தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/தத்துவ ஞானியிடம் ஒரு கேள்வி!

தத்துவ ஞானியிடம் ஒரு கேள்வி!

தத்துவ ஞானியிடம் ஒரு கேள்வி!


PUBLISHED ON : மார் 04, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 04, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒருவர் தத்துவ அறிஞர் என்றாலே மக்கள் அவரிடம் பயம் கலந்த மரியாதையை வெளிப்படுத்துவது வழக்கம். ஆனாலும் குறும்புக்காரர்கள் எங்கேயும் உண்டுதானே. அவர்களுக்குத் தத்துவ அறிஞர்களைக் கேலி செய்தே பழக்கம். அந்த அறிஞர்கள் திருப்பித் தாக்க மாட்டார்கள் என்று தைரியம்.

ஆனால், பிரியதர்சன் வித்தியாசமான தத்துவ அறிஞராக விளங்கினார். வாழ்க்கையைப் பற்றிய அவருடைய கருத்துகள் யதார்த்த நிலைக்கு பொருந்திவந்தன.

'காற்று வராவிட்டால் என்ன செய்வது?' என்று வேறு தத்துவ அறிஞரிடம் கேட்டால், காற்றின் தோற்றம் இயல்பு வகை பற்றியும், காற்றுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பைப் பற்றியும் மணிக்கணக்கில் பேசுவார். ஆனால், பிரியதர்சனோ, 'காற்று வராவிட்டால் கதவைத் திற!' என்று எளிமையாக நடைமுறைத் தீர்வைச் சொல்லிவிடுவார்.

'எதிலும் எளிய வழி ஒன்று இருக்கும்போது சிக்கலான உயர்ந்த பாதையில் சிரமப்படுவதேன்?' என்று பித்தாகோரஸ் கூறியதை பிரியதர்சன் பின்பற்றி வந்தார்.

அவரிடம் யாரும் எந்தக் கேள்வியும் கேட்கலாம். எந்தக் கேள்விக்கும் அவர் பதில் கூறிவிடுவார். ஒருமுறை ஒரு குறும்புக்காரப் போக்கிரி, பிரியதர்சனிடம் முட்டாள்தனமாக சில கேள்விகளைக் கேட்டுச் சீண்டிப்பார்க்க விரும்பினான். அவன் தன்னைப் போன்ற சில குறும்புக்காரர்களையும், உதவாக்கரைகளையும், ஊர்சுற்றிகளையும் கூட்டமாக அழைத்துக் கொண்டு அவரிடம் வந்தான்.

தன் முட்டாள்தனமான கேள்விகளுக்குப் பதில் கூற முடியாமல், அவர் திணறும் போது கைகொட்டிச் சிரித்து அவரை அவமானப்படுத்துவதற்காகத்தான் அவர்களை திரட்டி வந்தான். அந்தக் குறும்புக்காரன் பிரியதர்சனைச் சந்தித்துப் போலிப் பணிவுடன் வணங்கினான்.

''ஐயா! எனக்கு சில சந்தேகங்கள் இருக்கு. சில விஷயங்கள் புரியலை. தங்களால் பதில் கூற இயலுமா?'' என்று நல்லவன் போல் நடித்தபடி கேட்டான்.

பிரியதர்சன் புன்முறுவல் செய்தார்.

''கேளப்பனே, உன் சங்தேகங்களை தைரியமாகக் கேள். கேள்வி கேட்டால்தான் அறிவு வளரும்; வாழ்க்கை புரியும். ஆதி தத்துவ அறிஞரான சாக்ரடீசும் கேள்வி மேல் கேள்வி கேட்கச் சொல்கிறார். இன்றைய தத்துவ எழுத்தாளர் ராபின் சர்மாவின் கருத்தும் அதுவே!''

குறும்புக்காரன் சொன்னான்.

''மரியாதைக்குரிய ஐயா! தங்களுக்கு நாய்னா என்னன்னு தெரியும்னு நம்புறேன். அது அடிக்கடி தன்னோட வாலை ஆட்டிக்கிட்டே இருக்கிறதையும் பார்த்திருப்பீங்க. நாய் ஏன் வாலை ஆட்டுதுங்கிறது எனக்கு புரிய மாட்டேங்குது. உங்களுக்கு தெரிஞ்சா தயவுசெஞ்சு எனக்கு புரியும்படியா சொல்லுங்க. ஐயா!''

