தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/குமணன்! (தொடர்கதை)

குமணன்! (தொடர்கதை)

குமணன்! (தொடர்கதை)


PUBLISHED ON : ஆக 06, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 06, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தொடர் - 2

''என் தாயார் உயிருடன் இருக்கிறார். அவர் மிக்க முதியவர், கண் தெரியாது. கையில் உள்ள தடியையே காலாகக் கொண்டு அடியெடுத்து நடக்க முடியாமல் தவிக்கிறார். வெண்ணூலை விரித்தாற்போன்ற கூந்தலை உடையவள். என் உயிர் இன்னும் போகவில்லையே என்று கூறிக் கொண்டு பசியாலும் நோயாலும் துன்பப்பட்டுக் கொண்டு இருக்கிறார்.

''சமைக்காத காரணத்தினால் என் இல்லத்தில் உள்ள அடுப்பில் பல நாட்களாக காளான் முளைத்துக் கிடக்கிறது.

''உணவில்லாக் காரணத்தினால் என் மனைவி எலும்பும் தோலுமாய் மெலிந்து விட்டாள். அவளது இடையில் மாசோடு கூடிய கிழிந்த கந்தல் ஆடையை கட்டிக் கொண்டு இருக்கிறாள்.

''அவளுடைய மார்பில் குடிக்கப் பால் இல்லை. அதனால், பச்சிளம் குழந்தை தாய் முகம் நோக்கிப் பதறி அழுதது.

''குழந்தையின் அழுகையைக் கேட்டு வருந்திய தாய் என்னைப் பார்த்து கலங்கினாள்; கண்ணீர் வடித்தாள்.

''அவளின் கலக்கம் தீரும் பொருட்டு நான் உன்னைக் காண வந்தேன். உன் நிலைமையோ இந்த நிலையில் இருக்கிறது. இருந்தும், உன்னிடம் பொருள் வேண்டி நிற்கின்றேன். ஆயினும், நீ உயர் குடியில் பிறந்தவன். ஆதலினால் என்னை வெறுங்கையுடன் அனுப்ப மாட்டாய் எனும் துணிவுடனேயே இருக்கிறேன்!'' என்று தமது வறுமை நிலையை வெளிப்படுத்தும் பாட்டு ஒன்றையும் பாடினார்.

பிறர் துயரம் காணப் பொறுக்காத குமணன், புலவர் பெருந்தலைச் சாத்தனாரது நிலையை உணர்ந்தான். உள்ளம் உருகினான். காட்டில் மறைந்து வாழும் நிலையிலும் அவரது வறுமையை நீக்கக் கருதினான். ஆயினும், தன்னிடம் ஒன்றும் இல்லையே என்று ஏங்கினான். அதனால், மிகவும் வருத்தம் அடைந்தான். இல்லை என்று கூறுவதைவிட இறப்பதே சிறந்தது என்றும் எண்ணினான்.

அப்போது அவனுடைய தம்பி இளங்குமணன் பறையறைவித்திருந்த செய்தி அவன் நினைவுக்கு வந்தது. உடனே மிக்க மகிழ்ச்சி அடைந்தான். புலவர் பெருந்தலைச் சாத்தனாரை அருகில் அழைத்தான். அவரிடம், ''புலவர் பெருந்தகையே! நான் முதிர மலை நாட்டில் அரசு புரிந்து வரும் காலத்தில் தாங்கள் வரவில்லை. அருமை நாட்டை இழந்து காட்டில் மறைந்து வருந்தி வாழும் காலத்தில் வந்திருக்கிறீர்கள். அதனால் 'இல்லை' என்று கூறி, வெறுங்கையுடன் தங்களை அனுப்ப என் மனம் ஒப்பவில்லை. என் தலையைக் கொண்டு வருபவர்களுக்கு கோடிப் பொன் தருவதாக என் தம்பி கூறியுள்ளான்.

