
மருதூர் என்னும் ஊரில் செல்லப்பன் என்பவன் இருந்தான். எங்கே துன்பம் நேர்ந்தாலும் சரி அங்கே சென்று, அந்த துன்பத்தைத் தீர்த்து வைக்கத் தன்னாலான முயற்சி செய்வான். இதையே கடமையாகக் கொண்டிருந்தான் அவன். இதற்காக, ஒவ்வொரு ஊராகச் சென்று கொண்டிருந்தான். வழக்கம் போல் ஓர் ஊரை நெருங்கினான்.
அவன் எதிரில், கவலை தோய்ந்த முகத்துடன் இளைஞன் ஒருவன் வந்தான்.
''தம்பி! ஏன் கவலையாக இருக்கிறாய்?'' என்று கேட்டான் செல்லப்பன்.
மேலும், கீழும் அவனைப் பார்த்த இளைஞன், ''ஐயா! யாராலும் எனக்கு உதவி செய்ய முடியாது,'' என்று சலிப்புடன் சொன்னான்.
''உமக்கு என்ன கொடுமை நடந்தது? சொல். என்னாலான உதவி செய்கிறேன். உனக்கும் ஆறுதலாக இருக்கும்,'' என்றான் செல்லப்பன்.
''ஐயா! இந்தப் ஊர்ப் பண்ணையாரிடம் சென்றேன். வேலை தேடி இந்த ஊருக்கு வந்தேன். ஏதேனும் வேலை தாருங்கள்,'' என்று வேண்டினேன்.
''நல்ல இடத்திற்குத்தான் வந்துள்ளாய். எனக்கும் ஒரு வேலையாள் தேவைப்படுகிறது. நல்ல ஊதியம் தருவேன். ஆனால்...'' என்று தயக்கத்துடன் சொன்னார் அவர்.
''எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள். நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அப்படி நடந்து கொள்வேன்,'' என்றேன்.
''நீ என்னிடம் மூன்று மாதம் வேலை செய்ய வேண்டும். மாதத்திற்குப் பத்து பணம் கூலி. உனக்கு முப்பது பணம் கிடைக்கும். நான் என்ன சொன்னாலும் நீ செய்து முடிக்க வேண்டும். உன்னால் செய்ய முடியாத ஒவ்வொரு வேலைக்கும் பத்துப் பணம் குறைத்துக் கொள்வேன்,'' என்றார் அவர்.
அவரின் சூழ்ச்சியை நான் அறியவில்லை.
''நீங்கள் என்ன சொன்னாலும் செய்து முடிக்கிறேன். இன்றே வேலையில் சேர்ந்து கொள்கிறேன்,'' என்றேன்.
அவரிடம் வேலைக்குச் சேர்ந்த நான், உண்மையாக உழைத்தேன். எனக்கு எந்தக் குறையும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டார் அவர்.
'மூன்று மாதங்கள் இன்றுடன் முடியப் போகிறது. முப்பது பணத்துடன் ஊருக்குச் செல்லப் போகிறேன்' என்ற மகிழ்ச்சியில் அவரிடம் சென்றேன்.
''ஐயா! மூன்று மாதங்கள் இன்றோடு நிறைவு பெறுகிறது. நீங்கள் சொன்ன முப்பது பணம் கூலியைக்கொடுங்கள். நான் ஊருக்குச் செல்கிறேன்,'' என்றேன்.
''இன்று மாலை வந்தால்தானே மூன்று மாதம் முடியும். அதற்குள் என்ன அவசரம்? உனக்கு மூன்று எளிய வேலைகள் வைக்கிறேன். அவற்றை முடித்து விட்டுக் கூலியை வாங்கிக் கொள்,'' என்றார்.
''முதல் வேலை என்ன? சொல்லுங்கள்,'' என்று கேட்டேன்.
''என் வீட்டு கூடத்து அறையில் விலை உயர்ந்த இரண்டு ஜாடிகள் உள்ளன. ஒன்று பெரிய ஜாடி; இன்னொன்று சிறிய ஜாடி. கலை வேலைப்பாடுகள் நிறைந்த அந்தச் ஜாடிகளை நீ பார்த்து இருப்பாய்.
''அந்தச் சிறிய ஜாடிக்குள் பெரிய ஜாடியை நீ வைக்க வேண்டும். இது தான் நீ செய்ய வேண்டிய முதல் வேலை,'' என்றார்.
அதிர்ச்சி அடைந்த நான், ''ஐயா! சிறிய ஜாடிக்குள் பெரிய ஜாடியை எப்படி வைக்க முடியும்? யாராலும் செய்ய இயலாததைச் செய்யச் சொல்கிறீர்களே,'' என்று கேட்டேன்.
''செய்ய முடியுமா? முடியாதா? என்பதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. உன்னால் முடியாவிட்டால், கூலியில் பத்துப் பணத்தைக் குறைத்துக் கொள்வேன்,'' என்றார்.
பத்துப் பணம் போய் விட்டது. இருபது பணமாவது கிடைக்காதா... என்று நினைத்தேன்.
''நான் செய்ய வேண்டிய இரண்டாவது, வேலை என்ன?'' என்று கேட்டேன்.
''அந்தப் பெரிய அறைக்குள் ஈர நெல் கொட்டி வைக்கப்பட்டு உள்ளது. நீ அங்கிருந்து நெல்லை வெளியே எடுத்துக் கொட்டக் கூடாது. எல்லாவற்றையும் காய வைக்க வேண்டும்,'' என்றார் அவர்.
''ஈர நெல்லை வெளியே எடுத்துச் செல்லாமல் எப்படிக் காய வைக்க முடியும்? நீங்களே சொல்லுங்கள்,'' என்று கோபத்துடன் கேட்டேன்.
