர் களும், கப்பற்படைத் தலைவர்களும் கூடியிருந்தனர்.

சர் வால்டர் ராலி என்பவர் கப்பற்படைத் தலைவர்களில் ஒருவர். அவர் அமெரிக்காவிலிருந்து புகையிலையைக் கொண்டு வந்தார். அவர் புகை பிடிக்கும் பழக்கத்தையும் கற்றுக் கொண்டு இருந்தார்.

ஒரு தடவை அவர் அரசியோடு கலந்துரையாடிக் கொண்டிருந்தார். அப்போது புகையிலையின் பெருமைகளைப் பற்றிப் பேசினார். மேலும், புகையிலைப் பற்றித் தாம் கேள்விப்பட்டதையெல்லாம் எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார்.

புகையிலையை நெருப்பில் பற்ற வைத்து அதிலிருந்து வெளிவரும் புகையைக் குடித்தால் மனம் அமைதி அடையும் என்பதுடன், தம்முடைய புகையிலையைக் குழாயிலிருந்து கிளம்பும் புகையினுடைய எடை எவ்வளவு என்று நிச்சயமாய்ச் சொல்ல முடியும் என்றும் சொன்னார்.

அதைக்கேட்ட அரசி ஆச்சரியம் அடைந்ததுடன், ''அது எப்படி முடியும்? இது வெறும் புரளி,'' என்று கூறினாள்.

அதற்கு ராலி, ''நான் நிச்சயமாகத் தான் சொல்லுகிறேன். பத்து நிமிடம் புகையிலைக் குழாயில் புகையிலைத் தூளைப் போட்டுப் புகைபிடித்தால் புகையின் எடையைத் துல்லியமாக நான் சொல்லுவேன்,'' என்றார்.

''உம்மால் முடியவே முடியாது. பந்தயம் கட்டுகிறேன்,'' என்று அரசி உறுதியாகக் கூறினாள்.

''அப்படியானால் சம்மதம்!'' என்றார் ராலி.

அவர் உடனே தம்முடைய ஆளைக் கூப்பிட்டுப் புதிய புகையிலைக் குழாய் ஒன்றை கொண்டு வரச் சொன்னார்.

புகையிலை டப்பியையும், தராசுப் படிக் கல்லையும் கொண்டுவரச் செய்து டப்பியிலிருந்து கொஞ்சம் புகையிலையயை எடுத்துத் தராசில் போட்டு நிறுத்து, பின் புகையிலைக் குழாயில் வைத்தார்.

பிறகு அரசியைப் பார்த்து, ''இந்தப் புகையிலையின் எடையைக் குறித்துக் கொள்ளுங்கள். நான் இதைப் பற்றவைத்துக் குடிக்கப் போகிறேன். பத்து நிமிடம் ஆனதும் சொல்ல வேண்டும்,'' என்று கூறினார்.

''சரி!'' என்றாள் அரசி.

ராலி அந்தக் குழாயிலிருந்த புகையிலையைப் பற்ற வைத்துப் புகைபிடித்துக் கொண்டிருந்தார். பற்ற வைத்த புகையிலையிலிருந்து உண்டான புகை ராலியின் வாய்க்குள் கொஞ்சமும், காற்றில் கொஞ்சமும் போய்க் கொண்டிருந்தது.

பத்து நிமிடம் ஆனதும் அரசியார், ''நிறுத்து நிறுத்து!'' என்றாள்.

உடனே, ராலி குழாயிலிருந்து புகையிலையின் நெருப்பை அணைத்து விட்டார்.

அரசியார் அவரைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே, ''வாய்க்குள்ளும் காற்றிலும் போன புகையை எப்படிப் பிடித்துக் கொண்டு வந்து நிறுத்தப் போகிறீர்?'' என்று கிண்டல் செய்தார்.

'அரசியாரே சற்றே பொறுத்தருள வேண்டும்,'' என்று கூறினார் ராலி.

''ஆகா, நீங்கள் காற்றிலும் வாயிலும் கலந்து போன புகையைப் பிடித்துக் கொண்டு வருகிறவரைக்கும் நான் காத்திருக்க வேண்டுமா? நல்ல பேச்சு!'' என்று கூறி சிரித்தாள் அரசி.

ராலி பதிலொன்றும் பேசாமல் புகையிலைக் குழாயில் மீந்திருந்த புகையிலையை மிகவும் ஜாக்கிரதையாகத் தராசுத் தட்டில் கொட்டி அதை எடை போட்டார். பற்ற வைப்பதற்கு முன்னால் இருந்த எடையிலிருந்து இந்த எடையைக் கழித்தார். பிறகு அரசியைப் பார்த்துப் புகையிலைப் புகையின் எடை இவ்வளவு என்று, முன்னும் பின்னுமுள்ள எடை வித்தியாசத்தைக் குறிப்பிட்டுச் சொன்னார்.

அதைக் கேட்ட அரசி ஆச்சரியம் அடைந்து அவர் சொன்னதை ஒப்புக் கொண்டு, அவருடைய அறிவுத் திறனைப் புகழ்ந்தாள். தான் பந்தயமாக வைத்த நூறு பொன்னை அவருக்குக் கொடுத்தாள்.

''நாட்டில் எத்தனையோ பேர் பொன்னையும் பொருளையும் கரியாக்கிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், நீங்களோ கரியையே பொன்னாக்கி விட்டீர்கள்,'' என்று ராலியைப் புகழ்ந்து கொண்டாடினாள் அரசியார்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us