
நாகை மாவட்டம், வேதாரண்யம், அரசு மேல்நிலைப் பள்ளியில், 1988ல், 11ம் வகுப்பு படித்த போது, விலங்கியல் ஆசிரியர் சிவகுருநாதன். தலைமையாசிரியராகவும் இருந்தார்.
பாடத்தில், 100 மதிப்பெண் எடுத்தாக வேண்டும் என கண்டிப்புடன் படிக்க வைப்பார். கவனம் குறைந்தால், தலையில் குட்டு உண்டு; பிரம்படியும் நிச்சயம்.
விலங்கியல் பாடம் என்றாலே அலர்ஜியில் தவிப்பேன்; அடி வாங்குவேன். அவரை கண்டால் பயந்து ஓடுவோம். வெறுப்பின் உச்சத்தில் இருந்தோம்.
பள்ளி அருகே புதிதாக வீடு கட்டியிருந்தார். சுற்றுச்சுவர் வெளிப்புறத்தில், 'விளம்பரம் செய்யாதே' என, எழுதியிருந்தார்.
ஒரு நாள் இரவு, 'விளம்பரம் செய்ய மாட்டோம்...' என, சுவரை எழுத்தால் நிரப்பி ஓடி விட்டோம்.
மறுநாள், பாடம் முடிந்ததும், 'வெறுப்பில் அலங்கோலமாக எழுதியுள்ளனர். நான் நினைத்தால், காவல் நிலையத்தில் புகார் கொடுத்து தண்டிக்க முடியும். சம்பந்தப்பட்ட மாணவர்களின் வாழ்க்கை பாழாகும்... நல்வழிப்படுத்த தான் முயற்சிக்கிறேன். அது பிடிக்கவில்லை என்றால், சராசரி ஆசிரியர் போல் நடந்து கொள்கிறேன்... இனி, யாரையும் கண்டிக்க போவதில்லை...' என்றார்.
என்னை அறியாமல் கண்ணீர் உகுத்தேன். பாதம் பணிந்து மன்னிப்பு கேட்டோம். சிறப்பாக வாழ ஆசி கூறினார். அவரது வாக்கு பலித்தது. நல்ல நிலையில் உள்ளோம்.
என் வயது, 50; இன்றும் அந்த ஆசிரியரை மறக்க முடியவில்லை.
- வே.விநாயகமூர்த்தி, சென்னை.
தொடர்புக்கு: 91766 51811

