PUBLISHED ON : ஆக 03, 2018

கடந்த, 1982ல், துாத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டையில், 10ம் வகுப்பு படித்தேன். அப்போது, தமிழ் பாடத்தில், 'மாணவர் மன்ற தேர்வு' வைப்பர். இரு பக்கமும் ஏறக்குறைய, 30 மதிப்பெண்ணுக்கு விடை எழுதியிருந்தேன்.
நண்பனுக்காக, அந்த, 'சிங்கிள் ஷீட்' மட்டும், 'பாஸ்' பண்ணி விட்டேன்.
தேர்வு முடியும் சமயம் வந்தது; என்னுடைய அந்த சிங்கிள் ஷீட் மட்டும் திரும்ப வரவில்லை.
மிகவும் பதற்றப்பட்டு, கண்ணாலும், சைகையாலும், 'என் பேப்பர் யாரிடம் இருக்கிறது...' என்று கேட்டதற்கு, யாரும் தன்னிடம் இல்லை என்று சைகையால் சொல்லி விட்டனர்.
நேரமும் இல்லாததால், அந்த சிங்கிள் ஷீட் இல்லாமல் விடைத்தாளை கட்டி, ஆசிரியரிடம் மிகவும் வருத்தத்துடன் கொடுத்து விட்டேன்.
எப்போதும், 90 மதிப்பெண்ணுக்கு மேல் வாங்கும் நான், பிறருக்கு உதவ போய், 61 மதிப்பெண் தான் வாங்கினேன். 90 மதிப்பெண்ணுக்கு மேல் வாங்கினால், ஒரு சான்றிதழ் கிடைக்கும்.
என் ஆசிரியர், 'ஏன் இவ்வளவு மதிப்பெண்கள் குறைந்தது...' என்று கேட்டார். நான் என்ன சொல்ல முடியும்.
இன்று வரை, அந்த விடைத்தாளை எடுத்தது யார் என்று தெரியாது.
இதை, இன்று படிக்கும் என் சக மாணவர்கள் யாராவது, 'விடைத்தாளை அன்று கொடுக்க முடியவில்லை...' என்று கூறினால், மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.
- எஸ்.சுப்பிரமணியன், சென்னை.