''அதெல்லாம் எனக்குத் தெரியாது. நான் என்ன சொன்னேனோ அதை நீ செய்ய வேண்டும்,'' என்றார் அவர்.
இருபது பணம் போய் விட்டது. பத்துப் பணமாவது கிடைக்காதா என்ற நப்பாசை எனக்கு ஏற்பட்டது.
''மூன்றாவது வேலை என்ன?'' என்று சலிப்புடன் கேட்டேன்.
''இந்த வேலை மிக எளிய வேலை. என் தலையின் எடையை மட்டும் நீ சரியாகச் சொல்ல வேண்டும்,'' என்றார் அவர்.
''ஐயா! உங்கள் தலையின் எடையை மட்டும் எப்படிச் சொல்ல முடியும்? யாராலும் முடியாதே. உங்களிடம் உண்மையாக உழைத்தேனே. என்னிடம் இரக்கம் காட்டுங்கள்,'' என்று கெஞ்சினேன்.
''நான் சொன்ன மூன்று வேலைகளை உன்னால் செய்ய முடியவில்லை. உனக்கு தர வேண்டிய முப்பது பணத்தை நான் தர வேண்டுமா? நீ இங்கே கெஞ்சுவதாலோ, அழுவதாலோ எந்தப் பயனும் இல்லை. என்னிடம் இரக்கத்தை எதிர்பார்க்காதே,'' என்று கண்டிப்புடன் சொன்னார்.
''அந்த ஊர்ப் பெரியவர்களிடம் சென்று முறையிட்டேன். என் மீது இரக்கப்பட்ட அவர்கள், 'அந்தக் கொடியவனிடம் நீ சிக்கலாமா?' இப்படித்தான் அவன் பலரை ஏமாற்றி இருக்கிறான். நாங்கள் அவனை விசாரித்தால் நான் ஒப்பந்தப்படிதான் நடந்து கொள்கிறேன். என் மீது எந்தத் தவறும் இல்லை என்று ஆணவத்தோடு பேசுவான். அவனை எங்களால் ஒன்றும் செய்ய முடியாது,'' என்றனர்.
''நான் ஏமாற்றத்துடன் திரும்பிக் கொண்டிருக்கிறேன்,'' என்றான் அவன்.
சிந்தனையில் ஆழ்ந்த செல்லப்பன், அந்தப் பண்ணையாரிடம் மூன்று மாதங்கள் உழைப்பது என்ற முடிவுக்கு வந்தான்.
''தம்பி! உன்னை ஏமாற்றிய அந்தப் பண்ணையாரை நான் பழிக்குப் பழி வாங்குவேன். வல்லவனுக்கு வல்லவன் இந்த வையகத்தில் உண்டு என்பதை அவனுக்குப் புரிய வைப்பேன். இனி அவன் யாரிடமும் இப்படி விளையாட மாட்டான்.
''மூன்று மாதத்திற்குப் பிறகு நீ இங்கே வா. அவரிடம் இழந்த பணத்தை என்னிடம் பெற்றுக் செல், '' என்றான் செல்லப்பன்.
''அப்படியே செய்கிறேன்,'' என்ற அவன் அங்கிருந்து புறப்பட்டான்.
பண்ணையாரைச் சந்தித்த செல்லப்பன், ''ஐயா! நான் வெளியூர். வேலை தேடி இங்கே வந்தேன்,'' என்று பணிவாகச் சொன்னான்.
'ஏமாளிகளுக்கு இந்த உலகில் பஞ்சமே இல்லை. ஒருவன் போனால், ஒருவன் வருகிறான். இவனையும் ஏமாற்றி வேலை வாங்க வேண்டும்' என்று நினைத்தார் அவர்.
''உன்னைப் போல ஒரு வேலையாள் எனக்குத் தேவை. நீ என்னிடம் மூன்று மாதங்கள் வேலை செய். ஒவ்வொரு மாதத்திற்கும் பத்துப் பணம் என்று முப்பது பணம் கூலியாகத் தருகிறேன். நான் சொல்லும் வேலையில் ஒன்றையும் செய்யத் தவறக் கூடாது. அப்படித் தவறினால் ஒவ்வொரு வேலைக்கும் பத்துப் பணம் குறைத்துக் கொள்வேன். இதற்கு நீ ஒப்புக் கொண்டால் என்னிடம் வேலை பார்க்கலாம்,'' என்று இனிமையாகப் பேசினார் பண்ணையார்.
''நீங்கள் என்னை ஏமாற்றவா போகிறீர்கள்? நான் இன்றே வேலையில் சேர்ந்து விடுகிறேன்,'' என்று வேலையில் சேர்ந்தான் செல்லப்பன்.
அவர் சொல்லும் வேலைகளை எல்லாம் ஒழுங்காகச் செய்து முடித்தான்.
தொண்ணூறாவது நாள் வந்தது.
அவனை அழைத்த பண்ணையார், ''இன்று மாலை வந்தால் நீ வேலையில் சேர்ந்து மூன்று மாதங்கள் ஆகின்றன. இன்று உனக்கு எளிய வேலைகள் மூன்றைத் தருவேன். அவற்றைச் செய்து முடித்துவிட்டு, முப்பது பணம் பெற்றுக்கொள். மகிழ்ச்சியாக உன் ஊர் புறப்படு,'' என்றார்.
'இதற்காகத்தானே காத்திருந்தேன். நீ என்னிடம் படப் போகும் துன்பத்தைப் பார்' என்று உள்ளுக்குள் கறுவினான் செல்லப்பன்.
- தொடரும்.