''ஆகவே, என் தலையை வெட்டி எடுத்துக் கொண்டு செல்லுங்கள். என் தம்பியிடம் கொடுங்கள். அதன் விலையாகிய கோடிப் பொன்னை அவனிடமிருந்து பெற்றுக் கொள்ளுங்கள். அதன் வழியாக தங்களுடைய வறுமை நோயைப் போக்கிக் கொள்ளுங்கள்!'' என்று கூறினான். அவ்வாறு கூறியதோடு, தன் கையில் இருந்த உடைவாளை நீட்டி தன் தலையை சாய்த்து நின்றான்.

இவற்றைக் கேட்ட புலவர் பெருந்தலைச் சாத்தனார் துடியாய்த் துடித்தார். மனம் பதைத்தார். என்ன செய்வது என்று தெரியாமல் சிறிது நேரம் தயங்கினார். பின்னர் உடைவாளை வாங்க காலம் தாழ்த்தினால், தானே தன் தலையை வெட்டிக் கொண்டு விடக்கூடுமே எனக் கருதினார். அதனால், அவர் குமணன் கையிலிருந்த உடைவாளை இரு கையாலும் வாங்கிக் கொண்டார். பின்னர் அவனைப் பார்த்து, ''தலைக்கொடை தந்த வள்ளலே! நீ எனக்கு பரிசிலாகத் தந்த உன் தலையை, நான் இன்னும் சில நாள் சென்ற பின்னர் திரும்பி வந்து பெற்றுக் கொள்கிறேன்!'' என்று சொல்லிவிட்டு, குமணன் தந்த வாளுடன் அங்கிருந்து விரைந்து புறப்பட்டார். தம் வறுமை நிலையை மறந்தார்.

குமணனை நாடாள வைக்க வேண்டும் என்றும், இளங்குமணனை நல்வழிப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடனும் சென்றார்.

புலவர் பெருந்தலைச் சாத்தனார் கையில் வாளேந்தியபடி இளங்குமணன் அரண்மனை வாயிலை அடைந்தார். தம் வரவை அவனுக்கு அறிவித்தார். இளங்குமணனைக் கண்டார்.

இளங்குமணன் அவரை அன்புடன் வரவேற்றான். இருக்கையில் அமரச் செய்தான். ''தாங்கள் வந்ததன் நோக்கம் என்ன?'' என்று கேட்டான்.

புலவர் பெருந்தலைச் சாத்தனார் அதுவே இளங்குமணனை நல்வழிப்படுத்துவதற்கு ஏற்ற சமயம் எனக் கருதினார். அவனை நோக்கி உணர்ச்சியோடு பேசினார்.

''அரசே! எந்தப் பொருளும் இந்த உலகில் நிலைத்திருப்பதில்லை. ஆயினும், நிலையில்லா இந்த உலகத்தில் நிலைத்து நிற்பதை விரும்பி வாழும் வகையினை அறிந்தவர்களும் உள்ளனர். அவர்கள் எல்லாரும் தங்கள் புகழ் உலகம் உள்ள அளவும் நிலைத்து நிற்குமாறு செய்து விட்டு சென்று விட்டனர். இந்த உலகம் கொடுக்காது இறந்தவர்கள் எல்லாரையும் மறந்துவிட்டது. ஆயினும் கொடுத்தும் புகழ் நிறுவியவர்களை மட்டும் மறவாது போற்றி வருகிறது.

''அப்படி உலகம் போற்றி வருபவர்களுள் ஒருவனாய் உயர்ந்து விட்டான் உன் அண்ணன். அப்படிப்பட்ட உன் அண்ணனை, நீ அழியத்தக்க செல்வத்தை விரும்பிக் காட்டிற்கு ஓட்டியது சரியாகுமா? வறுமை அடைந்த நான் அவன் வாழும் காட்டிற்குச் சென்றேன். அவனைத் தேடிக் கண்டு பிடித்தேன். அவனுடன் பேசி மகிழ்ந்தேன். என் வறுமை நிலையை பாட்டின் வாயிலாகத் தெரிவித்தேன்.

