PUBLISHED ON : மார் 04, 2011

பல ஆண்டுகளாக மழை இல்லாத காரணத்தால் கடும் வறட்சி ஏற்பட்டது. ஒரு காட்டில் வாழ்ந்து வந்த நாகபாம்பு ஒன்று குடிப்பதற்கு ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லாமல், தவியாய்த் தவித்துக் கொண்டிருந்தது. அயல் கிராமத்திற்கு அந்த நாகபாம்பு சென்றதும் அங்குள்ள ஒரு வீட்டுக்குள் நுழைந்தது.
அங்கே பெரிய பாத்திரத்தில் உள்ள தண்ணீரில் ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. குழந்தையின் தாய் வீட்டில் இல்லை. அந்த வீட்டுக்குச் சென்ற நாகபாம்பு, பாத்திரத்தில் உள்ள தண்ணீரைக் குடித்தது. அப்போது அந்தக் குழந்தை, தண்ணீரை குடித்துக் கொண்டிருந்த பாம்பின் தலையில் ஒரு தேங்காய்ச் சிரட்டையினால் தண்ணீரை அள்ளி ஊற்றியது.
அத்துடன் அது தனது கையாலும், காலாலும் பாம்பை அடித்து விளையாடியது. பாம்பு குழந்தையை ஒன்றும் செய்யவில்லை. அது வயிறு நிறையத் தண்ணீரைக் குடித்து விட்டுச் சென்றுவிட்டது. இப்படியாக தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் பாம்பு அந்த வீட்டுக்குச் சென்று தண்ணீர் குடித்துவிட்டு வந்தது.
ஒருநாள் ஒரு விரியன் பாம்பு நாகபாம்பைச் சந்தித்தது.
''நண்பனே! நீ எங்கே சென்று தண்ணீர் குடித்தாய்?'' என்று நாகத்தைப் பார்த்துக் கேட்டது விரியன்.
''நான் எங்கும் தண்ணீர் குடிக்கவில்லை. இந்த வறட்சிக் காலத்தில் தண்ணீர் எங்கே கிடைக்கப்போகிறது?'' என்று நாகம் கூறியது.
''நீ அப்படிச் சொல்லாதே நண்பா. நீ எங்கேயோ தண்ணீர் குடித்திருக்கிறாய். எங்கே குடித்தாய்? எனக்குச் சொல்லு!'' என்று விரியன் வற்புறுத்திக் கேட்டது.
நாகம் தொடர்ந்து சில நாட்கள் தான் தண்ணீர் குடித்த இடத்தைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. விரியன் பாம்பின் நச்சரிப்புத் தாங்க முடியாமல், இறுதியில் அந்த இடத்தைப் பற்றிக் கூறியது நாகம்.
''நான் அந்த வீட்டுக்குச் சென்றேன். அங்கு ஒரு குழந்தை ஒரு பெரிய பாத்திரத்தில் உள்ள தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்தது. நான் மெதுவாகச் சென்று தண்ணீர் குடித்தேன். குழந்தை என் தலையில் தண்ணீரைக் கொட்டியது.
''அது தன் கை, காலால் என்னை அடித்தது. நான் குழந்தையை ஒன்றும் செய்யவில்லை. தண்ணீரைக் குடித்துவிட்டு வந்துவிட்டேன். அதைப் போல நீயும் அங்கே போய் தண்ணீர் குடித்துவிட்டு வா. ஆனால், குழந்தைக்கு ஒரு கெடுதியும் செய்து விடாதே!'' என்று கூறியது நாகம்.
விரியன் பாம்பை அந்த வீட்டுக்கு அனுப்பி விட்டு, அதன் பின்னால் சென்று நாகம் மறைந்திருந்தது. விரியன் அந்த வீட்டுக்குச் சென்று தண்ணீர் குடிக்க ஆரம்பித்தது. பாம்பின் தலையில் குழந்தை நீரைக் கொட்டியது. தன் கையாலும், காலாலும் பாம்பை அடித்தது. வயிறு நிறையத் தண்ணீரைக் குடிக்கும் வரை விரியன் குழந்தையை ஒன்றும் செய்யவில்லை. தண்ணீர் குடித்து முடித்த பின், விரியன் குழந்தையின் தலையில் கடித்தது. குழந்தை மயங்கி விழுந்தது.
நாகம் உடனே ஓடிச் சென்று குழந்தையின் தலையில் உள்ள விஷத்தை உறிஞ்சி எடுத்தது. குழந்தைக்கு உணர்வு திரும்பியது. நாகம் விரியன் பாம்பைத் துரத்திச் சென்று, ''துரோகியே! நீ உயிரோடு இருக்கக் கூடாது!'' என்று கூறிக் கொண்டே அதனைக் கடித்துச் சாகடித்தது.
அன்று முதல் விரியனும், நாகமும் ஒருவருக்கொருவர் பரம எதிரியாக இருந்து வருகின்றனர்.
***