கேள்வி கேட்டவன் ஒரு குறும்புக்காரப் போக்கிரி என்பதை பிரியதர்சன் புரிந்துகொண்டார். வேறு அறிஞராயிருந்தால், 'இந்த மாதிரியான முட்டாள் தனமான கேள்விகளுக்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது!' என்று மறுத்திருப்பார்.

உடனே அந்தப் போக்கிரி, 'இவ்வளவு சாதாரணக் கேள்விக்குக்கூட பதில் தெரியாத இவரெல்லாம் ஒரு அறிஞரா?' என்று தன் நண்பர்களுடன் சேர்ந்து நையாண்டி செய்திருப்பான்.

ஆகவே, பிரியதர்சன் தடுமாறாமல் பதற்றப்படாமல் சிரித்தபடி சொன்னார்.

''அப்பனே! அருமையான கேள்வி கேட்டாய். என் பதிலைக் கவனி. நாயின் உடல் கடினமானது. வாலோ எடை மிகவும் குறைவானது. கனமான பொருள்தானே கனமில்லாத பொருளை ஆட்ட முடியும்? ஆகவே, நாய் தன் வாலை ஆட்டுகிறது. இதற்கு மாறாக நாயின் வால் கனமாகவும், அதன் உடல் லேசாகவும் கடவுள் படைத்திருந்தால் அப்போது நாயின் வால் அதன் உடலை ஆட்டிக் கொண்டிருக்கும். வால் உடலில் படும்போதெல்லாம் காயம் ஏற்பட்டிருக்கும்!''

குறும்புக்காரப் போக்கிரி, இந்த அறிஞர் லேசுப்பட்டவர் இல்லை என்பதை உணர்ந்துக் கொண்டான். ஆனாலும், அவன் விடவில்லை. அடுத்த கேள்வி கேட்டான்.

''ஐயா! உங்களைப் பார்க்கிறப்போ எனக்கு இன்னொரு கேள்வி தோணுது. உங்க தோற்றத்தை குறை சொல்றதா தப்பா நினைக்காதீங்க. உங்க தலைமுடி முழுசும் வெள்ளியா நரைச்சிடுச்சு. ஆனா உங்களுக்கு இருக்கிற தாடியோ இன்னும் கறுப்பாவே இருக்குதே. ரெண்டும் ஒரே முகத்திலதானே மேலே கீழேன்னு இருக்கு. அதனால நான் கேக்கிற கேள்வி இதுதான். மனுஷனோட தாடி கறுப்பா இருக்கும் போதே அதை முந்திக்கிட்டு அவனோட தலைமுடி ஏன் வெள்ளையாயிடுது?''

பிரியதர்சன் மெல்ல நகைத்தார். தமது கறுப்புத் தாடியைப் பாசத்துடன் வருடியபடி பதில் சொன்னார். ''பேஷ் பேஷ் உன் கேள்விகள் நன்று. உன் முதல் கேள்வி ஒரு பொருளின் எடை அதை எப்படிப் பாதிக்கும் என்பதைப் பற்றியது. உன் இரண்டாம் கேள்வி காலத்தின் பாதிப்பைப் பற்றியதாக உள்ளது.

''நான் இந்த உலகத்தில் குழந்தையாக நுழையும்போதே எனக்குத் தலையில் முடி வளர்ந்து இருந்தது. ஆனால், முகவாயோ பளிங்கு போல் வழவழப்பாக இருந்தது. பிறந்து சுமார் இருபது ஆண்டுகளான போதுதான் தாடி தோன்றியது. இப்போது என் வயது அறுபது. ஆகவே, என் தலைமுடிக்கும் வயது அறுபது ஆகிறது. ஆனால், என் தாடிக்கு வயதோ நாற்பதுதான். தாடியைவிட இருபது ஆண்டுகள் அதிக வயதானதால்தான் என் தலைமுடி முதலில் நரைத்து விட்டது!''

பிரியதர்சன் முடி நிறம் இழப்பதற்கான விஞ்ஞான காரணத்தை வேண்டுமென்றே எடுத்துச் சொல்லவில்லை. 'உடலில் மெலனின் என்றொரு நிறமி சுரக்கிறது. அது தோல், கண், முடி முதலியவற்றிற்குக் குறிப்பிட்ட நிறம் தருகிறது. அதன் ஆற்றலைப் பொறுத்தே முடியின் நிறம் மாறுகிறது' இதையெல்லாம் அந்தக் குறும்புக்காரனுக்கு விளக்குவது வீண் செயல் என அறிஞர் கருதினார்.

