
ஒரு ஊரில் விவசாயி ஒருவன் இருந்தான். அவனுக்குச் சிறிதளவு நிலம் சொந்தமாக இருந்தது. விவசாயம் செய்வதற்காக நீர் கிடைக்கவில்லை. அதனால் நிலத்தில் கிணறு தோண்டி, நீர்த் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தான்.
நீருக்காக நிலத்தில் பல இடங்களில் தோண்டினான். ஆனால், தண்ணீர் கிடைத்த பாடில்லை. இவ்வாறு தோண்டித் தோண்டி மிகவும் களைத்துப் போனான்.
அப்போது, பக்கத்து ஊருக்கு முனிவர் ஒருவர் வந்திருப்பதாகவும், அவரிடம் சென்று முறையிட்டால் தனது கஷ்டங்களுக்கு விடிவு கிடைக்கும் என்றும், அவனது நண்பர் ஒருவர் அந்த விவசாயியிடம் கூறினான்.
நண்பர் கூறிய யோசனையின்படி, அந்த விவசாயி அடுத்த நாளே, பக்கத்து ஊருக்குச் சென்றான்.
அங்கிருந்த முனிவரை வணங்கி, ''சாமி! என்னோட நிலத்துக்குத் தண்ணீர் வேணும்... பயிரெல்லாம் காயுது. பல இடங்களில் கிணறு தோண்டியும் தண்ணீர் கிடைக்கவில்லை. என்ன பண்றது சாமி? இதுக்கு நீங்கதான் ஒரு வழி காட்டணும்,'' என்று அந்த விவசாயி கேட்டுக்கொண்டான்.
''காலையிலிருந்து இதுவரை எத்தனை இடங்களில் தோண்டியிருப்பாய்?'' என்று அந்த விவசாயியைப் பார்த்துக் கேட்டார் முனிவர்.
''சாமி! இது வரைக்கும் பத்துப் பன்னிரெண்டு இடங்களில் தோண்டியிருப்பேன்! ஆனால், தண்ணியைத் தான் காணோம்,'' என்றான்.
''மகனே! உன்னுடைய கடுமையான உழைப்பைப் பெரிதும் பாராட்டுகிறேன். தொடர்ந்து விடா முயற்சியும் செய்தாய்! அது சரி! நீ தோண்டிய குழி ஒவ்வொன்றும் எவ்வளவு ஆழம் இருக்கும்?'' என்று கேட்டார் முனிவர்.
''ஒவ்வொரு குழியும் சுமார் பத்து அடி ஆழம் இருக்கும்!'' என்று பதில் கூறினான் விவசாயி.
''மகனே! உன்னிடம் உழைப்பும், விடாமுயற்சியும் அளவுக்கு அதிகமாகவே இருக்கிறது. ஆனால், உன்னிடம் சிந்திக்கும் திறன் குறைவாக இருக்கிறது... அத்துடன் ஒருமித்த முயற்சியும் உன்னிடம் இல்லை...'' என்று கூறினார் முனிவர்.
முனிவர் கூறியதைக் கேட்ட விவசாயி, ''சாமி! என்ன சொல்கிறீர்கள்? எனக்கு ஒன்றும் புரிய வில்லையே!'' என்று வினவினார்.
''மகனே! நீ பத்து இடங்களில் பத்து அடி ஆழத்துக்குத் தோண்டியிருக்கிறாய்! கிட்டத்தட்ட நூறு அடி! வீணாகப் பல இடங்களில் தோண்டிய அந்த நேரத்தில், ஒரே இடத்தில் நூறு அடி தோண்டியிருந்தால், இந்நேரம் உனக்குத் தேவையான அளவுக்குத் தண்ணீர் கிடைத்திருக்கும். ஒரு செயலை முழுமையில்லாமல், அரைகுறையாகச் செய்தால், விளைவு இப்படித்தானிருக்கும். சிந்தனையைச் சிதறவிடாமல் ஒரு முகப்படுத்தி, ஒரே இடத்தில் தோண்டிப் பார்! நிச்சயம் தண்ணீர் கிடைக்கும்,'' என்று கூறினார் முனிவர்.
முனிவர் சொன்ன மாதிரி விவசாயி செய்தான். அவனுக்குத் தேவையான அளவுக்கு நீர் கிடைத்தது. விவசாயி மகிழ்ச்சி அடைந்தான்.
***