PUBLISHED ON : ஆக 06, 2010

கடலில் இன்பமாக குளித்துக் கொண்டிருந்தான் சாட்விக். கடலில் குளிப்பதென்றால் சாட்விக்குக்கு கொள்ளைப் பிரியம். நேரம் செல்வதே தெரியாமல், கடல் நீரில் எவ்வளவு நேரமானாலும் குளித்துக் கொண்டேயிருப்பான். அன்றும் வழக்கம் போல் கடல் நீரில் குளித்துக் கொண்டிருந்தான் சாட்விக். கடல் அலையில் மூழ்கி எழுந்தபடி வெகு நேரமாகக் குளித்துக் கொண்டிருந்தான்.
அப்போது திடீரென தன் மீது ஏதோ ஒன்று விழுவதை உணர்ந்த சாட்விக், திடுக்கிட்டு கடல் நீரை விட்டு மேலே எழும்பினான். தன் உடல் முழுவதும் வலையால் மூடியிருப்பதைக் கண்டு திடுக்கிட்டான். மெல்ல மெல்ல தான் கரையை நோக்கி இழுக்கப்படுவதை உணர்ந்தான். தன் உடல் ஒட்டு மொத்தமாகக் கரையை நோக்கி இழுக்கப்பட்டதும் கடற்கரையை நோக்கினான் சாட்விக்.
கடற்கரையில் வலையைப் பிடித்தபடி மீனவன் நின்று வலைக்குள் மனித உருவம் இருப்பதைக் கண்டு திடுக்கிட்ட அவன், வேகமாக ஓடிவந்து வலையை அவிழ்த்து சாட்விக் விடுவித்தான்.
''நான் கடலில் குளிக்கிற நேரம் என் சுதந்திரத்தைக் கெடுத்து விட்டாயே! உன்னை என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை. உன்னைப் பார்க்கிறபோது, எனக்கு ஆத்திரமாக வருகிறது!'' என்று கத்தினான்.
உடனே மீனவன், ''இளைஞனே! நீ என் மீது ஆத்திரம் கொள்ளாதே! கடலில் வலை வீசி மீன் பிடிப்பது என் தொழில். ஏதோ நான் வலையை வீசுகிறபோது, நீயும் வலையினுள் மாட்டிக் கொண்டாய். அதற்காக என்னிடம் இப்படிக் கோபப்படலாமா?'' என்று கேட்டார் மீனவர்.
அதைக் கேட்டதும் சாட்விக்குக்கு ஆத்திரம் வந்துவிட்டது.
''நீ கடலில் தொழில் செய்கிறாயே, அதைப் போலத்தான் நானும் கடலில் குளிப்பதை எனது உரிமையாகக் கருதுகிறேன். என்னை இழிவுபடுத்திய உன்னை விடமாட்டேன்! நீ எனக்கு பெரிய அவமானத்தை ஏற்படுத்திவிட்டாய். என் வாழ் நாளிலேயே இப்படியொரு அவமானத்தை எனக்கு யாருமே ஏற்படுத்தியதில்லை!'' என்று துடிப்போடு கூறினான்.
அந்த மீனவன் சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்தான்.
'இந்த இளைஞனின் கொட்டத்தை எப்படியாவது அடக்க வேண்டும். இவனை இப்படியே விட்டு வைத்தால், மேலும், மேலும் நம்மிடம் வம்பு செய்து கொண்டேயிருப்பான்' என்று மனதுள் எண்ணிய மீனவருக்கு, திடீரென ஓர் யோசனை தோன்றியது. தன் கையில் இருந்த வலையை விரித்து, மீண்டும் சாட்விக்கை வலையில் போட்டு, வலைக்குள் அமுக்கி மூட்டையாகக் கட்டினான்.
அதைக் கண்டு திடுக்கிட்ட சாட்விக், ''ஏய்... என்ன செய்கிறாய்? எதற்காக என்னை வலையில் போட்டுக் கட்டுகிறாய்?'' என்று ஆத்திரத்தோடு கேட்டான்.
உடனே மீனவன், ''இளைஞனே! நீ தானே சற்று நேரத்திற்கு முன்னால் கூறினாய், வலையும், வலையில் சிக்கியுள்ள பொருட்களும் எனக்கு சொந்தம் என்று. கடலுக்குள்ளேயிருந்து என் வலையில் சிக்கிய நீ எனக்கு சொந்தம் தானே! அதனால், உன்னை இப்படியே கல்லைக்கட்டி கடலில் போடுகிறேன். இனிமேல் நீ நிரந்தரமாகக் கடலில் மூழ்கி விடலாம்!'' என்றான்.
அதைக் கேட்டதும் சாட்விக் பயத்தால் அலறியே விட்டான். ''ஐயா! என்னை விட்டுவிடுங்கள்! இனிமேல் உங்களிடம் வம்பு எதுவும் செய்யமாட்டேன். இனிமேல், இந்தக் கடற்கரை பக்கமே வரமாட்டேன்!'' என்று அழுது புலம்பினான்.
மீனவன் உடனே சாட்விக்கை வலையில் இருந்து விடுவித்தான். மீனவனின் முகத்தைக் கூடத் திரும்பிப் பார்க்காமல் ஓட்டமெடுத்தான் சாட்விக்.
***