அந்தப் போக்கிரி தன் இடக்கான கேள்விகளால் அறிஞரை மடக்க முடியாது என்பதைப் புரிந்து கொண்டான். எனினும் துடுக்காக மூன்றாம் கேள்வியைக் கேட்டான்.

''கடல் நீர் ஏன் ஐயா வாயில் வைக்க முடியாதபடி உப்புக் கரிக்குது?''

இந்தக் கேள்விக்கான அறிவியல் பூர்வமான பதில் பிரியதர்சனுக்குத் தெரிந்ததுதான். கடல்நீர் உப்புக் கரிக்கக் காரணம் அதில் 2.5 சதவீதம் உப்பு இருப்பதுதான். இந்த உப்பின் அளவு 8 முதல் 10 சதவீதம் இருந்தால் அது சாவுக் கடல் எனப்படுகிறது. அப்படி ஒரு கடல், ஜோர்டான் நாட்டில் உண்டு. இதையெல்லாம் சொன்னால் அந்தக் குறும்புக்காரன் மூளையில் ஏறாது என்று அறிஞருக்குத் தெரியும். சதவீதம் என்றால் என்ன என்பதுகூட அவனுக்குத் தெரிந்திருக்காது. பிரியதர்சன் புன்முறுவலுடன் சொன்னார்.

''நீ இப்போது கேட்ட கேள்வியைப் போல் ஓராயிரம் கேள்விகள் உள்ளன. உன் அடுத்த கேள்விகள் என்ன என்று சொல்லட்டுமா? 'கடலில் ஏன் அலை வீசுகிறது? பன்றிக்கு வால் எதற்கு? பூனைக்கு ஏன் மீசை உள்ளது? சீதைக்கு ராமன் சித்தப்பா உறவு தானே?' என்ற கேள்விகள்தானே?

''சரி, உன் மூன்றாம் கேள்விக்கு வருவோம். கடலில் இருக்கும் மீன் வகைகளின் மிக அதிக அளவில் இருப்பது ஹெர்ரிங் என்னும் நெத்திலி மீன்கள்தான். அவை இயற்கையாகவே உப்பு ருசி உடையவை. அவை கடலில் ஏராளமாக இருப்பதால்தான் கடல் தண்ணீர் உப்பாக இருக்கிறது!''

அறிஞரிடமிருந்து சுடச்சுட வந்த பதில்களைக் கேட்டு அந்தக் குறும்புக்காரன் திகைத்துப்போனான். காற்று நீங்கிய பலூன்போல் துவண்டான். அவன் அழைத்து வந்திருந்த உதவாக்கரை சிநேகிதர்கள் அவனையே ஏளனமாக பார்க்கத் தொடங்கினர்.

அந்தக் குறும்புக்காரன் இன்னொரு முயற்சி செய்யலாமென நினைத்து அடுத்த கேள்வியைக் கேட்க வாய் திறந்தான். பிரியதர்சன் இதற்கு மேலும் தனது நேரத்தையும், சக்தியையும் வீணாக்கிக் கொண்டிருக்க விரும்பவில்லை. சைகையால் அவனைத் தடுத்து அடக்கினார்.

''முட்டாளே! மட மன்னார்சாமி! உன் மூன்று கேள்விகளுக்கும் முடிந்தவரை பதில் சொன்னேன். மூன்று தலைமுறைக்கு அதுபோதும். முந்தரிக் கொட்டையாய் இன்னொரு கேள்வி எதற்கு? பெரியவங்களை மட்டம் தட்டணும்னு திமிர்பிடித்து அலையாதே. நாள் பூராவும் உனக்குப் பதில் சொல்லிக் கொண்டிருப்பதா என் வேலை? ஓடிப்போ உடனே. இல்லாவிடில் உதை வாங்குவாய் என்னிடம்!'' என்று சீறினார்.

பின்னங்கால்களின் நடுவே வாலை சுருட்டிக் கொண்டு பயந்து ஓடும் நாயைப்போல், அந்தக் குறும்புக்காரன் வாயைப் பொத்திக்கொண்டு அந்த இடத்தைவிட்டு அகன்றான். அறிஞரைக் கேலி செய்ய வந்த கூட்டம் கைதட்டி அவரைப் பாராட்டியது. ***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us