PUBLISHED ON : ஆக 03, 2018

கடந்த, 1963ல், காரைக்குடியில் உள்ள, தனியார் உயர்நிலைப் பள்ளியில், 9ம் வகுப்பு படித்தேன். அனைத்து பாடங்களிலும், முதல் மதிப்பெண் எடுப்பேன். ஆனாலும், சமூக அறிவியல் ஆசிரியர் மட்டும், என்னை எப்போதும், மட்டம் தட்டியபடியே இருப்பார்.
பெற்றோரை இழந்த எங்கள் குடும்ப சூழலும், என் சகோதரிகளும், அந்த பள்ளியிலேயே படித்து முடித்திருந்ததால் என் மேல், மிகவும் பரிவு காட்டுவார் தலைமை ஆசிரியர்.
அதனால், என்னைப்பற்றி புகார் செய்ய முடியாமல், என் விடைதாளில் மதிப்பெண் குறைவாக கொடுத்து, அவர் பாடத்தில் முதலிடம் வராமல் செய்து விடுவார்.
ஒரு நாள், 9ம் வகுப்பில் உள்ள, நான்கு பிரிவு மாணவர்களும், நான்கு ஆசிரியர்களும் கூடி இருந்தோம்.
அந்த அறையின் மேல் பகுதியை சுற்றி, தேசத் தலைவர்கள் படம் மாட்டப்பட்டிருக்கும்.
நான், சக மாணவியருடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தேன்; ஆசிரியர் என்னை மட்டும் எழுந்து, நடுவில் நிற்க வைத்து, 'இப்படி சிரிக்கிறாயே... இந்த தலைவர்கள் எல்லாம், உன்னைப் பார்த்து, என்ன சொல்கின்றனர் தெரியுமா...' என்று கேட்டார்.
நான், 'தெரியும் சார்...' என்றேன்.
'என்ன சொல்லு...' என்றார்.
'குற்றம் செய்வது மனிதத் தன்மை; அதை மன்னிப்பது தெய்வத் தன்மை என்று சொல்கின்றனர்...' என்றேன். அவ்ளோதான் மாணவர்கள், மகிழ்வுடன் கை தட்டினர்.
அன்றிலிருந்து, என்னை ஒன்றும் சொல்வதில்லை. தற்போது நானும், ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியை. அந்த நிகழ்வு மனதை விட்டு நீங்காததால், என் பணிக்காலத்தில், மாணவர்களை, அன்பாகவும், கண்ணியமாகவும் அரவணைத்து பணிபுரிந்தேன்.
அதைப் போல், ஆசிரியர்களும், மாணவர்களும் அன்பாய் நடந்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகிறேன். தற்போது என் வயது; 70.
- ச.இந்திராள், சிவகங்கை.
