PUBLISHED ON : டிச 13, 2013

முன்னொரு காலத்தில், திருடன் ஒருவன் இருந்தான். அவன் தன் மகன் மோகனுக்குத் திருட்டுத் தொழிலைச் சொல்லித் தந்தான்.
''மகனே! என்னைப் போல நீயும் திறமையான திருடனாக விளங்குவாய். பெரியவர்கள், ஞானியர்கள் பேசுவதைக் கேட்காதே. அப்படிக் கேட்க நேர்ந்தால், காதுகளைப் பொத்திக் கொள். அவர்கள் உன்னை நல்வழியில் திருப்பி விடுவர்,'' என்று அறிவுரை சொன்னான்.
ஆண்டுகள் சென்றன. தந்தைக்குப் பிறகு அவன் திருட்டுத் தொழிலைத் திறமையாகச் செய்து வந்தான்.
அந்த நகரத்திற்கு மகாவீரர் அவர்கள் வருகை தந்தார். பெரிய மேடையில் அமர்ந்து மக்களுக்கு அருளுரை வழங்கிக் கொண்டிருந்தார்.
திருடிய பொருள்களுடன் மோகன் அந்த வழியாக வந்தான்.
'பெரியவர்கள் பேச்சைக் கேட்காதே...' தந்தையின் அறிவுரை அவன் நினைவுக்கு வந்தது.
இரு காதுகளையும் கைகளால் நன்றாகப் பொத்திக் கொண்டு நடந்தான்.
அப்போது முள் ஒன்று அவன் காலில் குத்தியது. அந்த முள்ளை எடுப்பதற்காக காதைப் பொத்தியிருந்த கையை எடுத்தான்.
''தேவர்கள் திருவடி தரையில் படியாது. அவர்கள் கண்கள் இமைக்காது,'' மகாவீரர் அவர்கள் பேசியது அவன் காதில் விழுந்தது.
விரைந்து முள்ளை எடுத்த அவன், மீண்டும் காதை பொத்திக் கொண்டு அங் கிருந்து நடந்தான்.
சில நாட்களில், அவன் காவலர்களிடம் சிக்கிக் கொண்டான். அவர்கள் அவனைக் கொடுமைப் படுத்தினர்.
திருடியதை அவன் ஒப்புக் கொள்ள வில்லை.
உண்மையை வரவழைக்க நினைத்த அவர்கள் அவனுக்கு மயக்க மருந்து தந்தனர்.
மயங்கிய நிலையில் அவனை அழகிய பூஞ்சோலை ஒன்றில் கிடத்தினர். அவனைச் சூழ்ந்து அழகிகள் பலர் இருந்தனர்.
மயக்கம் தெளிந்த அவன் தன்னைச் சூழ்ந்து அழகிகள் இருப்பதைப் பார்த்தான். தான் பூஞ்சோலையில் இருப்பதும் தெரிந்தது.
குழப்பம் அடைந்த அவன், ''அழகிகளே! நீங்கள் யார்? நான் எங்கே இருக்கிறேன்?'' என்று கேட்டான்.
''இது தேவ உலகம். நாங்கள் தேவ மகளிர். இங்கே உள்ளவர்கள் உண்மையே பேசுவார்கள். நீர் யார்? பூவுலகத்தில் என்ன செய்தீர்?'' என்று அவர்கள் இனிமையாக கேட்டனர்.
அவர்கள் கால்கள் தரையில் படுவதையும், கண்கள் இமைப் பதையும் கவனித்தான் அவன்.
மகாவீரர் அவர்கள் பேசியது அவன் நினைவுக்கு வந்தது.
இவர்கள் தேவ மகளிர் அல்லர். என்னை ஏமாற்ற சூழ்ச்சி செய் கின்றனர் என்பதைப் புரிந்துக் கொண்டான்.
தன்னை மறந்த அவன், ''மகா வீரர் அவர்கள் பேச்சைச் சிறிது நேரம் கேட்டேன். நீங்கள் தேவ மகளிர் அல்லர். பூவுலக மகளிர்தான் என்பதை அறிந்து கொண்டேன். அவர் அருளுரை யைத் தொடர்ந்து கேட்டால் என்னென்ன நன்மைகள் விளையுமோ?
'' எனக்கு மட்டும் விடுதலை கிடைத்தால் திருட்டுத் தொழிலை விட்டுவிடுவேன். மகாவீரர் அவர் களின் சீடனாகி வாழ்நாளைக் கழிப்பேன்,'' என்று உணர்ச்சி பொங்கச் சொன்னான்.
நடந்ததை அவர்கள் அரசனிடம் சொன்னார்கள். அவன் பேசியது உண்மை என்பதை அறிந்தான் அரசன். அவனை விடுதலை செய்தான்.
சொன்னது போலவே, அவன் மகாவீரர் அவர்களின் சீடன் ஆனான். எஞ்சிய காலத்தை அறவழியில் செலுத்தினான்.
***