''அவன் என் நிலை கண்டு மிகவும் வருத்தப்பட்டான். எனக்கு கொடுப்பதற்குரிய பொருள் ஒன்றும் அப்போது அவனிடம் இல்லை. அதனால், மிக்க துயரம் அடைந்தான். ஆயினும் 'இல்லை' என்று கூறி என்னை வெறுங்கையுடன் அனுப்ப அவன் துணியவில்லை. தன் தலையை வெட்டிக் கொண்டு போய் உன்னிடத்தில் கொடுத்து கோடிப் பொன்னைப் பெற்றுக் கொள்ளும்படி, என்னிடம் தன் உடைவாளைக் கொடுத்துள்ளான். இதோ அந்த உடைவாள்!'' என்று காட்டினார் புலவர் பெருந்தலைச் சாத்தனார்.

இந்தப் புலவரின் பேச்சு இளங்குமணன் மனத்தை உருக்கியது. அவன் உள்ளத்தில் அன்பைப் பெருக்கியது. அவன் தன் அண்ணனுக்குச் செய்த கொடுமைகளை எண்ணி வருத்தப்பட்டான். பொறாமை எனும் பாவியைப் போக்கினான். பகைமையை மறந்து கீழ்த்தரமான நெறியை உதறித் தள்ளினான். புகழ்மிக்க நெறியில் நிற்க உறுதி பூண்டான்.

உடனே புலவரோடு புறப்பட்டுச் சென்றான். அண்ணன் மறைந்து வாழ்ந்த காட்டை அடைந்தான். அவர் திருவடிகளில் விழுந்து வணங்கினான். தான் செய்த குற்றங்களை எல்லாம்மன்னிக்கும்படி வேண்டிக் கொண்டான்.

தம்பியின் இச்செயலைக் கண்ட அண்ணன் அவனை கட்டித் தழுவிக் கொண்டான். அவனுக்கு ஆறுதல் கூறினான். தான் காட்டில் வாழ்வதையே விரும்புவதாகவும், இன்பமாகக் கருதுவதாகவும் எடுத்துக் கூறினான். அதனால், அவனையே நாட்டை ஆளுமாறும் வேண்டிக் கொண்டான்.

இளங்குமணன் புலவர் பெருந்தலைச் சாத்தனாரை நோக்கினான். அவன் நோக்கியதன் குறிப்பை அறிந்தார் பெருந்தலைச் சாத்தனார்.

''வள்ளல் பெருமானே! நீ எனக்கு பரிசிலாக அளித்த உன் தலையில் நான் முடிசூட்ட கருதுகிறேன். அதற்கு தடையும் உண்டோ?'' என்று நயம்பட பேசிக் குமண வள்ளலை இணங்க வைத்தார்.

புலவரும் இளங்குமணனும், வள்ளல் குமணனை முதிர மலை நாட்டிற்கு அழைத்து வந்தனர். புலவர் பெருந்தலைச் சாத்தனார் வள்ளல் குமணனுக்கு முடி சூட்டினார். குமணன் அரியணை ஏறினான்.

இதைக் கண்டு அங்குள்ள மக்கள் யாவரும் மகிழ்ந்தனர். நாட்டில் மீண்டும் அமைதி நிலவியது.

காட்டில் மறைந்திருந்து வாழ்ந்த காலத்தும், இல்லை என்று இயம்புவதைக் காட்டிலும் இறத்தலே இனிது எனக் கருதி தலையைக் கொடுத்துப் புலவரின் வறுமையைப் போக்கத் துணிந்த குமண வள்ளலின் அரிய செயலை அறிந்த அனைவரும் அவனை 'தலைக்கொடையாளி' என்று பாராட்டினர்.

(— முற்றும்)

***



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us