
திருநெல்வேலி, டவுன் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 1998ல், 12ம் வகுப்பு படித்தபோது, நடந்த சம்பவம்!
அன்று, வணிகவியல் வகுப்புத்தேர்வு நடந்தது. தோழியும், நானும், பாடங்களை சரியாக படிக்கவில்லை. ஒருவரை ஒருவர் காப்பியடித்து எழுதினோம்.
ஆசிரியர் தேவசகாயம் கண்டுபிடிக்க மாட்டார் என்று எண்ணியிருந்தோம். திருத்திய போது கண்டுபிடித்து, தனியாக அழைத்து விசாரித்தார்.
நாங்கள் கடுமையாக மறுத்தோம்.
மிக கனிவாக, 'யாரோ ஒருவரைப் பார்த்து காப்பி அடித்து எழுதி உள்ளீர்; எந்த வினா என்று சொல்லுங்கள்... அதற்கு உரிய மதிப்பெண்ணை மட்டும் குறைக்கிறேன்...' என்றார்.
தவறை ஒப்புக் கொண்டோம். மன்னித்து அறிவுரைத்தார். திருந்தி, காப்பியடிக்கும் செயலை விட்டு ஒழித்தோம்.
என் வயது, 38; தவறை கண்டுபிடித்தும் தண்டிக்காமல், கனிவுடன் அறிவுரைத்த அந்த ஆசிரியரின் அணுகுமுறை இன்றும் வியப்பில் ஆழ்த்துகிறது.
- பொன்னம்மாள் மணிகண்டன், நெல்லை.
தொடர்புக்கு: 81908 73244

